Last Updated : 03 Sep, 2016 12:10 PM

 

Published : 03 Sep 2016 12:10 PM
Last Updated : 03 Sep 2016 12:10 PM

வழிகாட்டும் ஒளிவிளக்குகள்!

கண் தான விழிப்புணர்வு இரட்டை வாரம் ஆக. 25 - செப். 8

திருச்சிக்கு அருகே உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர், பார்வையிழந்த நிகழ்வு மிகவும் வேதனையானது. காலையில் கரும்பலகையில் அவர் எழுதிக்கொண்டிருந்தபோது ஆசிரியரின் கண்ணில் சாக்பீஸ் துகள் கண்ணில் விழுந்தது. உறுத்தல் ஏற்படவே கண்ணை நன்றாகத் தேய்த்துவிட்டார், கண் நன்றாகச் சிவந்து கருவிழி (Cornea) புண்ணாகிவிட்டது.

அதற்குச் சுயவைத்தியம் என்ற பெயரில் கண்ட கண்ட மருந்துகளைப் போட்டதால் பிரச்சினை அதிகமாகி, இறுதியில் கருவிழி பார்வையிழப்பு (Corneal Blindness) ஏற்பட்டுவிட்டது. ‘அடச் சாக்பீஸ் துகள்தானே’ என்று அலட்சியமாக நினைத்தது அவரைப் பாடாய்ப்படுத்தி இறுதியில் பார்வையிழப்பையே ஏற்படுத்திவிட்டது. திருச்சிக்கு அருகே பள்ளி ஒன்றில் நிஜமாக நடந்த நிகழ்வுதான் இது. அதிர்ஷ்டவசமாகத் தற்போது அந்த ஆசிரியருக்குக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை (Corneal Transplantation) செய்யப்பட்டுப் பார்வை திரும்பியது.

எங்கே கிடைக்கும்?

கருவிழி மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கு, கருவிழி தேவை. இயற்கையான கருவிழிக்கு இணையாக, செயற்கையான கருவிழியைக் கண்டுபிடிப்பதில் மருத்துவ ஆராய்ச்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இதற்குக் கண்தானம் மட்டுமே ஒரே வழி. இறந்தவர்களிடமிருந்து கண்களைத் தானமாகப் பெற்று, அதன்மூலம்தான் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. கருவிழி பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒன்றுதான், வரப்பிரசாதம்.

ஊக்குவிப்பாளர்களின் பங்கு

இறந்துபோன பிறகு கண்களைத் தானமாகக் கொடுங்கள் என்றால், எல்லோரும் கொடுத்துவிடுவதில்லை. இந்த இடத்தில்தான் கண்தானம் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்யும் கண்தான ஊக்குவிப்பாளர்களின் (Eye donation motivators) பங்கு முக்கியமாகிறது. அந்த வகையில் கவனிக்க வேண்டிய நான்கு பேரைப் பார்ப்போம்.

கண்தானத் தூதுவர்

கே.செல்வராஜ், ஒரு மருத்துவராக இல்லாதபோதும் பார்வையில்லாத பலருக்குப் பார்வை கொடுத்துவருகிறார். இறந்துபோனவர்களிடமிருந்து மண்ணுக்கு இரையாகிவிடாமல், இதுவரை 967 ஜோடி கண்களைத் தானமாகப் பெற்றுப் பார்வையில்லாதவர்களின் வாழ்வில் ஒளி கிடைக்க வழி செய்திருக்கிறார். இதற்காகத் தமிழக அரசின் விருது உட்படப் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பார்வையிழந்தவர்களைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றுதான் கண்தானம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார் திருச்சி பாரத மிகு மின் நிலையத்தில் பணிபுரியும் செல்வராஜ். ‘அனைவருக்கும் பார்வை; அழைக்கிறது பி.ஹெச்.இ.எல்.’ (BHEL) என்ற திட்டத்தைப் பாரத மிகுமின் நிலையம் ஆரம்பித்து, அத்திட்டத்துக்குச் செல்வராஜை தூதுவராக நியமித்துச் சிறப்பித்திருக்கிறது.

மிகச் சிறந்த பரிசு

பார்வையிழந்தவர்களுக்குப் பார்வையைக் கொடுக்க முடியும், அது மிகச் சிறந்த சேவை என்பதை உணர்ந்தார் மதுரையில் விளம்பர நிறுவனம் நடத்திவரும் டி.ஏ. சீனிவாசன். அந்த நேரத்தில் மதுரை லயன்ஸ் சங்கம், கண்தான விழிப்புணர்வு ஆண்டை அறிவித்தது. தானமாகக் கிடைக்கும் கண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து லயன்ஸ் சங்கம் அளிக்கும் பாயிண்ட்களின் எண்ணிக்கை அதிகரிக்க, உற்சாகம் மேலிடக் கண்களைத் தானமாகப் பெற ஆரம்பித்தார் சீனிவாசன்.

