

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாம் எந்தப் படிப்பை நோக்கிப் பயணிக்கப் போகிறோம் என்பதைக் காட்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வோ உயர் கல்வியை மட்டுமல்ல, அடுத்து என்னவாகப் போகிறோம் என்பதையும் சேர்த்தே காட்டும். அப்படி முக்கியத்துவம் பெற்ற பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகளைப் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகளே பல மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு பற்றிய பயத்தைக் கூட்டிவிடும்.
இதன் காரணமாக பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எழுதவும், வழிகாட்டவும் ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற பிரத்யேக வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் கரம் கோர்த்தன. திருவண்ணாமலையில் கடந்த 7-ம் தேதி இந்த வழிகாட்டி நிகழ்ச்சி திருமலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிளஸ் டூ தேர்வு மாணவர்கள் குவிந்தனர். தேர்வை எதிர்கொள்ளப் பல்துறை ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஆர்வத்துடன் கேட்டனர்.
நிதானமும் பொறுமையும்
நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஹென்றி அமல்ராஜ் பேசும்போது, “அதிகளவில் மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களைப் பெற்றோர் வழி நடத்துகின்றனர். மேலும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் தரத்தைக் குறைத்து விடுகின்றனர். அவ்வாறு செயல்படக் கூடாது. கல்வியும், தேர்வும் நமக்கு அடித்தளம். தேர்வைக் கண்டு அஞ்சக் கூடாது. நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனித்திறன் மற்றும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். எதிர்மறை சிந்தனைகளை அறவே ஒழித்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு மாணவர்கள் சாதனை புரிய வேண்டும்” என்றார்.
ஆங்கிலப் புலமை அவசியம்
எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.செந்தில்குமார் பேசுகையில் பல விஷயங் களைக் குறிப்பிட்டார். “கல்வி அறிவில் மாநிலத்தில் 3-வது இடத்தில் உள்ளது திருவண்ணாமலை மாவட்டம். ஆனால், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பின்தங்கியுள்ளது. உங்கள் முயற்சியால், அந்த நிலை மாறி முதலிடத்தைப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கஷ்டப்பட்டுப் படிக்காமல், இஷ்டப்பட்டு படித்தால் 100 சதவீத மதிப்பெண் பெற முடியும்.
என்ன படிக்க வேண்டும் என்று பாடப்பிரிவைத் தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு உள்ளது. உங்களுடைய பலமும் பலவீனமும் உங்களுக்குத்தான் தெரியும். அதன்மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலப் புலமையை வளர்த்துகொள்ளுங்கள். எங்கள் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
ஆயிரம் திறமைகள்
ஸ்ரீ வித்யா கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.சுப்ரமணியன் பேசும்போது, ‘தன்னம் பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். குக்கிராமத்தில் உள்ள கூரைக்கொட்டகை பள்ளியில் படித்து, சிகரத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு படியாக எடுத்து வைத்துச் சிகரத்தை அடைந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவரைப் போலவே நீங்களும் தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து 200 மதிப்பெண் பெற வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் ஆயிரம் திறமைகள் உள்ளன. அதைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். அடுத்து, கல்வி ஆலோசகர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
உயிரியல்
பேராசிரியர் என். குமாரவேல்
“விலங்கியல் எளிதாகவும், உயிரியல் கடினமாக இருக்கும் என்று சொல்வதுண்டு. உயிரியல் பாடம் எளிதானது. நீரிழிவு நோய், சிறுநீரகச் செயலிழப்பு, செயற்கை சிறுநீரகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம். கால்நடைகளைத் தாக்கிய நோய் என்ற கேள்வி கடந்தாண்டு கேட்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, மருத்துவ உபகரணங்கள் தொடர்பான கேள்விகள் கேட்க வாய்ப்புகள் உள்ளன. எந்தப் பாடத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டாம். நீங்கள் ஒதுக்கி வைக்கும் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கக்கூடும். அதனால், அனைத்துப் பாடங்களையும் படியுங்கள். கடந்தாண்டு கேள்வித்தாள்களை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடிப் படியுங்கள். முழு ஈடுபாட்டுடன் அதிக நேரம் படித்தால் மருத்துவராகலாம்”.
