Published : 13 Jan 2017 11:58 AM
Last Updated : 13 Jan 2017 11:58 AM

அவசரத்திலும் சிறப்பா இருக்கணும் சார்!

தமிழ் சினிமாவில் நாம் நடிகர்களின் உடைகளைப் பார்த்து, ‘அழகா இருக்குல்ல’ என்று கடந்து விடுகிறோம். அந்தப் பாராட்டுக்கள் எல்லாம் ஆடை வடிவமைப்பாளருக்கே சென்றுவிடுகின்றன. அதனைத் தைத்த டைலரின் பெயர் டைட்டில் கார்டில்கூட‌ இடம்பெறுவதில்லை.

ஆனால் தற்சமயம் பல ஆடை வடிவமைப்பாளர் களின் செல்லப் பிள்ளை டைலர் ஏஜாஸ் அஹ்மது. தாங்கள் வடிவமைக்கும் துணிகளைத் தைக்க, இவருக்குத்தான் ஏக டிமாண்ட். பொங்கலுக்கு வெளியாக விருக்கும் ‘பைரவா’ படத்தில் விஜய்யின் உடைகளைத் தைத்ததுகூட இந்த இளைஞர்தான்.

பைலட் திரையரங்குக்கு அருகே உள்ள அவரது கடைக்குச் சென்ற போது, ‘இதுதான் நடிகர்களுக்கு உடைகள் தைத்துக் கொடுக்கும் கடையா?’ என்ற எண்ணம் வந்தது. சுமார் 15 பேர் தைத்துக் கொண்டிருக்க, 2 பேர் பட்டன் வைக்க, கடைக்கு வெளியே 2 பேர் அயர்ன் செய்து கொண்டிருந்தார்கள்.

“என் மாமா குத்தூஸ் பாய் ரொம்பப் பெரிய டைலர். பரீட்சை முடிந்து வீட்டில் சும்மா இருக்கும் போது, மாமாவின் கடைக்குச் செல்வேன். அப்படித்தான் டைலரிங் பழகினேன்.

சினிமா பார்க்கும் போது நடிகர்கள் வித்தியாசமான உடைகளை அணிந்து நடித்திருப்பார்கள். ‘இப்படியெல்லாம் இருக்கிறதே, இதெல்லாம் ஏன் நம்மால் தைக்க முடியாது?’ என்று எண்ணினேன். நம்ம வெறும் ஃபார்மல் உடைகள்தானே தைத்துக் கொண்டிருக்கிறோம். சினிமாவுக்கு உடைகள் தைக்க‌ என்ன செய்ய வேண்டும் என்று என் தேடல் தொடங்கியது.

அதன் முதல் படியாக‌ நான் ஆடை வடிவமைப்பாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, பிரபல காஸ்டியூம் டிசைனர் சைத்தன்யா ராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசி அவருக்கு வரும் பணிகளை நான் செய்து கொடுத்து வந்தேன்.

ஒருமுறை போத்தீஸ் விளம்பரத்தில் சத்யராஜ் சார் நடித்தார். அப்போது சைத்தன்யா ராவ் கொடுத்த வடிவமைப்பை நான் தைத்துக் கொடுத்தேன். அந்த விளம்பரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுதான் எனக்கான முதல் அடையாளம். அப்புறம், அடுத்தடுத்து நிறைய ஆர்டர்ஸ்!” என்று தன் ‘சுருக்க’ வரலாறு சொல்கிறார் ஏஜாஸ்.

‘பைரவா’ படத்துக்கு நீங்கதான் டைலராமே?

“அந்தப் படம் மட்டுமல்ல சார். ‘கத்தி சண்டை’ படத்தில் விஷால் சார், ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் சிம்பு சார், ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தில் சசிகுமார் சார் என அனைவரின் உடைகளுமே நாங்கள் தைத்துக் கொடுத்ததுதான். ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் சாருக்கான உடைகள் அனைத்துமே நாங்கள் தைத்துக் கொடுத்ததுதான்.

இப்போது விஜய் சார் வரைக்கும் நாங்கள் போய்ச் சேர்ந்துள்ளதை நினைத் தால் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன். இன்னும் பெரியளவுக்குச் செய்ய வேண்டும், நம்மால் முடியும் என்ற உத்வேகம் கிடைத்துள்ளது” என்றார்.

