Published : 03 Jan 2016 01:40 PM
Last Updated : 03 Jan 2016 01:40 PM

விவாதக் களம்: சிறார்களை நல்வழிப்படுத்துவது அனைவரின் கடமை

சிறார் குற்றங்களுக்கு எதன் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று 2015 டிசம்பர் 27-ம் அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிற சிறார் குற்றங்களுக்கு என்ன காரணம், அவற்றை எப்படிக் களைவது என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தோம். கடிதம் மூலமாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பலரும் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:

பெற்றோரை இழந்த அல்லது அவர்களால் சரியாகக் கண்காணிக்கப்படாத சூழலில் தவறான நபர்களுடன் ஏற்படும் தொடர்பு ஒருவரைக் குற்றவாளியாக மாற்றிவிடும். ஆனால் இப்படி உருவாகிற சிறார் குற்றவாளிகள், ‘தண்டனை கடுமையாக இருக்கும்’ என்று உணரும்வகையில் சட்டம் இருந்தால்தான் குற்றங்கள் குறையும். காரணம் சீர்திருத்தப் பள்ளிகள் ‘திருத்தி’ அனுப்புகிற குழந்தையை இந்தச் சமூகம் நல்ல கண்ணோட்டத்துடன் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. அதனால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பால் அவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கலாம்.

- பா. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.

பொருளாதார நெருக்கடி காரணமாகப் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளுக்குப் போதுமான அரவணைப்பும் கண்காணிப்பும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் அவர்களைக் கணிசமாகப் பாதிக்கின்றன. இதனால் அறியாப் பருவத்திலேயே பல விஷயங்களையும் அவர்கள் தெரிந்துகொள்கின்றனர். பள்ளிகளிலும் சிறுவர்கள் மதிப்பெண் வாங்கும் கருவிகளாக மாற்றப்படுகின்றனர். அறநெறிசார் கல்வியும் ஒழுக்கம் பற்றிய நீதி போதனை வகுப்புகளும் தொலைக்கப்பட்ட இந்தக் காலத்தில் சிறார் குற்றங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். குழந்தைகள் மீதான அக்கறையை அதிகப்படுத்துவதன் மூலமே அவற்றைக் குறைக்க முடியும்.

- மலர் மகள், மதுரை.

குழந்தைகள் புரியாத வயதில் பார்க்கிற நிகழ்ச்சியை, ஓரளவுக்கு விவரம் தெரிகிற வயதில் பரிசோதித்துப் பார்க்க நினைக்கிறார்கள். நம் கண்ணை விட்டு மறையும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அவர்களை அன்போடு கண்டித்து அரவணைத்து நல்வழிப்படுத்தும் நாளில் சிறார் குற்றங்கள் நிச்சயம் குறையும்.

- ஆ. தனலட்சுமி, போடிநாயக்கனூர்.

நம் நாட்டின் முரண்பட்ட சமுதாயச் சூழல் குழந்தைகளை இரட்டை வாழ்க்கைக்கு உட்படுத்துகிறது. ஏற்றத் தாழ்வுகள், சூழ்ச்சிகள், ஊழல்கள், பொய்கள் அனைத்துமே குழந்தைகளின் மனதில் வன்மத்தை விதைக்கின்றன. அதனால்தான் அதிர்ச்சிக்குரிய செயல்களை எந்தவித உறுத்தலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிகிறது. பிஞ்சிலே வெம்புகிற குழந்தைகளின் உளவியல் கோளாறுகளைச் சரிசெய்ய வேண்டிய தருணம் இது.

- மனோகர், மேட்டுப்பாளையம்.

குழந்தைகளுக்குக் கிடைக்கிற தொழில்நுட்பக் கருவிகள் அவர்களுக்கு வயதுக்கு மீறிய விஷயங்களைக் கற்றுக்கொடுத்துவிடுகின்றன. சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் நிலையை அங்கு நடக்கும் வன்முறைகளும், சிறார் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கும் பங்குண்டு.

- வி. எஸ். ராமு, திண்டுக்கல்.

குற்றங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டுதான் தண்டனை வழங்க வேண்டுமே தவிர வயதைக் கொண்டு அல்ல. வயதைக் குறைத்துக் காட்டப் போலியான ஆவணங்களையும் தயார் செய்துவிடுவார்கள்.

- பாத்திமா செரீன், நாகர்கோவில்.

சிறார் குற்றங்களில் குடும்பமும் சமுதாயமும் சம பங்கு வகிக்கின்றன. குடும்பங்களில் நடக்கக்கூடிய தாய் தந்தை சண்டைகள், தகாத உறவு முறைகள், மதுப் பழக்கங்கள் போன்றவை கண்முன்னே நடைபெறும்போது குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் எளிதாகக் கிடைக்கக்கூடிய கூடா நட்பு, இணையம், தொலைக்காட்சி, திரைப்படங்கள் வழியாகக் கிடைக்கும் விரும்பத்தகாத காட்சிகள் சிறார்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

பாலியல் வல்லுறவு, கொலை போன்ற பெருங்குற்றங்கள் நடைபெறும்போது வயதைக் காரணம் காட்டிக் கடுமையான தண்டைனையிலிருந்து விலக்களிப்பது வரவேற்கத்தக்கதல்ல. தவறுக்குச் சரியான தண்டனை வழங்குவதன் மூலம் ஆயிரமாயிரம் சிறுவர்கள் தவறு செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

- சு. தட்சிணாமூர்த்தி, கோயம்புத்தூர்.

