Published : 08 Dec 2013 04:48 PM
Last Updated : 08 Dec 2013 04:48 PM

பழங்குடிகளின் கலகக் குரல்

படிப்பு வாசனையை இளம் வயதிலேயே தொலைத்துவிட்ட கேரளப் பழங்குடிப் பெண் ஜானு, அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டம் கேரளத்தை உலுக்கியது. பழங்குடியினருக்கு நிலஉரிமை வழங்கக் கோரி கேரளத் தலைமைச் செயலகத்துக்கு முன்பாகக் குடிசைகளை அமைத்த அந்தப் போராட்டம், அன்றைய ஏ.கே. அந்தோணியின் அரசை நெருக்கடியில் தள்ளியது. பழங்குடிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்காவிட்டாலும்கூட, அரசு கொஞ்சம் இறங்கி வந்தது.

படிப்பறிவும் அரசியல் உணர்வும் அதிகமுள்ள கேரளத்திலும் மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் உரிமைகளைப் பெற இயலவில்லை. அவர்களது நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடித்துக்கொண்டனர். அரசோ எதையும் சட்டை செய்யாமல் இருந்தது. ஆட்சிகள் மாறினாலும் வறுமை, ஒடுக்கப்படுதல், அலட்சிய உணர்வு போன்றவற்றால் பழங்குடிகள் அவதிப்பட்டது மாறவில்லை. பழங்குடிகளின் கோரிக்கைகளுக்கு 1990கள் வரை உரிய பதில் கிடைக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் வயநாடு மாவட்டத்திலுள்ள மனந்தவாடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜானு, பழங்குடிகளின் குரலை ஓங்கி ஒலித்தார்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான வெள்ளமுண்டாவில் பிறந்தவர் சி.கே. ஜானு. வறுமையும், அடிமை வேலைகளும் ஜானுவை வாழ்க்கையின் சோகமான பக்கத்துக்குத் திருப்பின. ஏழு வயதில் வீட்டு வேலை செய்யப் போன அவர், 12 வயதில் தினக்கூலியாகவும், பிறகு தையல் வேலையும் செய்யத் தொடங்கினார். கடன், வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தையல் கடையை மூடினார். படிப்பறிவற்ற ஜானு, 80களில் நடைபெற்ற எழுத்தறிவு இயக்கம் மூலம் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

பழங்குடிகளின் குரல்

பழங்குடிகள் காலம்காலமாக அனுபவித்து வரும் பல்வேறு பிரச்சினைகளை, அப்போதுதான் அவர் உணரத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு பேசத் தொடங்கினார். திட்டவட்டமான எண்ணம், உறுதியான மனோதிடத்தால் சக மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ஜானுவின் குரலைத் தங்களின் குரலாகப் பழங்குடிகள் அடையாளம் காண ஆரம்பித்தனர். இடையில் சில காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த அவர், 1982ஆம் ஆண்டில் கட்சியை விட்டு விலகினார்.

"அனுபவமே எனது வழிகாட்டி" என்று கூறும் ஜானு, பழங்குடிகளின் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒவ்வொரு பழங்குடி கிராமமாக பயணம் செய்தார். அதில் கற்றுக்கொண்ட விஷயங்களை அடிப்படையாகக்கொண்டு பழங்குடிகளைப் போராட்டத்துக்குத் தயார்படுத்தினார்.

பழங்குடிகளை மேம்படுத்துவதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அடிப்படை உரிமைகள் பற்றி பழங்குடிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான சாகுபடி நிலம் அவர்களது பிறப்புரிமை என்பதை உணர்த்தினார். அவரது தீவிர அக்கறையாலும் சொல்வன்மையாலும் வயநாடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பழங்குடிகள் அணி திரண்டனர்.

