Published : 18 Mar 2014 13:08 pm

Updated : 07 Jun 2017 11:24 am

 

Published : 18 Mar 2014 01:08 PM
Last Updated : 07 Jun 2017 11:24 AM

மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்

‘வீட்டுக் கிணற்று நீரில் சோறு சமைத்தால் தும்பைப் பூவைப் போல இருக்கும். அதன் மணமே அள்ளித் தின்னச் சொல்லும்' என்று பாட்டி சொன்னவை கதைகளாக மட்டும் நினைவில் நிற்கின்றன. இன்று அந்தக் கிணறு நீர் வற்றியிருந்த இடம் தெரியாமல், கழிப்பறைக் குழியாக மாறி இருப்பதைத் துயரம் நிறைந்த மனத்தோடுதான் கடக்க வேண்டி இருக்கிறது.

ஆறுகள், அருவிகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் இருக்கும் ஊர்களின் நிலைமையும்கூட இன்றைக்குத் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இல்லை. பல ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த குளங்கள், இன்றைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் பேருந்து நிலையங்களாகவும் வணிக வளாகங்களாகவும் மாறி மிரட்டுகின்றன.


தண்ணீர் பற்றாக்குறை

‘தண்ணீர் பிடிப்பதற்காக இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலை மூன்று மணிக்குத்தான் தண்ணீர் வந்தது' என்று அயர்ந்து சிவந்த கண்களுடன், அடுத்த நாள் கூறினாள் தில்லியில் தனி வீடு எடுத்துத் தங்கி பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பு படிக்கும் என் தோழி.

சிறு நகரங்கள், கிராமங்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் பெண்கள் நீர் சேகரிப்பிற்காக அதிக நேரம் செலவிட்டு வருவதற்கான நேரடி சாட்சி இது. ஒரு பக்கம் கிராமங்களில் சுத்தமான தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படாத நிலையில், மற்றொரு புறம் நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களும் மின்தடை நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறார்கள்.

ஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்குத் தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் இயலுகிறது. இந்தப் பற்றாக்குறையை நிலத்தடி நீர் சிறிதளவு சமன் செய்கிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் சதவீதம் நூற்றுக்கு 80 சதவீதமாகச் சரிந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விவசாயத்துக்கு அதிக அளவு

நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதன் தரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்காலத்திய தொழிற்சாலைப் பெருக்கமும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேற்றமும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. இந்த நீர் உணவுப் பயன்பாட்டிற்கு எந்த அளவு பாதுகாப்பானது என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

நிலத்தடி நீரின் தரத்தின் மீதான சந்தேகம் அதனைப் புறத் தேவைகளுக்கான ஒன்றாக மட்டும் மாற்றி இருக்கிறது.

பெண்களும் தண்ணீரும்

நம் நாட்டுப் பண்பாடு நீரை மையமாகக்கொண்டது. ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகம் நம்முடையது. தமிழர்களான நாமும் காவிரியை வாழ்த்தியும் வையையில் புனலாடியும் வளர்ந்திருக்கிறோம். வீட்டு வேலை மட்டுமே கடமையென உணர்த்தப்பட்ட நம் பண்பாட்டில், பெண்கள் அதிக நேரம் செலவிடுவது நீர் சேகரிப்புக்குத்தான். இந்தியாவில் சமைப்பதற்குத்தான் மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

சமைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒரு டம்ளர் அரிசியை வேக வைக்க இரண்டு பங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அரிசியைச் சமைக்கும் முன்னர் களைந்து சுத்தம் செய்வதற்கு, வேக வைப்பதற்குத் தேவைப்படுவதைவிட அதிகத் தண்ணீர் தேவை.

நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்களின் நீர் சேகரிப்பு மதிப்பிட முடியாத அவர்களின் ஆளுமையையும் சிந்தனையும் சிதைக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, மாற்றுச் சிந்தனை போன்றவை பெண்களிடமிருந்து இன்னும் வெகு தொலைவில் தள்ளி நிற்பதற்குக் காரணம், அவர்களுடைய சிந்தனையை நிரப்பியிருக்கும் வீட்டுக் கடமைகளே.

நீர் சேகரிக்கும் பெண்கள் குழாயடிச்சண்டை போடுவதை நகைச்சுவையாக ஏற்று ரசிக்கும் மனம், அந்த யதார்த்தம் உணர்த்தும் சமூகச் சிக்கலைக் கேள்வி கேட்காமல் கடந்து செல்கிறது. நீர் சேகரிக்கும்போது தொடங்கும் சண்டை, இறுதியில் நடத்தை, பண்பு பற்றிய பரஸ்பரப் புறம்பேசுதலில் சென்று முடிகிறது. இத்தகைய சூழலில் பெண்கள் எந்த மாற்றுச் சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியும்?

உலக யுத்தம்?

சுற்றுச்சூழல் காரணங்களால் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது என்று சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தண்ணீருக்காக உலக யுத்தம் வரும் என்று எச்சரிக்கிறார்கள். நதி நீர் இணைப்பில் ஏற்படும் பெருமளவு புவியியல் மாற்றங்கள், அதற்கான முதன்மைத் தடையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் உள்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை நிறைவு செய்யாத ஆட்சியாளர்கள், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளுக்குச் சொற்பக் கட்டணத்தில் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தும் உரிமங்களை வாரி வழங்குகிறார்கள். உழவுத் தொழில் அடிப்படையில் அமைந்த இந்தியச் சமூகம் இன்னும் தன்னிறைவு பெறாமலேயே வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பொதுச் சொத்து என்ற அடிப்படை உரிமை காற்றில் போய்விட்டது.

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கை அடியொற்றி வாழ்ந்து வந்த நம்முடைய உழவுச் சமூகம், இன்றைக்குத் தொழிற் சமூகமாக மாறிவருகையில், மக்களின் நீர்த் தேவை குறித்து அரசுக்குக் கவனம் தேவை. ஒரு நூற்றாண்டு காலத்தில் மக்கள்தொகையில் நான்கு மடங்கு விருத்தி அடைந்துள்ளது இந்தியா. மக்கள்தொகையின் பெருக்கத்தையும் நகரங்களில் அதிகபட்ச மக்கள் திரள்வதையும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

ஜே.எஸ்.அனார்கலி, ஆராய்ச்சி மாணவி, தொடர்புக்கு: bharathiannar@gmail.com


சூழல் சிந்தனைஉலக தண்ணீர் தினம்தண்ணீர் பாதுகாப்புதண்ணீர் சேமிப்புதண்ணீர் தட்டுப்பாடுசூழ்நிலை மாற்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x