

உணவில் பாதியை உண்டு, மீதியை வீணாக ஒதுக்குவது இன்று நாகரிக அடையாளமாக மாறியுள்ளது. மனதிற்குப் பிடிக்காமல் உணவை வெறுத்து ஒதுக்குபவர்களும் உண்டு. அதேசமயம் உணவின் மணத்திலேயே பசியாறுபவர்களும் உண்டு. உணவு கிடைக்காமல் உலகில் அலைபவர்கள் எண்ணிக்கை, வீணாக்கப்படும் உணவின் அளவைவிட நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்.
மிதமிஞ்சி நாம் ஒதுக்கும் ஒரு பிடி உணவு, பலருக்கு ஒருவேளை உணவாக இருக்கிறது. இந்த விழிப்புணர்வைப் பள்ளிகளில் இருந்து தொடங்கினால் பெரிய மாற்றம் கிடைக்கும் என ஆதங்கத்துடன் பேசுகிறார் ஸ்பைஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனீஸ்.
அனைத்துப் பள்ளிகளிலும்..
கோவையில் ஸ்பைஸ் அமைப்பு உணவு வீணாக்கு தலுக்கு எதிரான இயக்கத்தைக் கையில் எடுத்துள்ளது.
2014-ல் வெவ்வேறு கல்லூரி களில் பொறியியல் முடித்த 17 பட்டதாரிகளால் உருவானது இந்த அமைப்பு. சமூகத்துக்கும், மாணவர் உலகத்திற்கும் ஏதேனும் கற்றுக் கொடுக்க வேண்டுமென ஒரு மாற்றத்தை நோக்கிக் களம் இறங்கியுள்ளனர் இந்த இளைஞர்கள்.
அக்.16 முதல் நவ.14 வரை கோவையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உணவு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உரைகள், போட்டிகள், மாரத்தான், மனிதச் சங்கிலி எனப் பல போட்டிகளைத் திட்டமிட்டுள்ளனர். இறுதியாக அதைச் சாதனை முயற்சியாக மாற்றும் சவாலையும் ஏற்றுள்ளனர்.
இந்த அமைப்பின் நிர்வாகி பத்மநாபன் கூறுகையில், மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கியது தான் ஸ்பைஸ் அமைப்பு. ஏன், எதற்காக என எந்தக் கேள்வியும் இல்லாமல் வெறும் பாடமாகப் பொறியியலைப் படிக்கும் மாணவர்களுக்கு, எங்களது செய்முறைப் பயிற்சி வகுப்பு நல்ல பலனைக் கொடுத்தது. அந்த ஊக்கம் தான் சமூக நோக்கமுள்ள அடுத்த முயற்சிக்கு எங்களை நகர்த்தியது என்கிறார் அவர் .
தேவைப்படுபவர்களுக்கு..
மேலும் இதுபற்றி அவர் கூறும்போது “உற்பத்தி செய்யப்படுவதில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. விளைவு எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் வீணாக்குகிறோம். இதனைச் சரிசெய்வது எப்படி என யோசித்தபோது, பள்ளிகளிலிருந்து திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற யோசனை கிடைத்தது. ஒரு நாளைக்கு ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 20 கிலோ உணவுப்பொருள் வீணாகிறது. கோவையில் உள்ள 300க்கும் அதிகமான பள்ளிகளை இந்தக் கணக்கில் சேர்த்தால், ஒரு நாளில் வீணாகும் உணவு மட்டும் 6000 கிலோவைத் தாண்டும். தேவையில்லை என ஒதுக்கும் உணவைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிலும் மிஞ்சுகிறது என்றால், அதனை உயிரி எரிபொருளாக, உயிரி வாயுவாக மாற்ற வேண்டும்.
அழைப்புகளை ஏற்கும் பள்ளிகளைப் பதிவு செய்து, அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பள்ளி மாணவர்களைத் தன்னார்வலர்களாகக் குழு அமைத்து எங்களது முயற்சியால் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிப்போம்.அதில் எங்களது முயற்சியின் வெற்றி தெரியவரும். மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்குக் கருத்துகளைக் கொண்டு செல்ல மராத்தான் ஓட்டம், மனிதச் சங்கிலி என நடத்துகிறோம். பதிவுசெய்த பள்ளிகளில் இறுதி நாளன்று உணவு வீணாக்குதலே இல்லை என்ற இலக்கை நோக்கிய முயற்சியை எடுக்கிறோம். அதாவது தேவைக்கு அதிகமாக உணவு இருந்தால் அது தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கப்படும். அதையும் மீறி வீணாகும் உணவுப் பொருட்களை உயிரி உரங்களாக மாற்றி சாதனை முயற்சியும் பதிவுசெய்யப்படுகிறது.
பொறியியல் பட்டதாரிகள் என்பதால் தேவையான கருவிகளையும் நாங்களே தயாரிக்கிறோம். முழுமையாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடிக்கும் போது உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் ஓரளவுக்காவது பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் புரிந்திருக்கும்.” என்கிறார் அவர்.
கோவையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். சிறிய இடைவெளியிலேயே ஒரு மாற்றம் கிடைக்கும் என்பது இவர்களது எண்ணம். இதேநிலைத் தொடரும்பட்சத்தில் வருங்காலத்தில் உணவின் அவசியம் உணர்ந்த பலர் உருவாக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.