இன்றைய உலகில் பெற்றோர்கள் பணத்தின் பின் ஓடுவதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். போலி கவுரவம், பகட்டு இவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூடத் தங்கள் குழந்தைகளின் குணத்துக்குக் கொடுப்பதில்லை. நாலு பேருக்கு உதவி செய்வதைக்கூட செல்ஃபி எடுத்து பெருமைக்கு வாழ நினைக்கிறார்கள். நல்லது எது , கேட்டது எது என்று குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசும் பெற்றோர்கள் மிகக் குறைவு. குழந்தைகளுக்கு நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் சொல்லி வளர்க்கும் பெற்றோர் எத்தனை பேர்? படித்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மற்றவர்களின் வேதனை எப்படிப் புரியும்?

பெண்களை வெறும் சதைப் பிண்டமாகக் காட்சிப்படுத்தும் ஊடகங்களும் குழந்தைகளின் மனதில் பெண் குறித்த தவறான சித்திரத்தையே வரைகின்றன. நம் குழந்தைகளுக்குப் பெரியவர்களையும் பெண்களையும் மதிக்கக் கற்றுத்தர வேண்டும்.

சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். சிறார்களாக இருந்தாலும் மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடம் கொடுக்கக் கூடாது. காமுகர்களைப் போற்றிப் பாடும் செயலை இந்தச் சமுதாயமும் கைவிட வேண்டும்.

- வீ. யமுனா ராணி, சென்னை.

அந்தக் காலத்தில் இலை மறை காயாக இருந்த அனைத்தும் இன்று உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாகக் கிடைக்கின்றன. நன்மையும் தீமையும் கலந்திருத்தலால், சரியான புரிதல் இன்றி, எதைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் பல குழந்தைகள் சூழ்நிலைக் கைதிகளாகச் சிக்கிக்கொள்கிறார்கள்.

பார்க்கக் கூடாத, கேட்கக் கூடாத பலவும் செல்போனிலேயே பார்க்கக்கூடிய அளவிலே கிடைத்துவிடுவதால், கடிவாளமற்ற காட்டுக் குதிரைகளாகக் காமம் எனும் பள்ளத்தில் வீழ்பவர்களும் உண்டு. பள்ளிகளுக்கு அருகிலே திறந்திருக்கும் மதுக்கடைகளால் படிப்பை மறந்து, மதுவெனும் படுகுழியில் வீழ்கிற அவலமும் உண்டு.

பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையை வயது வித்தியாசம் பாராமல் விதிக்க வேண்டும். சிறு தீக்குச்சியே ஆனாலும் அதனால் ஒரு பெரிய காடே எரிந்து சாம்பலாகும் என்பதால் குற்றங்கள் அறவே தடுக்கப்பட வேண்டுமென்றால், கடுமையான தண்டனை விதிக்கப்பட்டே ஆக வேண்டும்

- கு.மா.பா. கபிலன், சென்னை.

ஏழை, பணக்காரன், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. தவறு செய்பவர் வயதில் குறைந்தவர் என்பதால் பாதிக்கப்படுபவரின் துயரத்தின் அளவு குறைந்துவிடுமா? சிறு வயதிலேயே தவறு செய்பவர்களை வயதைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைத்தால், பயம் விட்டுபோய், குற்றவாளிகள் அதிகரிப்பதற்கு அதுவே காரணமாகிவிடும். அத்துடன் அனுபவ முள்ள மூத்த குற்றவாளிகள் சிறார்களைக் குற்றம் செய்யத் தூண்டிவிட்டுத் திருந்த வாய்ப்பில்லாமல் செய்துவிடுவார்.

- என். உஷாதேவி, மதுரை.

இளம் குற்றவாளிகள் என்று ஏன் தனியே பிரித்து பார்க்க வேண்டும்? பாலியல் வன்முறைக் குற்றத்தை யார் செய்தாலும் தவறுதான். அதற்குரிய தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும். எல்லாவற்றுக்கும் மற்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளும் நாம் ஏன் தண்டனை விஷயத்தில் மட்டும் வசதியாக மறந்துவிடுகிறோம்?

- ராஜபுஷ்பா, கும்பகோணம்.