ஆரம்பத்தில் எதிர்ப்பையும் நிராகரிப்பையும் எதிர்கொண்டாலும் நாளடைவில் கண் தானத்தின் அவசியத்தை மக்களிடம் முறையாக எடுத்துரைத்துச் சம்மதிக்க வைப்பதில் இவர் வெற்றி பெற்றுவருகிறார். இதுவரையிலும் 3,200 ஜோடி கண்களைத் தானமாகப் பெற்று, பார்வையிழந்தவர்களுக்கு ஒளி கிடைக்க வழிவகை செய்துள்ளார். ஒருவருக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த பரிசு கண் தானம்தான் என்கிறார் சீனிவாசன்.

குடியரசுத் தலைவரின் பாராட்டு

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சங்கர நேத்ராலயாவைச் சேர்ந்த பிரபலக் கண் மருத்துவர் பத்ரிநாத், கண் தானம் குறித்து எழுதிய ‘வேதனை’ என்ற கட்டுரையைத் தற்செயலாகப் படித்தபோதுதான், கண் தானத்தில் ஆர்வம் திரும்பியதாகக் கூறுகிறார் கோவை சிங்காநல்லூரைச் சார்ந்த எஸ்.பி. ஜெகதீஸ்வரன். இவர் படித்தது என்னவோ 9-ம் வகுப்புவரைதான்.

ஆனால், இவரது சேவையோ இமாலயச் சாதனை. பலரது வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படக் காரணமாக இருக்கும் இவர் சந்தித்த அவமானங்கள் பல. ஆனால் அவற்றைத் தாண்டி 1,600 ஜோடி கண்களைத் தானமாகப் பெற்றுள்ளார். இவரது சேவையை அறிந்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கோவை வந்திருந்தபோது, ஜெகதீஸையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

ஏன் ஞாபகப்படுத்தவில்லை?

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரவி சிதம்பரத்தின் அம்மா இறப்பதற்கு முன், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். ஏற்கெனவே புதுக்கோட்டையில் இறந்துபோன சித்தியின் கண்களைத் தானமாகத் தந்தது ரவி சிதம்பரத்துக்குத் தெரியும் என்பதால், அம்மா நோய்வாய்ப்பட்டிருந்தபோதே அவருடைய கண்களைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்துவிட்டாராம். அம்மா இறந்த அன்று, புதுக்கோட்டை சித்தி குடும்பத்தினரும் போன் செய்து கண்தானம் பற்றி நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.

அம்மாவின் கண்களைத் தானமாகக் கொடுத்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, பலரும் பாராட்டியதை நினைவுகூர்கிறார். இன்று எங்கே இறப்பு நிகழ்ந்தாலும் கண்தானம் செய்ய வைப்பதற்கு முயற்சிக்கும் அவர், அது மிகச் சிறந்த தர்மம் என்கிறார். சில இடங்களில் கண்தானம் தொடர்பாகப் பேசத் தயங்கினாலும், “உங்கள் அம்மாவின் கண்களைத் தானம் செய்தீர்களே, எங்கள் வீட்டிலும் அதுபோலக் கேட்டு ஏன் ஞாபகப்படுத்தவில்லை” என்று பலர் வருத்தப்படுவதாக இவர் சொல்கிறார்.

முழுமையான தானம்

கருவிழி பார்வை இழப்பால் பார்வையிழந்தவர்களுக்கு, கண் தானம் மூலம் மீண்டும் பார்வை கொடுக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாது. இது குறித்த முழுமையாக அறியாததும் போதிய விழிப்புணர்வு இல்லாததுமே இதற்கு முக்கியக் காரணம். மண்ணோடு மண்ணாகவோ அல்லது நெருப்புக்கோ இரையாகும் கண்களைத் தருவதன் மூலம், கருவிழி பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாகப் பார்வை பெற முடியும்.

அந்த வகையில் செல்வராஜைப் போன்றோ, சீனிவாசனைப் போன்றோ அல்லது ஜெகதீஸ்வரனைப் போன்றோ நம் அக்கம்பக்கத்திலோ நண்பர்கள்/உறவினர்கள் இல்லத்திலோ இறப்பு நிகழும்போது, வீட்டாரிடம் பேசிக் கண்களைத் தானமாகக் கொடுக்க நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் கண் தானத்தில் நம் பங்கு பெருமையாகப் பேசப்படும். வெறுமனே கண் தானப் படிவத்தை நாம் நிரப்புவதால் மட்டுமே, அது முழுமை பெற்றுவிடாது.

அடுத்த முறை எங்கேனும் இறப்பு நேரிட்டதைப் பற்றி கேள்விப்படும்போது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்வதற்கு முன், கண் வங்கிக்கு முதலில் தகவல் சொல்லச் சொல்லுங்கள். நாம் இறந்த பிறகு நம் கண்கள் நமக்குச் சொந்தமில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, தானத்தில் சிறந்த தானத்தை நிறைவு செய்வோம்.

கண் தானம் செய்ய இவர்கள் உதவுவார்கள்

1. திருச்சி கே. செல்வராஜ்  9443016805

2. மதுரை டி.ஏ. சீனிவாசன்  9842133956

3. கோவை எஸ்.பி. ஜெகதீஸ்வரன்  9443263868

4. மதுரை ஜி. ரவிசிதம்பரம்  9443424042

கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x