Last Updated : 05 Jun, 2016 03:03 PM

 

Published : 05 Jun 2016 03:03 PM
Last Updated : 05 Jun 2016 03:03 PM

ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்: மேற்கின் முனையில் ஒற்றுமை முளைக்கட்டும்

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ சாலைகளில் இருசக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம்வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

“என்றைக்கு ஒரு பெண் எவ்வித அச்சமும் இன்றி, இரவில் தனியாக இந்தியச் சாலைகளில் சுதந்திரமாக வலம்வருகிறாளோ அன்றைக்குத்தான் இந்தியாவுக்கு உண்மையாகவே விடுதலை கிடைத்திருக்கிறது என ஏற்றுக்கொள்வேன்” என பெண் விடுதலையைக் கனவு கண்டவர் காந்தி. மகாராஷ்டிரத்திலிருந்து மகாத்மா பிறந்த மாநிலம் நோக்கி, அடர்காடுகளையும், மலையும் தாண்டித் தனியாகப் பறக்கிறேன்.

வளர்ச்சியின் கனவில் சிதைந்த கிராம‌ங்கள்

குஜராத்தின் கிராமங்களில் பயணித்தேன். பசுமையாகக் காட்சியளிக்கும் மலைக்கிராமங்களில் வாழையும், பருப்பு பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்பட்டிருக்கின்றன. அரபிக்கடல் அலையும், பரந்திருக்கும் பசுமை வெளியையும் பார்க்கையில் கேரளத்தில் பயணிப்பது போல இருந்தது. சொங்கத் என்ற இடத்தை அடைந்தபோது மலையுச்சியில் பழமையான கோட்டை கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. கிபி 1729-ம் ஆண்டும் மராத்திய மன்னன் பில்லாஜி ராவ் கெய்க்வாட், தனது வானுயர்ந்த புகழை எதிரிகளுக்குக் காட்டும் வகையில் இந்தக் கோட்டையைக் கட்டியதாகச் சொன்னார்கள்.

மகாராஷ்டிர -குஜராத் எல்லையில் அமைந்திருக்கும் அடர்ந்த சப்தாரா வனப் பகுதிக்குள் நுழைந்தேன். உயரமான மரங்களும், சிறுசிறு ஓடைகளும் நிறைந்த இந்த வனத்தில் நிறைய அருவிகள் இருக்கின்றன. ஆங்காங்கே பழங்குடியினரின் தெய்வங்க‌ளும், சிறிய கோயில்களும் உள்ளன. அங்கிருந்து வெளியே வந்த சில கிலோ மீட்டர்களில் அதிர்ச்சியூட்டும் வறண்ட கிராமங்களை பார்க்க முடிந்தது. விவசாய நிலங்கள் வெடித்துக் கிடக்கின்றன. ஆடு, மாடுகள் மேயக்கூடத் துளி பச்சை இல்லை. குடிக்கவே நீர் இல்லாத இந்தக் கிராமங்களில் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளின் கட்டுமானப் பணிகள் வேகமாக நட‌ந்துக்கொண்டிருந்தன. இந்திய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த வல்சாத் கிராம‌ம்,தன் பசுமையை வளர்ச்சிக்குப் பறிகொடுத்திருக்கிறது. வல்சாத் மாபெரும் தொழில் நகரமாக உருமாறிவருவதால், அந்த மண்ணின் மைந்தர்கள் ஊரை விட்டு ஒதுக்குப்புறங்களுக்குத் துரத்தப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் விளையாட்டில் தோற்கும் வீரர்கள்

மொரார்ஜியின் மண்ணில் அன்றிரவு உறங்கிவிட்டு, மறுநாள் அதிகாலையில் ராஜ்பிளே நகரை நோக்கிப் பயணித்தேன். நர்மதா நதிக்கரையோரமாக இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிப்பது ஏகாந்தமாக இருந்தது. நர்மதா நதியின் பாசனத்தால் தென்னை, நெல், வாழை, துவரை, உளுந்து உள்ளிட்ட‌ பயிர்கள் செழித்து நிற்கின்றன. இங்கு விளையும் பருப்பு வகைகளுக்கு வளைகுடா நாடுகளில் நல்ல மவுசு இருப்பதாக விவசாயிகள் சொன்னார்கள். ராஜ்பிளேவை கடந்து ராஜ்வந்த் அரண்மனைக்குச் சென்றேன். அங்கிருந்த சி.பி. உடற்கல்வி கல்லூரி மாணவர்கள் என்னை உற்சாகமாக வரவேற்றனர். நீச்சல், ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என விளையாட்டுத் துறையில் அந்த மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகளை கேட்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. தொடர் வெற்றிகளைக் குவிக்கும் இந்த எளிய வீரர்களை, விளையாட்டுத் துறையில் புரையோடிக் கிடக்கும் 'அரசியல்' சாதாரணமாகத் தோற்கடித்துவிடுகிறது.

ராஜ்வந்த் அரண்மனையின் அழகை ரசித்துவிட்டு, நர்மதா நதியின் குறுக்கே அமைந்துள்ள மிகப் பெரிய அணையான சர்தார் சரோவருக்குச் சென்றேன். 1961-ல் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய இந்த அணை 163 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. மிக அழகான பூங்கா, நீர் விளையாட்டு சாகசங்கள், மின் அலங்காரங்கள் என சர்தார் சரோவர் அணையைக் காண ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கின்றனர். அங்கு மதிய உணவை முடித்துவிட்டு, குஜராத்தின் மிகப் பெரும் நகரான அகமதாபாதுக்குச் சென்றேன்.