இயற்பியல்
ஆசிரியர் ஏ. திருமாறன்
“ஒரு மதிப்பெண் கேள்விகளில், ஓரே மாதிரியான கேள்விகளை வெவ்வேறு விதமாகக் கேட்டுக் குழப்புவார்கள். கேள்வியைப் படித்துத் தெளிவுபடுத்தி விடை எழுதுங்கள். புத்தகத்தில் கொடுத்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தியும் மற்றும் துணைத் தலைப்புகளை இட்டும் தேர்வை எழுதுங்கள். கணக்குகளை முதலில் எழுதிவிட்டால், ஏனைய வினாக்களுக்குத் விடை எழுத எளிதாக இருக்கும். கேட்கப்படும் வினாக்களுக்கு தேவையான பதிலை மட்டும் எழுதுங்கள்”.
வேதியியல்
பேராசிரியர் ஏ. பரீத்அஸ்லாம்
“வேதியியல் பாடம் மிக எளிமையானது. வேதியியலை நேசித்தால், அதை வெல்வது சுலபம். வேதியியல் என்பது நமது வாழ்க்கை. நமது மூச்சு காற்றிலும் அர்த்தம் கற்பிப்பது வேதியியல். மழை வருவதை விளக்குகிறது. வேதியியல் வாடை இல்லாமல் எந்தப் பொருளும் இல்லை. அரசாங்கம் வழங்கிய ப்ளு பிரிண்ட் அடிப்படையாகக் கொண்டு படியுங்கள். வேதியியல் பாடத்தை மனப்பாடமாகப் படிக்காமல் உள் கருத்தை உள் வாங்கிக் கொண்டு படித்தால் எளிதாகத் தேர்வை எழுதலாம். தேவை இல்லாத குறியீடுகளை எழுதக் கூடாது. விடைகளைச் சரியான முறையில் எழுதுங்கள். அப்போதுதான் விடைத்தாள் மீது மதிப்பு ஏற்பட்டு மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்”.
கணிதம்
பேராசிரியர் ஆர்.மணிமாறன்
“பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடம் மிகவும் எளிதானது. கணிதத்தைப் புரிந்து கொள்ளாமல் படித்து, மனப்பாடம் செய்தால் கவிழ்த்துவிடும். புரிந்து கொண்டு படித்தால் 200 மதிப்பெண் பெறலாம். ப்ளு பிரிண்ட் அடிப்படையில் கணிதத்தை எழுதிப் படியுங்கள். கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுங்கள். கடின முயற்சி கொண்டு படித்தால் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறலாம்”.
மாணவர்களுக்கு கையேடு
இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலத்தூர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு மேல் நீடித்தது. வயிற்றுப் பசியையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவ-மாணவிகளும் மிகுந்த உற்சாகத்தோடும், அமைதியுடனும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் வாய்ப்பாடுகள், சமன்பாடுகள் அடங்கிய கையேடும், மதிய உணவும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை ‘தி இந்து’ மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து சண்முகா இண்டஸ்ட்ரீஸ் கலை-அறிவியல் கல்லூரி இணைந்து வழங்கியது.
முன்னதாக நிகழ்ச்சியை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பி.கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிப்பெண் பெறுவோம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கோபிநாதன் கூறும்போது, “இனிது இனிது, தேர்வு இனிது நிகழ்ச்சி மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. கணிதம் மற்றும் உயிரி விலங்கியல் பாடத்தில் மதிப்பெண்களை எளிதாகப் பெறும் வழிகளைச் சிறப்பு வல்லுநர்கள் எடுத்துக் கூறித் தெளிவுபடுத்தினர். இதன்மூலம், கூடுதலாக மதிப்பெண் பெறுவேன்’ என்றார்.
சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி யோகேஸ்வரி கூறுகையில், “ இந்த நிகழ்ச்சி கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற உதவியாக இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும், எந்தெந்த வகைகளாகக் கேள்விகள் கேட்கப்படும் என்று வல்லுநர்கள் கூறியது பயன் உள்ளதாக இருந்தது. என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.