Last Updated : 24 Jun, 2017 11:59 AM

 

Published : 24 Jun 2017 11:59 AM
Last Updated : 24 Jun 2017 11:59 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 38: கைக்கொள்ள வேண்டிய பண்ணை உத்திகள்

குறிப்பாகப் பண்ணையில் உள்ள கூறுகளாகப் பின்வருபவற்றைக் காணலாம், கிணறு, பண்ணை வீடு, வேலி, தொழுவம், குளம் அல்லது பண்ணைக் குட்டை, மட்குத் திடல், வாய்க்கால் வரப்புகள், கால்நடைகள், மரங்கள், பயிர்கள் முதலியன.

நுட்பங்கள் என்று பார்த்தால் மண்ணை வளப்படுத்துதல், பாசன நுட்பங்கள், மட்கு செய்தல், மூடாக்கு செய்தல் முதலியன. விரகுகள் அல்லது உத்திகள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நுட்பத்தை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்ற கேள்விக்கான விடையாக அது அமையும். எடுத்துக்காட்டாக நாம் விளைவிக்கும் கீரை, நமது குடும்பத்துக்கு மட்டுமா? அல்லது சந்தையில் விற்கவா? அல்லது இரண்டுக்கும் சேர்த்தா என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

உழுதல் என்பது பண்ணையில் ஒரு நுட்பம். எந்தப் பருவத்தில் உழ வேண்டும் என்று முடிவு செய்வது விரகு அல்லது உத்தி. அதைப் போல விதைத்தல் என்பதும் பருவம் பார்த்துச் செய்யும் ஒருவகை உத்தி. நீரைச் சேமித்தல் என்பது ஒருவகை நுட்பம், அந்த நீர் அதிகம் விழும் இடத்திலேயே அகழி முறையில் நீள வாய்க்கால்கள் அமைத்துச் சேமிப்பதா அல்லது அந்த நீரைக்கொண்டு வந்து ஒரு பண்ணைக் குட்டையில் சேமிப்பதா என்ற வினாக்களுக்கான விடைதான் விரகு.

உற்றுநோக்குதல்

அடுத்ததாக, பண்ணைக் கூறுகளை ஒன்றுடன் ஒன்று முறையாக இணைப்பதற்கான முறை. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறில் ஒரு கூற்று உண்டு ‘குவளையைத் தன்னாரால் யாத்துவிடல்’ (365) என்பதாகும். அதாவது, குவளை மலரை அதன் நார் கொண்டு பூத்தொடுத்தலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுபோல் பண்ணையில் உள்ள கூறுகளை அவற்றின் தன்மைக்கேற்ப யாப்பது (நெறிப்படுத்துவது) அடுத்த முறையாகும். இதில் கட்டிடங்கள், பயிர்கள், கால்நடைகள், நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முறைப்பட யாத்தல் அவசியமாகும்.

மேற்கூறிய முறைகளை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்பதுதான் நம் முன் உள்ள சவால். நுட்பமான அலசல் முறை, கூர்ந்து கவனிக்கும் முறை, இயற்கையிலிருந்து படியெடுக்கும் முறை முதலிய முறைகளில் இந்தச் சவால்களை வெற்றி கொள்ளலாம். நமது வெற்றிப் பாதைக்கு, இவை அனைத்தும் படிக்கட்டுகளாகும்.

அலசல் முறை (Analysis) என்பதை வள்ளுவர் தேரல் என்று கூறுகிறார். இதை நாம் தேர்மை என்று கொள்வோம் (நேர் என்பது நேர்மை என்று ஆவதுபோல). அந்தத் தேர்மை எனப்படும் அலசல் முறையில் சில தரவுகளைக் கண்டறியலாம். குறிப்பாகப் பண்ணைக்குள் வரும் கோழிகளுக்கு என்னென்ன தேவை, அவை நமக்கு எவற்றையெல்லாம் தரும் என்ற தகவல்கள் இதில் கிடைக்கும்.

கவனித்தல் மிக முக்கியமான செயல்பாடு. நமது பண்ணை இருக்கும் சூழல் பற்றிய நேரடியான உற்றுநோக்கலே பண்ணை வடிவாக்கத்தில் மிக அடிப்படையான செயல்பாடு. இதன் மூலம் நமக்கு மேலும் அடிப்படையான தகவல்கள் கிடைக்கும். அதைப் பற்றித் தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம்.

(அடுத்த வாரம்: பண்ணை வடிவமைப்புக் கூறுகள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும்
இயற்கை வேளாண் வல்லுநர்.
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x