Last Updated : 13 Jun, 2017 10:00 AM

 

Published : 13 Jun 2017 10:00 AM
Last Updated : 13 Jun 2017 10:00 AM

மக்களாட்சிக்கு வித்திட்ட மகா சாசனம்

ஜூன் 15 - மாக்னா கார்ட்டா நாள்

வரலாற்று மாணவர்கள், அரசியல் தத்துவ அறிஞர்கள், போட்டித் தேர்வாளர்கள் மத்தியில் பரிச்சயமான சொல், ‘மாக்னா கார்ட்டா’. இன்றைக்கும் சர்வதேச அளவில் குடிமக்களின் உரிமைகள், தனி மனிதரின் சுதந்திரம் குறித்த விவாதம் எழும்போதெல்லாம் மாக்னா கார்ட்டா சாசனம் பேசப்படுகிறது. 1215-ல் இங்கிலாந்து மன்னர் ஜானுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையாக இந்த சாசனம் வடிவமைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் கடந்தும் ஒவ்வொரு ஜூன் 15-ம், ‘மாக்னா கார்ட்டா’ நாளாக நினைவுகூரப்படுகிறது.

மாக்னா கார்ட்டா உதயம்

இங்கிலாந்து - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான போரில், 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து பெரும் சரிவைச் சந்தித்தது. அப்போது மன்னர் ஜானின் போர் வியூகங்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன. மோசமான வரி விதிப்புகளால் குடிமக்கள் கொதிப்படைந்தனர். கிறிஸ்தவ மடாதிபதியான போப் உடனும் மன்னர் ஜான் சமரசம் பேணவில்லை. வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்ட நில உடைமையாளர்களும் பிரபுக்களும் ஒன்றுகூடி பலவீனமான மன்னருக்கு எதிராக உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டினர்.

பிரபுக்கள் தலைமையில் குடிமக்கள் பங்கேற்ற போராட்டம் என்றும், தங்கள் சுயலாபத்துக்காக மக்களின் பெயரால் பிரபுக்கள் நடத்திய கலகம் என்றும் இச்சம்பவம் வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறது. போராட்டத்தை அடக்கச் சிறையடைப்பு முதல் மரணதண்டனை வரை ஜான் நடைமுறைப்படுத்திய அடக்குமுறைகள் எடுபடவில்லை. மக்களை அமைதிப்படுத்தும் தந்திர உபாயமாய் ஒரு சாசனம் அப்போது பிறப்பிக்கப்பட்டது. அதுதான் லத்தீன் மொழியில் மகத்தான சாசனம் எனப் பொருள்படும் ‘மாக்னா கார்ட்டா’.

உறக்கமும் உயிர்ப்பும்

குடிமக்களைச் சட்டவிரோதமாகக் கைதுசெய்து சிறை வைத்தல், நாடு கடத்துதல், அடிப்படை உரிமைகளைப் பறித்தல் போன்ற மக்கள் விரோதச் செயல்களைத் தடுக்கும் முன்மாதிரிச் சட்டங்களை மாக்னா கார்ட்டா கொண்டிருந்தது. பொதுச்சொத்தை அபகரிப்பது, வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடுவது, நில அபகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராகக் கட்டுப்பாடுகள் அதில் விதிக்கப்பட்டன. மன்னர் வசமே அதிகாரங்கள் அனைத்தும் குவிவதைகூட சாசனம் தடுத்தது. மன்னரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவரே என்றும் சட்டத்தை அரசர் மீறினால் அவர் மீதும் நடவடிக்கை பாயலாம் என்றும் சாசனம் சொன்னது. இப்படி ஆச்சரியமூட்டும் வகையில் சாமானிய மக்களின் நலம் காக்கும் பிரிவுகள் சாசனத்தில் அதிகம் இருந்தன.

ஆனால், பெருநிலங்கள், தனிப்படைகள், சிறப்பு அதிகாரங்கள் என மன்னருக்கு இணையாகக் கோலோச்சிய பிரபுக்களுக்கும் மன்னருக்கும் இடையிலான இந்த மகா சாசனம் அப்போதைக்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. அடித்தட்டு மக்களுக்கான சட்டங்கள் குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அப்போது மட்டுமல்ல; அதற்குப் பிந்தைய வரலாற்றிலும், மாக்னா கார்ட்டா அவ்வப்போது உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறது, பின்னர் எவரேனும் அதை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

ஆன்மாவை இழக்காத சாசனம்

மன்னர் ஜான், பிரபுக்கள் மத்தியில் உருவாகிக் கிடப்புக்குப்போன சாசனத்துக்கு அடுத்து அரியணை ஏறிய மன்னர் 3-ம் ஹென்றி உயிர்கொடுத்தார். பிரான்ஸுக்கு எதிரான போர் நடவடிக்கையாகவும், குழுக்களாகச் சிதறிக் கிடந்த நாட்டு மக்களை ஒன்று திரட்டவும் அவர் மாக்னா கார்ட்டாவின் பெயரால் அறைகூவல் விடுத்தார். சாசனத்தின் சிறப்புகளை விளக்கி மக்களைத் திரட்டினார். ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணும்போதெல்லாம் 3-ம் ஹென்றி மட்டுமின்றி அடுத்து வந்த ஆட்சியாளர்களும் மாக்னா கார்ட்டாவைக் கையில் எடுத்தனர்.

முடியாட்சி ஊறிப்போய்க் கிடந்த அக்காலத்தில், மாக்னா கார்ட்டா சாசனம் நடைமுறைக்கு ஆகாதது என்பதை மன்னரும், மக்களின் பெயரால் தங்கள் சுய லாபங்களுக்காகக் கலகம் செய்துவந்த பிரபுக்களும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். அத்தோடு சாசனத்தின் வீரியம் குறித்த அச்சம் அதிகார மட்டத்தில் எழும்போதெல்லாம், அதன் முக்கியப் பிரிவுகள் மாற்றியமைக்கப்பட்டன. இப்படிப் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டாலும் சாசனம் தனது ஆன்மாவை இழக்கவில்லை. ஏனெனில், மாக்னா கார்ட்டாவின் உயிர்நாடி, தனி மனிதரின் உரிமைகளும் சுதந்திரமும் ஆகும்.

இந்தியாவிலும் எதிரொலி

மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி அரசு முத்திரையுடன் பதிப்பிக்கப்பட்ட முதல் மகா சாசனமான மாக்னா கார்ட்டாவை, வரலாற்று ஆய்வாளர்கள் ‘உலகுக்கு இங்கிலாந்து அளித்த கொடை’ என்கின்றனர். இதை அடித்தளமாகக் கொண்டுதான் ஜனநாயக இங்கிலாந்தின் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. அதன் காலனியாதிக்க நாடுகளின் பல்வேறு சட்ட வரைமுறைகளிலும் ஜனநாயகக் கோட்பாடுகளிலும்கூட மாக்னா கார்ட்டாவின் தாக்கம் உண்டு. குறிப்பாக அமெரிக்க அரசியலமைப்பு சாசன உருவாக்கத்தில் இதன் பாதிப்புகள் அதிகம் உள்ளது.

பல்வேறு நாடுகளில் மக்களின் உரிமைகளைப் பேசும் சட்டங்களை மாக்னா கார்ட்டாவின் பெயரிலேயே அழைக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கான சட்டப் பிரிவுகள், ‘இந்தியாவின் மாக்னா கார்ட்டா’ என்றழைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x