Last Updated : 21 Oct, 2013 05:25 PM

 

Published : 21 Oct 2013 05:25 PM
Last Updated : 21 Oct 2013 05:25 PM

ஷாப்பிங் செய்யும்போதும் அழகாக இருங்கள்!

திருமணம், பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு எப்படி பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோமோ, அப்படித்தான் வெளியே ஷாப்பிங் கிளம்பும் போதும் திரையங்குகளுக்குச் செல்லும் போதும் உடையணிய வேண்டும். காலை வெளியே சென்று மாலை வீடு திரும்பிவிடுகிற சின்ன சுற்றுலாவோ, இரண்டு மூன்று நாட்கள் நீளும் நெடுந்தூர பயணமோ எதுவாக இருந்தாலும் அதற்குத் தகுந்தபடி உடையணிய வேண்டும். வெளியே கிளம்புகிறோம் என்ற உற்சாகத்திலேயே பலர் தங்கள் உடைகளில் கவனம் செலுத்துவதில்லை. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மறந்துவிடுவார்கள். சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்தால், நாம் அணிந்து செல்கிற ஆடையே நம் உற்சாகத்தை இரட்டிப்பாக்கும்.

நண்பர்களுடன் சேர்ந்து வெளியே கிளம்பினால் எளிமையான காட்டன் சல்வார் கமீஸ் சிறந்த தேர்வு. கைச்சுமையைக் குறைப்பது அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தரும். வீட்டில் இருந்து எடுத்துச் செல்கிற பொருட்களுடன் வெளியே வாங்கிக் குவிக்கிற பொருட்களும் சேர்ந்துவிடும் என்பதால் கவனம் தேவை. போகும்போதே நிறைய அள்ளிச் சென்றால், புதிதாக வாங்குவதை எதில் திணிப்பது?

கைச்சுமை குறைவாக இருந்தால் நடந்தே கடக்க வேண்டிய இடங்களில் தூக்கிச் சுமக்க சுலபமாக இருக்கும். சுற்றுலா செல்லும்போதும் எளிமையான ஆடைகளையே தேர்ந்தெடுங்கள். ரிங்கிள் ஃப்ரீ எனப்படும் சுருக்கங்கள் அற்ற ஆடைகளை அணிவது நல்லது.

திடீரென திட்டமிடப்படும் ஷாப்பிங் போன்ற சங்கதிகளுக்கு என்ன உடை அணிவது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். எளிய சுடிதார் ரகங்களை அணியலாம். கணக்கில்லாமல் பட்டன்கள் வைத்த குர்தாக்களையும் ஆங்காங்கே முடிச்சுகள் வைத்த ஆடைகளையும் தவிர்ப்பது புத்திசாலித்தனம். அணிகலன்களையும் அளவோடு அணியுங்கள். அதிகமான அலங்காரப்பொருட்கள் ஷாப்பிங் வேகத்தைக் குறைப்பதுடன், ஆடையில் சிக்கி அநாவசிய பதற்றத்தை ஏற்படுத்தும்.

ஆற அமர உட்கார்ந்து அலங்காரம் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஆடம்பரமான சிகையலங்காரம் ஷாப்பிங் செல்ல உகந்ததல்ல. ஷாப்பிங்கின் போது அலைச்சலில் வியர்த்து வழியக்கூடும் என்பதால் தேர்ந்தெடுத்த மிருதுவான உள்ளாடைகளையே அணியுங்கள்.

அணிந்து செல்கிற ஆடை எப்படி கச்சிதமாக இருக்கிறதோ அதேபோல உங்கள் ஷாப்பிங்கும் இருப்பது சிறந்தது. அதிக எடையுள்ள மற்றும் அதிக விலையுள்ள ஆடைகளை அள்ளிவந்துவிட்டு, இவ்வளவு செலவழித்துவிட்டோமே என வருந்துவதைவிட, ஒருமுறைக்கு பலமுறை யோசித்து வாங்கவேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடை ஃபேஷனபிளாக இருக்கிறதா என்பதைவிட, உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். சிலர் தங்களுக்குக் கொஞ்சமும் பொருந்தாத, ஆனால் டிரெண்டியான ஆடையை அணிந்திருப்பார்கள். அது அவர்களின் தோற்ற மதிப்பீட்டைக் குறைக்குமே தவிர வேறெந்த பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தராது.