நீங்கதான் நடிகர்களுக்குத் தைத்துக் கொடுக்கிறீர்கள் என்பதை எப்படி நிரூபிப்பீங்க?

“நிரூபிக்க எங்களிடம் ஒன்றுமே இல்லை சார். ஆனா எங்ககிட்ட உண்மை இருக்கு. உடைகளை முதலில் கொடுத்துச் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லும் போது போட்டோ எடுத்துக்கிட்டாதான் நிரூபிக்க முடியும். அதுக்கு எங்களுக்கு நேரமில்லை. ஏனென்றால், எப்போது உடைகள் கேட்பார்கள் என சொல்ல முடியாது.

திடீரென்று நாளை 10 சட்டைகள் இந்த மாதிரியான வடிவமைப்பில் வேண்டும் என்று சொல்வார்கள். அதற்குப் பிறகு பணியில் இறங்கி துணிகளை வெட்டி, தைத்து இறுதி வடிவம் கொடுத்து சொன்ன நேரத்தில் அனுப்பி வைக்க வேண்டும். வாட்ஸ்-அப் மூலமாகத்தான் அனைத்து கம்யூனிகேஷனுமே!” என்று கொஞ்சம் சீரியஸ் ஆனார்.

நீங்க தைத்துக் கொடுத்த உடை சூப்பர்னு எந்த நடிகராவது உங்களிடம் சொல்லியிருக்காங்களா?

“சத்யராஜ் சார் பாராட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றுக்காக சிம்பு சாருக்கு கோட் ஒன்று ஆடை வடிவமைப்பாளர் கேட்டார். அதைப் போட்டு பார்த்துவிட்டு, ‘அளவெடுத்துத் தெச்ச மாதிரி பெர்ஃபெக்ட்டா இருக்கு’ன்னு பாராட்டியதாக ஆடை வடிவமைப்பாளர் சொன்னார். உண்மை என்னன்னா, நாங்க அளவு எதுவுமே எடுக்கலை.

‘ரஜினி முருகன்’ உடைகளைப் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் சார் ‘சூப்பர்’னு பாராட்டினார். மத்தபடி, அனைத்துப் பேட்டிகள் மற்றும் விளம்பரங்களில் எல்லாம் நாங்கள் தைத்த உடைகள் அணிந்து நடிகர்கள் வருவதைப் பார்க்கும்போது கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே கிடையாது”.

அவசர கதியில் இருக்குமே திரையுலகம். எப்படிச் சமாளிக்கிறீங்க?

“நிஜம்தான் சார். திடீரென்று 25 சட்டை வேண்டும் என்பார்கள். உடனே மற்ற ஆர்டர்களை எல்லாம் எடுத்து ஓரம் வைத்துவிட்டு இதை அப்படியே எடுத்து வேகமாகத் தைத்துக் கொடுக்க வேண்டும். அந்த அவசரத்தைச் சமாளிக்க என்னிடம் போதுமான அளவில் ஆட்கள் இருக்காங்க. திரையுலகம் எப்போதுமே அவசரகதியில்தான் இருக்கும். அந்தச் சமயத்தில் எவ்வளவு சிறப்பாக நாம் வேலை செய்கிறோம் என்பதுதான் முக்கியம்!”

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், கால் மணி நேரத்துக்கு ஒரு முறை அவருக்கு கைப்பேசியில் அழைப்புகள் வந்தன. ‘நாளைக்கு கொடுத்துற‌லாம்’, ‘இன்னிக்கு ஈவ்னிங் அனுப்புறேன்’, ‘36 சைஸா... சரி மாத்துறேன்’ என்று பதிலளித்துவிட்டு, இன்னொரு பக்கம் தன் ஆட்களுக்குப் பணிகளை ‘டிக்டேட்’ செய்துகொண்டிருந்தார்.

இறுதியில் ஒளிப்படம் எடுக்க, பணியாளர்கள் அனைவரையும் ஒன்றாக நிற்கவைத்தோம். அப்போதும் ஒருவர் மட்டும் வராமல் தனது பணியே கதி என்றிருந்தார். கட்டாயப்படுத்தி அவரை நிற்கவைத்துப் படம் எடுக்கும்போது, “சீக்கிரம் சார். வேலை நிறைய இருக்குது. முடித்தால்தான் சோறு” என்று குரல் வந்தது. அந்தக் குரலில் தெரிந்தது உழைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் ருசி.

இவங்களையும் கொஞ்சம் கவனிங்கப்பா..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x