Published : 07 Oct 2014 12:33 PM
Last Updated : 07 Oct 2014 12:33 PM

சொந்தக் காலில் நிற்கும் பெருமிதம் (8 முதல் 13 மாதங்கள் வரை)

இதுவரை தவழ்ந்து கொண்டிருந்த உங்கள் குழந்தை நாற்காலி, மேஜை, தொலைப்பேசி என கண்ணில் படும் பொருள்கள் அனைத்தையும் பிடித்திழுக்க முயல்கிறதா? அவற்றை பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயல்கிறதா? அப்படியானால் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை:

1.குழந்தை அனைத்தையும் ஆராய்ந்து, புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கும். இதனால் சில நேரம் குழந்தைக்கோ, மற்றவர்களுக்கோ காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், எதையும் எப்படி மென்மையாகத் தொடுவது என்பதைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள்.

2.எதை வைத்து விளையாடலாம் எனத் தானே தேர்வு செய்து, அந்தப் பொருளை எடுத்துக் குழந்தை விளையாடும் பருவம் இது.

3.தன் கையிலிருக்கும் பொருட்களைத் தூக்கி போட்டு, தூர எறிந்து விளையாடுவதன் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் குழந்தை யூகிக்கத் தொடங்கும். பந்து போன்ற திரும்ப வராத பொருட்களையும் தூக்கி போட்டுப் பார்க்கும்.

சுய உணர்வு: நீங்கள் குழந்தையிடம் அன்பு செலுத்துவதன் மூலம், குழந்தையும் மற்றவர்களிடம் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ளும்.

உடல்: இப்போது குழந்தை தானாகவே எழுந்து நின்று, நடக்க முயற்சிக்கும். ஆனால் உங்கள் கண்காணிப்பு அத்தியாவசியம். இல்லையென்றால், காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உறவுகள்: குழந்தையை மற்றவர் கவனிப்பில் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே செல்லும்போது, ஆரம்ப நாட்களில் குழந்தை பெரிதும் ஏமாற்றம் அடையும். இந்த நிலையில் குழந்தையை ஏமாற்றிவிட்டு வெளியே செல்வதைவிட, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் திரும்ப வந்துவிடுவேன் என்பதை விளக்கிவிட்டுச் செல்லுங்கள்.

குழந்தைக்கு அது புரியாது என்று நினைக்காமல், இதைச் செய்ய வேண்டும். காலப்போக்கில் நீங்கள் திரும்பி வந்துவிடுவீர்கள் என்பதை குழந்தை நம்பத் தொடங்கும்.

புரிதல்: குழந்தை, உங்களை எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் செய்வதை எல்லாம் செய்து பார்க்கும். அப்படித்தான் குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும்.

கருத்துப் பரிமாற்றம்: நீங்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகளின் அர்த்தங்களைக் குழந்தை தெளிவாகப் புரிந்துகொள்ளும். வார்த்தைகளைச் சொல்லிய பிறகு, அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைச் செய்துகாட்டி விளக்கவும் செய்யலாம்.

தொகுப்பு: ம. சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x