Last Updated : 10 Aug, 2016 10:56 AM

 

Published : 10 Aug 2016 10:56 AM
Last Updated : 10 Aug 2016 10:56 AM

இரு பலசாலிகளின் தினங்கள்!

காட்டு விலங்குகளிலேயே சிங்கமும், யானையும் மிகவும் பலசாலிகள். ஆனால், இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி உலக சிங்கம் தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விலங்குகளின் சில சுவாரசிய தகவல்களைப் பார்ப்போமா?

சிங்கம்

# சிங்கம் பகலில் பெரும்பாலும் தூங்கும். வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால் இரவில் வேட்டையாடவே விரும்பும். அதற்கேற்ப சிங்கத்தின் பார்வைத் திறன் கூர்மையாக இருக்கும்.

# காட்டின் ராஜா சிங்கம் என்று கதைகளில் கேட்டிருப்போம். உண்மையில் அடர்ந்த காடுகளைவிட புல்வெளி மற்றும் சமவெளி பகுதிகளிலேயே சிங்கம் வாழும்.

# பூனைகள் இனத்தைச் சேர்ந்தது சிங்கம். அந்த இனத்தின் 2-வது மிகப்பெரிய விலங்கு சிங்கம். (முதலிடத்தில் இருப்பது புலி)

# ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களில் முன்பு சிங்கங்கள் அதிகமாக இருந்தன. ஆனால், தற்போது ஆப்பிரிக்காவில் மட்டுமே குறிப்பிடுமளவுக்கு உள்ளன.

# குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

# சிங்கத்தின் தனிச்சிறப்பே அதன் கர்ஜனை. சில சமயம் பல மைல்கள் தாண்டியும் சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்கும்.

# சிங்கம் சிங்கிளாக வரும் என்று சொல்வதெல்லாம் தவறு. அது கூட்டத்துடனே வரும்.

# ஆணைவிட பெண் சிங்கங்களே அதிகம் இரை தேடிச் செல்லும்.

# பெல்ஜியம், பல்கேரியா, இங்கிலாந்து, எத்தியோப்பியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம்.

யானை

# நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு யானை. டைனோசர் காலத்திலிருந்தே வாழும் பழமையான விலங்கு.

# யானைக்கு பார்வைத்திறன் சுமார்தான். ஆனால், நுகரும் திறனும் கேட்கும் திறனும் அதிகம்.

# யானையின் மேல் உதடு, நீளமான மூக்கும் சேர்ந்ததே அதன் தும்பிக்கை. சுமார் 50 ஆயிரம் தசைகள் இணைந்தது தும்பிக்கை. தும்பிக்கையால் நீரைப் பீச்சியடிக்கவும், பாரம் தூக்கவும் முடியும்.

# யானைக்குத் தொடு திறனும் அதிகம். அதன் தோல் உணர்வுமிக்கதாக இருக்கும். யானையால் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான் மண்ணை வாரி உடல் மீது வீசி சமாளித்துக்கொள்கிறது.

# யானையால் குதிக்க முடியாது; ஆனால், குண்டு உடலை வைத்துக்கொண்டு அழகாக நீந்தும். நீந்தும்போது நீருக்கு மேலே தும்பிக்கையை நீட்டிக்கொண்டு சுவாசிக்கும்.

# உலகின் வாழும் யானைகளில் பெரும்பாலானவை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகளிலேயே வாழ்கின்றன.

# ஒரு வளர்ந்த யானை ஒரு நாளில் 210 லிட்டர் தண்ணீர் குடிக்கும். சுமார் 225 கிலோ உணவைச் சாப்பிடும். இதற்காக நீரையும், உணவையும் தேடி காட்டுக்குள் கூட்டம் கூட்டமாகப் போகும். இந்த வகையில்தான் காடுகளில் இயற்கையான பாதைகள் யானைகளால் அமைகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x