Last Updated : 17 Sep, 2016 11:12 AM

 

Published : 17 Sep 2016 11:12 AM
Last Updated : 17 Sep 2016 11:12 AM

புர்ஜ் கலீபாவில் பறக்கும் இந்தியக் கொடி

உலக அளவில் மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு, மிகப் பெரிய செல்வந்தர்களின் விருப்பமான வீடு எனப் பல வகையான புகழுக்குச் சொந்தமான கட்டிடம் புர்ஜ் கலிபா.

2,722 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 163 மாடிகள் உள்ளன. வீடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் இருக்கின்றன. ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அண்ட் மெரில் என்னும் அமெரிக்க நிறுவனம்தான் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தது. இந்தக் கட்டிடத்தில் வீடு சொந்தமாக இருப்பது பெரிய கவுர அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வீடு வாங்க முடியாதவர்கள் வாடகைக்கு வீடு எடுத்தாவது இந்தக் கட்டிடத்தில் வசித்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்தக் கட்டிடத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகிறார்கள். ஆனால் அதிகமான வீடுகளுக்குச் சொந்தக்காரர் நம்முடைய நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் வி நேரேபரம்பில்.

ஜார்ஜ் ஒரு குளிர் சாதனப் பொறியாளராக துபாய்க்குள் வந்தவர். தன்னுடைய விடாமுயற்சியால் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். புர்ஜ் கலீபாவுக்கு முன்னால் நின்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்தவர் இன்று அந்தக் கட்டிடத்தின் அதிகமான வீடுகளை வைத்திருப்பவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் செய்யாத தொழில்கள் இல்லை எனலாம். பருத்தி எடுத்த பின் கழிவாகக் கொட்டப்படும் கொட்டைகளிலிருந்து பசை தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளார்.

ஜார்ஜின் உறவினர் ஒருவர் புர்ஜ் கலீபாவின் வாசலில்கூட உன்னால் நிற்க முடியாது எனச் சொல்லியிருக்கிறார். அந்த வைராக்கியத்தில் இந்தக் கட்டிடத்தில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று உறுதிபூண்டுள்ளார். முதலில் புர்ஜ்கலீபாவில் வீடு வாடகைக்கு உள்ளது என்ற விளம்பரத்தைப் பார்த்து, முதலில் அந்த வீட்டை வாடகைக்குப் பிடித்துள்ளார். பிறகு சம்பாதிக்கும் பணத்தைச் சிறிது சிறுதாகச் சேமித்து ஒரு வீட்டைச் சொந்தமாக்கியுள்ளார். இன்று 22 வீடுகளுக்குச் சொந்தக்காரர். மேலும் ஐந்து வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அடுத்த வீட்டுக்காக நல்ல வாடகைதாரரைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்ன வாடகைக்குப் பிடித்து விடலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x