பரந்து விரிந்திருக்கும் தொழிற்சாலைகள், வானுயர் கட்டிடட‌ங்கள், நெருக்கடியில் திணறும் குடியிருப்புகள், கடும் போக்குவரத்து நெரிசல் என அகமதாபாத் அதகளமாகக் காட்சியளிக்கிறது. தகிக்கும் வெயிலில் இந்தியாவின் கடைசி மேற்கு முனையான நாராயண் சரோவருக்கு மைக்கியை விரட்டினேன். இந்துக்களின் 5 புண்ணிய‌ ஏரிகளுள் ஒன்றான நாரயண் சரோவர் ஏரி இங்குள்ளது.

ஆச்சர்யமூட்டும் ஆன்மீகத் தலங்கள்

நாராயண் சரோவரில் வணங்கிவிட்டு மற்றொரு ஆன்மிகத் தலமான சோமநாதர் கோயில் நோக்கிப் பறந்தேன். பல்வேறு படையெடுப்புகளையும், இயற்கைச் சீற்றங்களையும் தாண்டி இன்னும் சோமநாதர் கோயில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. தொன்மையான இந்தக் கோயிலில் சோமநாதர் சிவபெருமான் சூரியனைப் போல பிரகாசத்துடன் வீற்றிருப்பதாக ஸ்கந்த புராணம் சொல்கிறது. பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி, சரியாக 7 மணிக்கு ஆரத்தி நேரத்தில் உள்ளே நுழைந்தேன். சாளுக்கியர் கட்டிடக் கலை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் பிரமிடு வடிவத்தில் உள்ளது. எனது பயணம் வெற்றிபெற வேண்டி, சோமநாதருக்குச் சிறப்பு பூஜையும் செய்தேன். கோயிலைச் சுற்றி வரும் பல ஊர் பக்தர்கள் எழுப்பும் ‘ஜெய் சோம்நாத்' கோஷம் விண்ணைப் பிளக்கிறது.

அன்றிரவு சோமநாதர் கோயில் விடுதியில் உறங்கிவிட்டு, அதிகாலையில் வீரவல் கடற்கரை வழியாக துவாரகை கோயிலுக்குச் சென்றேன். அரபிக் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் துவாரகை கோயில் அதிகாலை அற்புதமாக காட்சியளித்தது. அங்கிருந்து ஒக்ஹா கடற்கரை நோக்கி செல்லும்போது ‘ஃப்ளையிங் ஸ்க்வாட்' மோட்டார் பைக் கிளப் உறுப்பினர்களைப் பார்த்தேன். எனது பயணத்தைப் பற்றிச் செய்தித்தாள்களில் படித்திருப்பதாகக் கூறினார்கள். மதிய உணவை அவர்களுடன் சேர்ந்து அருந்தினேன். எனது பயணம் வெற்றி பெற வாழ்த்திய ‘ஃப்ளையிங் ஸ்க்வாட்' மோட்டார் பைக் கிளப் உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்றேன். அந்தி சாயும் வேளையில் ஒக்ஹா கடற்கரையில் அமைந்திருந்த கோடீஸ்வர் கோயில் ரம்மியமாகக் காட்சியளித்தது.

சமத்துவம் விதைப்போம்

குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றியதில் ஒரு பேருண்மையைக் கண்டுகொண்டேன். புவியியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் காலங்காலமாகக் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். சாதி, மத, பண்பாட்டுப் பிரிவினைகள் யாவும், 1891 மற்றும் 2001-ல் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போயிருக்கின்றன. ஆனால், சுயநல சூழ்ச்சியாளர்களின் மூளையில் உதித்த விஷம் கோத்ராவில் கொழுந்துவிட்டு எரிந்தது. அதற்கு அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் எண்ணெய் வார்த்து வெறியூட்டினார்கள்.

இதன் விளைவாக இந்தியாவின் மேற்குப் பகுதி இன்று சிறுபான்மையினருக்கு அச்சமூட்டும் பகுதியாக மாறியிருக்கிறது. குடியிருப்பு வாரியாக மட்டுமல்ல; மனங்களிலும் மக்கள் பிளவுண்டு கிடக்கிறார்கள். இஸ்லாமியர்களின் உணவு விடுதிகளில் இந்துக்கள் நுழைவதில்லை. இந்துக்களின் நிறுவனங்களில் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு வேலை கொடுப்பதில்லை. ஆனால் வளர்ச்சி நோக்கிப் பயணிப்பதாக விவேகானந்தர் ஸ்டைலில் நரேந்திர மோடி வழியெங்கும் பேனர்களில் புன்னகைக்கிறார். மீதமிருக்கும் இடங்க‌ளில் கோல்வல்கரும், சாவர்க்கரும், அமித் ஷாவும் நிரம்பி வழிகிறார்கள். திரும்பும் திசையெல்லாம் அகன்று பறக்கும் காவிக் கொடி எளியோரை எச்சரிக்கும் தொனியில் சீறுகிற‌து.

இந்தியாவின் தேசப் பிதா காந்தியின் குடும்பமும், பாகிஸ்தானின் தேசப் பிதா ஜின்னாவின் குடும்பமும் சுமுகமாக வாழ்ந்தது இந்த குஜராத் மண்ணில்தான். மகாத்மா பிறந்த மண் இன்று, மதச் சண்டையின் கூடரமாக மாறிப் போனது வரலாற்றின் பேரவலம். இனி வரும் காலங்களில் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கட்டும். பிரிவினை நீங்கி ஒற்றுமை ஓங்கட்டும்!

சமூகம் இருள் மண்டிக் கிடக்கையில், தனியாக ஒரு பெண் இரவில் சுதந்திரமாகச் சாலையில் நடந்து செல்வது என்பது பகல் கனவே!

(பயணம் தொடரும்), தொகுப்பு: இரா.வினோத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x