Last Updated : 11 Mar, 2014 04:03 PM

Published : 11 Mar 2014 04:03 PM
Last Updated : 11 Mar 2014 04:03 PM

வாழ்வியலும் உணவும் தொலைந்ததால் அல்லல்படும் பெண்கள்

எனது மனைவிக்கு (gal blader polyp) பித்தப் பையின் மேற்புறத்தில் பாலிப் உள்ளது. மருத்துவர்கள் சிலர் அறுவைசிகிச்சை செய்து பித்தப்பையை அகற்ற வேண்டும் என்றும் சிலர் சிகிச்சையே தேவையில்லை என்றும் கூறுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். தங்கள் ஆலோசனையைக் கூறவும்.

- ராஜகோபாலன், நெய்வேலி.

பித்தப்பையில் பாலிப்புகள் தோன்றுவது, மற்ற நோய்களுக்காக வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்யப்படும்போதுதான் பெரும்பாலும் தெரியவருகிறது. இந்தப் பாலிப்புகள் பெரும்பாலும் பிரச்சினை தராத, மிகக் குறுகிய வளர்ச்சியாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கிறது.

அப்படியிருக்கும்பட்சத்தில் அறுவைசிகிச்சை தேவையற்றதுதான். ஆனால், சில நேரங்களில், அதுவும் குறிப்பாக 1 செ.மீக்கு மேலான அளவில் பாலிப்புகள் இருக்கும்போதும், கற்களுடன் சேர்ந்து இருக்கும்போதும் அதில் அக்கறைகாட்டுவது அத்தியாவசியமாகிறது. இந்தப் பாலிப்புகள் உருவாவதற்குக் கொழுப்பு படிதல், செல்லுலோஸ் படிவு முதல் இயல்பான செல் பெருக்கம் வரை பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

உங்கள் மனைவிக்கு 1 செ.மீக்கு குறைவாகப் பாலிப் இருக்கும்பட்சத்தில், உணவில் கொழுப்பு உணவுகளை, குறிப்பாய் நெய், இறைச்சி முதலான விலங்குக் கொழுப்புகளைச் சில காலம் தவிர்த்துவிடலாம். அதிக நார்ச்சத்துள்ள பழங்களை ஒருவேளை உணவாகத் தொடர்ந்து ஒரு மாதக் காலத்துக்கு எடுக்கலாம்.

சித்த மருத்துவப் புரிதல்படி, பித்தச் சீர்கேட்டால் வரும் மாற்றமாக இது அணுகப்படுகிறது. அதனால், பித்தத்தைச் சீராக்கும் சீரகத் தண்ணீர் அருந்துவது, காலையில் இஞ்சி தேனூறல் சாப்பிடுவது, நாளடைவில் பாலிப் பெருகாமல் இருக்க உதவும். கரிசலாங்கண்ணிக் கீரை வெந்தயக் கீரை, கீழா நெல்லிக் கீரை போன்றவை பித்தத்தைச் சீராக்கும் சிறந்த கீரைகள். இவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது.

எண்ணெய் குளியல், சரியான நேரத்தில் பசித்துப் புசிக்கும் பழக்கம், சரியான இரவு உறக்கம், சீதளி பிராணாயாம மூச்சுப் பயிற்சி போன்றவை, இது போன்ற பாலிப்புகள் ஏற்படாதிருக்க, பித்தத்தைச் சீராக்கும் நல்வாழ்வுச் சொத்துகள்.

அதே நேரம் பாலிப்புகள் உருவாகும் உடல்வாகு இருக்கிறதா எனப் பரிசோதிப்பதும்கூட மிக அவசியம். ஓரிடத்தில் பாலிப் வந்திருக்கும்பட்சத்தில், மலக்குடல், சிறுகுடல் பகுதியிலும் அவ்வாறே வருவதற்கு வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் கூடுதல் கவனத்துடன் ஆய்வுகள் அவசியப்படலாம்.

வெகு சிலருக்கு இப்படிப்பட்ட பாலிப்ப்புகள் புற்றாக இருக்க வாய்ப்புள்ளது என்பதாலும், குடும்ப நேரடி உறவுகளில் புற்றுநோயின் தாக்கம் இருக்கும் வரலாறு இருந்தாலோ, அதிக மனஅழுத்தம், வேறு நோய்க்கான நீடித்த வரலாறும், அதற்கான மருந்துகள் எடுக்கும் வரலாறும் இருந்தாலோ, உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்துத் தெளிவான நோய்க் கணிப்பைப் பெற்ற பின் சிகிச்சையைப் பற்றி முடிவு செய்யலாம்.

சி.ஈ.ஏ. (CARCINO EMBRYONIC ANTIGEN), சீஏ 19-9 முதலான புற்றுநோய்கள் இருக்கின்றனவா என்று அறியப் பயன்படும் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் இதற்கு உதவிடும்.

