Published : 10 Sep 2016 10:58 AM
Last Updated : 10 Sep 2016 10:58 AM

கிழக்கில் விரியும் கிளைகள் 46: நம் தாவரங்களை ஏன் பிரபலப்படுத்த வேண்டும்?

கடந்த ஓராண்டாக ‘கிழக்கில் விரியும் கிளைகள்’ என்ற தொடர் மூலம் கிழக்குக் கடற்கரையோர, கிழக்கு மலைத்தொடர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள தமிழகப் பகுதியின் இயல் தாவரங்கள், மரங்கள் பற்றிய இலக்கிய, பண்பாட்டு, சமுதாய, மருத்துவ, பயன்பாட்டு முக்கியத்துவங்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன்.

தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ 800 இயல் மரங்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இவற்றில் ஏறத்தாழ 300 இயல் மரங்கள் மட்டுமே கி.பி. 15-ம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியத்திலும், கல்வெட்டுகளிலும், மருத்துவ ஏடுகளிலும், நிகண்டுகளிலும் சுட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தின் இயல் மரங்கள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அடையாளம் காண முடியாத 40

உண்மையில், இயல் மரங்களை அடையாளம் கண்டறிவதற்கு இலக்கியச் சான்றுகள் இன்றியமையாதவை. இவற்றில் பல மரங்கள் பண்டைய தமிழிலக்கியப் பெயர்களால் இன்றும் அழைக்கப்படுகின்றன என்றாலும், சில மரங்களின் பண்டைய தமிழ்ப் பெயர்கள் மட்டும் இன்றைக்கு வழக்கில் இல்லை. கிட்டத்தட்ட 40 மரங்களின் தமிழிலக்கியப் பெயர்களின் இன்றைய தமிழ்ப் பெயரையும் தாவரவியல் பெயரையும் இனங் கண்டறிய முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் இவற்றுக்கான இலக்கிய விவரிப்பு போதுமான அளவுக்கு இல்லை.

பல இலக்கியப் பெயர்கள் இன்று வழக்கொழிந்து இருக்கலாம், தாவரங்கள் அவற்றின் பெயரோடு அழிந்திருக்கலாம் அல்லது முந்தைய பெயர்கள் திரிந்து வேறு பெயர்களில் இன்று அழைக்கப்படலாம். சில தாவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் இன்று அழைக்கப்படுகின்றன. இது தொடர்பான விரிவான ஆய்வுகளைத் தாவரவியல் அறிஞர்களும் தமிழறிஞர்களும் ஒன்றிணைந்து உடனடியாக மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.

பிரபலம் தேவை

மற்றொரு உடனடி தேவை தமிழக இயல் மரங்கள் பற்றிய அறிவைத் தமிழக மக்களிடையே பரவலாக்க வேண்டும்; அவை உரிய அளவுக்குப் பிரபலப்படுத்த வேண்டும். அதேநேரம், இந்தக் கட்டுரைத் தொடரில் சில இயல் மரங்கள் பற்றி மட்டுமே என்னால் விவரிக்க முடிந்தது. இன்னும் விவரிக்கப்பட வேண்டிய, பிரபலப்படுத்த வேண்டிய சில முக்கிய மரங்கள்: அட்டி (எட்டி), அத்தவாகை, அதவம், அயலி, அழிஞ்சல், ஆ, ஆசினி, ஆர், ஆரம், குச்சி, இண்டு, இதழி, இலவு, ஈகை, ஈந்து, உகாய், உகிர், உசில், உடை, உண்ணம், எகின், எறுழம், ஒடு, ஓமை, கடு, கண்டல், கணிகாரம், கருங்காலி, கருவிளம், பசும்பிடி, சயுர், சிலை, சுரபுன்னை, சூரை, தான்றி, நொச்சி, பராய், பாதிரி, பாலை, புங்கு, மா, மாவிலங்கம், வன்னி, விடத்தேறு, விழுதி, வேல் போன்றவை.

தமிழக இயல் மரங்கள் பலவற்றின் எண்ணிக்கை பல்வேறு சூழலியல் காரணங்களால், அதிவேகமாகக் குறைந்துகொண்டே வருகின்றன. அதேநேரம் பல அயல் மரங்கள் அதிக அளவில் தமிழகத்தில் நுழைந்துவருகின்றன. தமிழகத்தின் இயல் மரங்கள் போர்க்கால அடிப்படையில், அவற்றின் இயல் திணைகளில் அதிக அளவில் வளர்க்கப்பட வேண்டும். அவற்றின் பண்பாட்டு பயன் உட்பட அனைத்துப் பயன்பாடுகளும் தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்தப்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். | தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x