

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் குரூப்-பி, குரூப்-சி பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களைத் தேர்வுசெய்வது எஸ்.எஸ்.சி. என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) ஆகும். இதற்கு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு நிலை தேர்வு (Combined Graduate Level Examination) என்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
20,000 பணி இடங்கள்
அந்த வகையில், தற்போது, உதவித் தணிக்கை அதிகாரி, உதவிக் கணக்கு அதிகாரி, மத்திய அரசு செயலக உதவிப் பிரிவு அதிகாரி, மத்திய உளவுப் பிரிவு அலுவலக உதவிப் பிரிவு அதிகாரி, ரயில்வே அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரி, பல்வேறு துறைகளில் உதவிப் பிரிவு அதிகாரி, உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், கடத்தல் தடுப்பு ஆய்வாளர், மத்தியக் கலால் ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சி.பி.ஐ. ஆய்வாளர், உதவி ஆய்வாளர், அஞ்சல்துறை ஆய்வாளர், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆய்வாளர், ஆடிட்டர், வருமான வரி உதவியாளர் எனப் பல்வேறு பதவிகளில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. எனினும் ஏறத்தாழ 20 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையான தகுதி
தேர்வுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில், பதவிகளுக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மூன்று நிலைகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு ஏதும் கிடையாது.
மூன்று தேர்வுகளிலும் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெவ்வேறு பணிகளுக்குத் தேர்வுசெய்யப்படுவர். ஒரு சில பணிகளுக்கு மட்டும் கணினித் திறன் தேர்வு உண்டு. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் (www.ssconline.nic.in) மூலமாக ஜூன் மாதம் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டம், வெவ்வேறு பணிகள் தொடர்பான விவரங்களை எஸ்.எஸ்.சி. இணையதளத்தில் (www.ssc.nic.in) விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு: 3 நிலைகள் (Tier-I, Tier-II, Tier-III)
# முதல்நிலை, இரண்டாம் நிலை தேர்வுகள் ஆன்லைன் வழியில் அமைந்திருக்கும்.
# முதல் நிலை தேர்வு: பொது விழிப்புணர்வு, ரீசனிங், பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
# இரண்டாம் நிலை தேர்வு: கணிதம், ஆங்கிலம், புள்ளியியல், பொது அறிவு (நிதி மற்றும் பொருளாதாரம்) பகுதியில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
# மூன்றாவது நிலை தேர்வு (இறுதி நிலை): விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதில், ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல், விண்ணப்பம் தயார்செய்தல் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுத் தேதிகள்
# ஆன்லைன் வழியிலான முதல் நிலைத் தேர்வு: ஆகஸ்டு 1 முதல் 20-ம் தேதிவரை
# இரண்டாவது நிலைத் தேர்வு: நவம்பர் 10, 11
# மூன்றாவது நிலைத் தேர்வு: ஜனவரி 21, 2018.