புதிய அத்தியாயம்

இந்நிலையில் 2001ஆம் ஆண்டில் 32 பழங்குடிகள் பட்டினிக்குப் பலியாகி இருந்தனர். "அவர்கள் விஷச்சாராயம் குடித்ததால்தான் பலியானார்கள்" என்று மாநில அமைச்சர் ஒருவர், விவகாரத்தைத் திசைதிருப்ப முயற்சித்தார். அந்தச் சம்பவத்துக்குப் பின், கேரளப் பழங்குடிகள் வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயத்தை எழுதினார் ஜானு.

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை ஜானுவும் அவரது சக போராளிகளும் ஒரு மாதத்துக்கு மேல் முற்றுகையிட்டனர். தலைமைச் செயலக அலுவலகங்களின் முன் குடிசைகளை அமைத்துத் தங்கினர். 48 நாட்களுக்கு இந்தப் போராட்டம் நீடித்தது. அவர்களது கோரிக்கை அடிப்படையானது, ‘பழங்குடிகளின் நிலத்தைத் திரும்பத் தரவேண்டும்' என்பதே அது. மேலும் மேலும் பழங்குடிகள் ஜானுவின் பின்னால் அணிதிரள, ஆட்சியிலிருந்த ஏ.கே. அந்தோணியின் காங்கிரஸ் அரசுக்கு அது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.

கடைசியில் வேறு வழியின்றி, ஒவ்வொரு பழங்குடி குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் சாகுபடி நிலம் வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. ஆனால், இந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக் குறைந்த முயற்சிகளையே அரசு மேற்கொண்டது.

அதன் பிறகு ஜானுவும் பழங்குடிகளும் அவர்களுடைய போராட்டத்தில் மற்றுமொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்தனர். 2003ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஜானுவும், நக்சலைட்டாக இருந்து பழங்குடிப் போராளியாக மாறிய எம். கீதானந்தனும் ஒரு போராட்டத்தைத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான பழங்குடிகளுடன் வயநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியான முத்தங்காவை கைப்பற்ற முனைந்தனர். விவசாயம் செய்வதற்கான எளிய கருவிகளைத் தவிர, அப்போது அவர்களிடம் வேறு எதுவும் இருக்கவில்லை.

அதன் பிறகு ஜானுவும் பழங்குடிகளும் அவர்களுடைய போராட்டத்தில் மற்றுமொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்தனர். 2003ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஜானுவும், நக்சலைட்டாக இருந்து பழங்குடிப் போராளியாக மாறிய எம். கீதானந்தனும் ஒரு போராட்டத்தைத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான பழங்குடிகளுடன் வயநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியான முத்தங்காவை கைப்பற்ற முனைந்தனர். விவசாயம் செய்வதற்கான எளிய கருவிகளைத் தவிர, அப்போது அவர்களிடம் வேறு எதுவும் இருக்கவில்லை.

அரசு அதிகாரிகளின் தொடர் எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, குடிசைகளை அமைத்து, பிறகு நிலங்களை உழுவதற்கும் ஆரம்பித்தனர். ‘இந்த மண் எங்களது தாய்மண். இது எங்களது நிலம்' என்பதே அவர்கள் உணர்த்த விரும்பிய விஷயம்.

தொடரும் போராட்டம்

முள்ளை முள்ளால் எடுக்க அரசு தீர்மானித்தது. முத்தங்காவில் அமைக்கப்பட்டிருந்த பழங்குடி குடிசைகளைப் போலீஸ் அடக்குமுறை மூலம் அகற்ற, அரசு முயற்சித்தது. இதில் ஒரு பழங்குடியும், போலீஸ்காரரும் பலியாகினர். நூற்றுக்கணக்கான பழங்குடிகள் காயமடைந்தனர். ஜானு கைது செய்யப்பட்டார்.

போலீசின் இந்த அத்துமீறலைக் கண்டித்துப் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் பெயர் ‘உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது'.

உரிமைகளைக் கோரும் பழங்குடிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஆதிவாசி கோத்ரா மகா சபை, அதன் அரசியல் பிரிவான ராஷ்டிரிய மகா சபையின் தலைவராக ஜானு தொடர்கிறார். பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை ஜானுவின் போராட்டம் ஓயாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x