தடுக்கி விழும் இடம் எல்லாம் டாஸ்மாக் இருக்கும்போது போதையின் மயக்கத்தில் எது தவறு என்கிற உணர்வே இல்லாமல் குற்றம் செய்ய வாய்ப்பு அதிகம். அளவுக்கு அதிகமான ஆபாசப் படங்கள், பாட்டு வரிகள், பெண்களை இழிவுபடுத்தும் விதமான விமர்சனங்கள் என எதோ ஒரு விதத்தில் சமூகம் தன் பங்கைச் செய்துவிடுகிறது. தனி மனித ஒழுக்கத்தை நம் பள்ளிகள் மூலம் கற்றுத்தருவதுடன், ஆண் - பெண் பாகுபாடு இன்றிக் குழந்தைகளைச் சரிசமமாக மதித்து வளர்க்கும் மனப்பான்மையை உருவாக்குவதும் அவசியம்.

- பானு பெரியதம்பி ,சேலம்.

பெற்றோரின் கண்பார்வை படாதபோது பிள்ளைகள் தவறான வழியில் நடக்க ஊடகங்களும் காரணம். ஒரு சிறுவன் தவறு செய்துவிட்டு, சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று வெளியே வந்தாலும் அவன் முழுமையாக மாறிவிட மாட்டான். சிறைத் தண்டனைதானே என்ற அலட்சியப் போக்கு வந்து பிறகு பெரிய தவறுகளை செய்யத் தொடங்கிவிடுவான். குடும்பத்தின் அன்பும் கண்காணிப்பும் இருந்தால் சிறார் குற்றங்களைக் குறைக்கலாம்.

- உஷாமுத்துராமன், திருநகர்.

தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். குற்றத்தின் தன்மையின் அடிப்படையிலேயே தண்டனை வழங்க வேண்டுமே தவிர வயதின் அடிப்படையில் தண்டனை வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்க்கும்போதே நல்ல பழக்கத்தைச் சொல்லி வளர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் சிறார்களுக்குச் சரியான பாதுகாப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு முறையான யோசனை சொல்லவும் ஆளில்லாத நிலையில் குற்றங்கள் பெருகத்தானே செய்யும்? திரைப்படங்களும் தங்களால் முடிந்தவரையில் குழந்தைகளின் மனதில் நஞ்சைக் கலக்கின்றன.

- வீ. ரத்னமாலா, சென்னை.

குற்றத்தின் தன்மைக்கேற்பவும், பாதிப்பின் விளைவுக்கேற்பவும் சிறார் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். வயதை மட்டும் காரணம் காட்டி தண்டனை குறைப்பது சரியாக இருக்காது. சிறியவர்கள்கூட நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதை ஆக்க செயல்களைவிட குற்றச் செயல்களுக்கு மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். தண்டனை குற்றவாளியின் செயலுக்கன்றி அவருடைய வயதுக்கு அல்ல. மேலைநாடுகளில் சிறார்களுக்குக்கூட தண்டனையைக் குற்றச் செயல்களுக்குத் தக்கவாறு வழங்குகின்றனர். நாமும் நமது சட்டவிதிகளில் தக்க மாற்றம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. இல்லையென்றால் நிர்பயாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.

- ஜீவன். பி.கே, கும்பகோணம்.

தற்போதைய சூழலில் பதினாறு வயதையே சிறார்களின் மனப்பக்குவத்துக்கான வயது என்று வைத்துக்கொள்ளலாம். பெருகிவரும் தொழில்நுட்ப வசதிகளும் மலிந்துகிடக்கும் சமூக வலைத்தளங்களும் அவர்களுக்கு வயதுக்கு மீறிய அனுபவத்தைத் தந்துவிடுகின்றன. இவற்றைக் கருத்தில்கொண்டுதான் சட்ட திருத்தங்கள் அமைய வேண்டும். பதினாறு வயது என்றில்லை, தான் செய்கிற செயலின் விளைவுகளைப் புரிந்துகொள்ளும் அறிவு முதிர்ச்சி இருந்தால் எந்த வயதினருக்கும் தண்டனை தரலாம். அதில் தவறே இல்லை. மக்களைக் காப்பதற்கான தேவைகளும் குற்றங்களின் தன்மைகளும் அதிகரிக்கும்போது சட்டமும் அதற்கேற்ப மாறித்தானே ஆகவேண்டும்?

- ஜானகி ரங்கநாதன், சென்னை-4.

சிறார் குற்றங்களால் அவர்களின் பெற்றோர் மட்டுமல்ல, சுற்றியிருக்கும் சமூகமும் சேர்த்தே பாதிப்புக்குள்ளாகிறது. அதே நேரம் சிறார் குற்றவாளிகளை இந்தச் சமூகம் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்வதும் இல்லை. சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு ஆளாகும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர்கள், மேலும் மேலும் குற்றத்தில் ஈடுபடலாம். தவிர, சீர்திருத்தப் பள்ளிகளால் அவர்கள் முழுமையாகத் திருந்திவிடவும் வாய்ப்பில்லை. இப்படியொரு சூழலில் பெற்றோரும் சமூகமும் அவர்களுக்கு நல்லதொரு முன்மாதியாகத் திகழ வேண்டும். பள்ளிகளில் நீதிபோதனையும் ஒழுக்கமும் கற்றுத்தரப்பட வேண்டும். ஆசிரியர்களின் பங்கும் இதில் அவசியம்.

- ஆர். பீர்முஹம்மது, தலைஞாயிறு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x