Published : 04 Jun 2016 12:25 PM
Last Updated : 04 Jun 2016 12:25 PM

கிழக்கில் விரியும் கிளைகள் 33: தீக்குச்சி மரத்தின் அறியாத பயன்

ஒதிய மரம்’ என்ற சொற்றொடர் முதன்முதலில் அபிதான மணிமாலை என்ற 19-ம் நூற்றாண்டு தமிழ் நிகண்டில்தான் காணப்படுகிறது. எனவே உதி, ஒடை, உலவை என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட ஒதிய மரம் 16, 17-ம் நூற்றாண்டுகளுக்குப் பின்புதான் ஒதியன், ஒடியர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் எல்லாப் பெயர்களுக்கும் எளிதில் ஒடியக் கூடிய இளம் கொம்புகளுக்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

ஜிங்கான் கோந்து

ஒதிய மரம், பயன்பாடுகள் நிறைந்த ஒரு மரம். தீக்குச்சித் தயாரிப்புக்குப் புகழ்பெற்றது. இதன் கட்டைகள் மரப்பெட்டிகள், வண்டிச்சக்கரங்கள், ஏர்கள், உலக்கைகள், பிரஷ் கட்டைகள், சிலேட் சட்டங்கள், பென்சில்கள், பல் குத்திகள், விறகுகள், பேப்பர்கூழ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. மரப்பட்டைகள் சாயமேற்ற பயன்படுகின்றன.

ஒதிய மரக் கோந்து மிக முக்கியமான பொருள்; இது ஜிங்கான் கோந்து என்று அழைக்கப்படுகிறது. இது காலிகோ அச்சு, தாள் மற்றும் துணி பாவுப்பசையீடு, வார்னிஷ்கள், மை, சுவர்பூச்சுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இந்தத் தாவரத்தின் மிகவும் முக்கியமான பயன், இதன் இலைகளிலிருந்து பெறப்படுகிறது. இலை ஒரு மிகச் சிறந்த, செலவில்லாத கால்நடைத் தீவனம்; ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

செலவில்லா தீவனம்

மிகுந்த வறட்சிப் பகுதியிலும்கூட நன்கு வளரக்கூடிய இந்த மரத்தை, இந்தியாவின் இயல் தாவரமான இந்த மரத்தை, மக்கள் மென்மேலும் அதிக அளவில் வளர்க்க வேண்டும். மிக எளிதில் கிடைக்கக்கூடிய, மிக எளிதில் வளரக்கூடிய இந்த மரம் ஒவ்வோர் ஆண்டும் கோடை மாதங்களைத் தவிர, இதர மாதங்களில் அதிக அளவு இலைகளை உருவாக்கும் மரமாகும். குறிப்பாகக் கால்நடை, ஆடு வளர்க்கும் கிராம மக்கள் இதை அதிக அளவில் வளர்த்துப் பயனடையலாம். இதன் கோந்து உற்பத்தியைப் பெருக்கப் பல வழிமுறைகள் இருப்பதால், அதன்மூலமே விவசாயிகள் நல்ல பயனடையலாம்.

(அடுத்த வாரம்: மின் இலைப்புன்னை)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x