அதே நேரம், மருத்துவக் கட்டுரைகளைப் படித்து அதீதப் பயத்தை வளர்த்துக்கொள்வதும் ஆபத்துதான். இன்றைய இணையதளச் செய்திகள் அரைகுறைகளாகவோ, வணிகக் கண்ணிகளாகவோ இருக்கக்கூடும். விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ள மட்டும் இது போன்ற செய்திகளைப் படித்துக்கொண்டு, சிகிச்சை குறித்த முடிவைக் குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதலின்படி எடுத்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

எனது மகளுக்கு 19 வயது. மாதவிடாய் தொடங்கிய ஒரு வருடத்திலிருந்து தொடர்ந்து அவளது மாதவிடாய் அதிக ரத்தப்போக்குடனும், அதுவும் தொடர்ச்சியாக 26 நாள் வரை நிகழ்வதுமாக அவதியுறுகிறாள். ரத்தப்போக்கு நிற்க, கருத்தடைக்கான மாத்திரைகளை உட்கொண்டால் மட்டுமே மாதாமாதம் சீராகிறது. மருந்துகளை நிறுத்தினால் பழைய நிலைமையே மீண்டும். இப்படியே எத்தனை நாள்தான் செல்வது? அவளது ஹீமோகுளோபின் அளவு வேறு தற்போது 4.2. மட்டுமே இருக்கிறது. ஏதாவது வழி கூறுங்கள்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

முதலில் நீங்கள் துரிதமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் ரத்தச் சோகை. நீங்கள் கூறியுள்ள ஹீமோகுளோபின் அளவு நேரடியாக உடலில் ரத்தத்தை ஏற்றவேண்டிய சூழலில் இருப்பதாகவே சொல்கிறது. முதலில் அதைக் கவனிக்கவும். தேவைப்பட்டால் உங்கள் குடும்ப மருத்துவர் சொன்னால், உடனடி சிகிச்சையாக உடலில் ரத்தம் ஏற்றிக்கொள்ளவும்.

அதிக ரத்தப்போக்கால் ரத்தச் சோகை நிகழ்ந்து, பின் அந்த ரத்தச் சோகையால் மறுபடி அதிரத்தப்போக்கு நிகழும் சுழற்சி தொடர்வது இந்நோயில் நிகழும். அத்திப் பழம், வெந்தயம், முருங்கைக் கீரை, கம்பு முதலான உணவு வகைகள் இரும்பைப் படிப்படியாக ரத்தத்தில் உயர்த்திடும்.

மாதவிடாய்ச் சீராக இருக்க, ஹார்மோன் சுரப்பு சீராக இருப்பதும் கருப்பையின் உள்சுவர், சினைப்பை, சினை முட்டை எனப் பல விஷயங்கள் சீராக இருக்கவும் ஒன்றோடொன்று இயைந்து இயங்கவும் வேண்டும். இன்றைக்குப் பல பெண்களுக்கு இச்சீர்கேடு அதிகரிப்பதற்குச் சிறு வயது முதல் உணவில் அக்கறையின்றி இருப்பதும், வாழ்வியல் மாறிப்போனதும் மிக முக்கியமான காரணம்.

இப்போதும்கூட மருந்துகளை மட்டும் நம்பியிருக்காமல், உணவின் மீதும் அக்கறை செலுத்தவேண்டும். ஹார்மோன்களைச் சீராக்க இயற்கை உணவும் யோகா மூச்சுப் பயிற்சியும் அளிக்கும் பயன் சிறப்பானது. பாலை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, துவர்ப்புமிக்க நெல்லிக்கனி முதலான பழச்சாறுகளும், வாழைப்பூ முதலான காய்கறிகளும் மிகவும் அவசியம்.

அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசித்து ஒரு மாதவிடாய் சுழற்சியைத் தக்க மருந்துகள் மூலம் சீராக்கிவிட்டு, பின் சோற்றுக் கற்றாழை மடலுக்குள் உள்ள ஜெல் போன்ற சோற்றை எடுத்துப் பிசுபிசுப்பு தீரக் குழாய் நீரில் கழுவி, 10 கிராம் அளவுக்குக் காலையில் வெறும் வயிற்றில் 45 நாட்களுக்குச் சாப்பிடவும்.

வெந்தயத்தூள், வெங்காயம், பூண்டு, எள், உளுந்து முதலிய உணவு வகைகள் மாதவிடாயைச் சீராக்கும் உணவுகள். கருமுட்டையை வளர்க்க விஷ்ணுகிராந்தி இலை, அதிரத்தப்போக்கில் அடினோமயோசிஸ் முதலான நிலை இருந்தால் நொச்சி இலை, குறைவான ரத்தப்போக்கு இருந்தால் அசோகப்பட்டை கஷாயம் எனப் பல மூலிகைகள் அனுபவத்திலும் ஆய்விலும் அறியப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவ ஆலோசனை அடிப்படையில் பயன்படுத்தலாம்.

உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு

பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு. சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.

மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x