இப்போதுதான் கடைக்குக் கடை டிரையல் அறை இருக்கிறதே. அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடையை அணிந்துகொண்டு, பலவிதங்களில் கண்ணாடி முன்னால் நின்று சரிபார்க்கலாம். குறிப்பாக பல கோணங்களில் உட்கார்ந்து பார்த்து வாங்குவது நல்லது. காரணம், பெரும்பாலான நேரம் கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்ய வேண்டியவர்கள், இப்படி சரிபார்த்து வாங்குவது நல்லது.

ஏற்கனவே பல கடைகள் ஏறி இறங்கி இருந்தால் விலை குறித்த மதிப்பீடு நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். விலை சரியானதாக, ஓரளவுக்குக் கட்டுப்படியாகிற மாதிரி இருந்தால் மட்டுமே வாங்குவது குறித்து யோசிக்கலாம்.

அலுவலகத்தில் உங்கள் மதிப்பீட்டைத் தீர்மானிப்பதில் உங்கள் உடை அலமாரிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அணிந்து செல்கிற ஆடையை வைத்தே உங்களை எடைபோடுவார்கள். அலுவலகச் சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஆடையை அணிந்து செல்வது, மற்றவர்களின் கவனத்தைத் திசை திருப்புமே தவிர, உங்கள் மீதான மதிப்பீட்டை உயர்த்தாது.

அலுவலகத்துச் செல்கிறவர்கள்தான் அழகாக உடையணிய வேண்டும் என்பது பல இல்லத்தரசிகளின் நினைப்பு. இல்லத்தரசியாக இருப்பதாலேயே தேர்ந்தெடுத்து உடையணியத் தேவையில்லை என்ற கருத்து முற்றிலும் தவறு. குடும்பத்துடன் கலந்துகொள்ளக்கூடிய அலுவல் தொடர்பான சந்திப்புகளில் கச்சிதமாக ஆடை அணிவது உங்களைப் பளிச்செனக் காட்டும். அலுவலகத்துக்குச் செல்கிறவர்கள் சம்பாதிப்பதால், அவர்கள் மட்டும்தான் விலையுயர்ந்த ஆடைகளை அணிய வேண்டும் என்பதில்லை. இல்லத்தரசிகள் எப்போதாவதுதான் ஆடைக்காகச் செலவிடுவதால், அதை விலையுயர்ந்ததாகவும், ஆடம்பரமானதாகவும் வாங்கலாம்.

பாந்தமான புடவையும், நகையும் உங்களை கம்பீரமாகக் காட்டும். இன்னாரின் மனைவி என்று அறிமுகப்படுத்தப்படும்போது உங்கள் தோற்றம் இயல்பாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். அது உங்கள் கணவரின் மதிப்பையும் கூட்டும். சன்னமான புன்னகையுடன் மெதுவாகப் பேசுங்கள். இந்த அணுகுமுறை, விவாதங்களைக்கூட ஆரோக்கியமானதாக மாற்றிவிடும்.

உங்கள் தோற்றத்தின் மதிப்பைக் கூட்டுவதில் சிகையலங்காரத்துக்கும் முக்கிய பங்குண்டு. தலைமுடியை நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைத்தனமான சிகையலங்காரங்கள் உங்கள் மதிப்பைக் குறைத்துக் காட்டும். சில நிமிடங்களிலேயே செய்துமுடிக்கிற வகையில் எளிமையான, புதுவிதமான சிகையலங்காரத்தைத் தேர்ந்தெடுங்கள்.

தோற்றத்துடன் ஒத்துப்போகிற மேக்கப் நல்லது. எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும் தனித்துத் தெரிகிற அளவுக்கு அதிகப்படியான மேக்கப் போடக்கூடாது.

மிக மெல்லிய நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள். வியர்வை நீக்கிகளை உபயோகிப்பதும் நல்லது. உங்கள் ஆடையுடன் ஒத்துப்போகிற வளையல், கம்மலை அணியுங்கள். நீங்கள் இருக்கிற சூழலுக்குத் தக்கபடி உடையணிகிற சூட்சுமம் தெரிந்து வைத்திருந்தால் எந்த இடத்திலும் நீங்கள்தான் நட்சத்திரமாகப் பிரகாசிப்பீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x