

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜெ.இ.இ. எனப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மெயின் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என்று இரு தேர்வுகளை கொண்டது இந்த நுழைவுத்தேர்வு.
முதலில் மெயின் தேர்வும், அதில் வெற்றிபெறு வோருக்கு அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படுகிறது. தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (என்.ஐ.டி.) உள்ளிட்ட உயர் கல்லூரிகளில் சேர மெயின் தேர்வு மதிப்பெண் போதுமானது. ஆனால் ஐ.ஐ.டி. படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-வது கட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெறும்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. கல்லூரிகளில் சேர விரும்பும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் உள்பட அனைத்து விவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 26-ம் தேதி ஆகும். நுழைவுத்தேர்வு (மெயின்) ஆன்லைனில் இல்லாமல் சாதாரண தேர்வாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி அன்றும், ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 9, 11, 12, 19 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.