Published : 17 Feb 2017 10:09 AM
Last Updated : 17 Feb 2017 10:09 AM

வேலையற்றவனின் டைரி 16 - குருமா கலாட்டா

2013அக்டோபர் மாதத்தில், ஒரு நாள் இரவு. கேரளம், தென்மலாவிலிருந்த அந்த ஹோட்டலில் நாங்கள் நுழைந்தோம். ‘நாங்கள்’ என்றால் 70 பேர். அலுவலக நண்பர்கள் பலரும் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தோம். இரவு உணவாக சப்பாத்தி, குருமாவுக்கு ஏற்கெனவே முன்பணம் கொடுத்து புக் செய்திருந்தோம். ‘இன்னும் சப்பாத்தி தயாராகவில்லை’ என்றார்கள். நாங்கள் அரை மணிநேரமாகக் காத்துக்கொண்டிருக்க, அவர்கள் ஹோட்டலுக்கு உதிரியாக வந்தவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்களே தவிர, எங்களைப் பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையே நண்பன் வள்ளிக்குமரனின் இரண்டு வயதுக் குழந்தைக்குப் பசிக்க, அந்தக் குழந்தைக்கு மட்டுமாவது நாங்கள் சப்பாத்தி கேட்டோம். ஆனால் அவர்கள், “ஒருத்தருக்கு மட்டும் தனியா கொடுத்தா கணக்கு மிஸ்ஸாகிடும். எல்லாருக்கும் சேர்ந்த மாதிரி தர்றோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்ல, நண்ப‌ன் பொங்கிவிட்டான். நண்பனோ, “இன்னைக்கி வெள்ளிக்கிழமை” என்பதையே, “எடுறா அந்த அரிவாள…” என்பது போல மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசக்கூடியவன். அவனை நாங்கள் அடக்கி, ஹோட்டல்காரர்களிடம் பேசி, குழந்தைக்கு சப்பாத்தி வாங்கித் தந்தோம்.

சிறிது நேரம் கழித்து, எங்களுக்கு சப்பாத்தி வந்தது. பரிமாறுவதற்காக இருந்த இரண்டு பேர் மட்டும் பரிமாற முடியாமல் திணற, பரிமாறும் பொறுப்பை நாங்களே ஏற்றுக்கொண்டோம். நாற்பது பேர்தான் சாப்பிட்டிருப்பார்கள். அந்த ஹோட்டல் இன்சார்ஜ் தம்பி திடீரென்று, “குருமா தீந்துருச்சு…” என்றார். நாங்கள் அதிர்ந்தோம். நாங்கள், “இன்னும் முப்பது பேர் சாப்பிட வேண்டியிருக்கு. குருமா இல்லன்னா எப்படிப்பா? வேற எதாச்சும் ஏற்பாடு பண்ணுப்பா” என்று சொல்ல ‘வேறு ஒன்றுமில்லை’ என்று கூறிவிட்டனர். உடனே நண்பர்கள் தமிழிலும், ஹோட்டல்காரர்கள் மலையாளத்திலும், நான் தமிலையாளத்திலுமாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்த இடமே சந்தைக் கடையானது.

உண்மையைச் சொல்லப்போனால், இரண்டு தரப்பிலும் தவறுகள் இருந்தன‌. அந்த ஹோட்டலில் சப்பாத்திக்குத் தனியாக, குருமாவுக்குத் தனியாகக் காசு தர வேண்டும். பொதுவாக இரண்டு சப்பாத்திக்கு, ஒரு வெஜ் குருமா அல்லது முட்டை குருமா தருவார்கள். நாங்கள் சரியாக யோசிக்காமல், ஆளுக்கு நான்கு சப்பாத்திக்கு ஒரு வெஜ் குருமா ஆர்டர் செய்திருந்தோம். அது மட்டுமில்லாமல், ஒரு செட் சப்பாத்திக்கு, அவர்கள் ஒரு சிறிய கப்பில் தந்த வெஜ் குருமாவைத் தொட்டுக்கொண்டெல்லாம் சாப்பிட முடியாது.

பார்த்துக்கொண்டு வேண்டுமானால் சாப்பிடலாம். அவ்வளவு குறைவாக இருந்தது. எனவே குருமா தீர்ந்துவிட்டது. கால் மணிநேர சண்டைக்குப் பிறகு நாங்கள், “கூடுதல் குருமாவுக்கு நாங்க காசு தந்திடுறோம். நீங்க மத்தவங்களுக்குப் புதுசா குருமா செய்ங்க” என்று சொல்ல, அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். குருமா ரெடியாகட்டும் என்று, அன்றிரவு நாங்கள் தங்க வேண்டிய அந்த ஹோட்டல் டார்மிட்டரிக்கு வந்தோம்.

மறுநாள் காலை உணவுக்கும் அங்குதான் சொல்லியிருந்தோம். இரவு உணவே பிரச்சினையாகிவிட்டதால், காலை உணவுக்குப் பக்கத்து ஊர் ஹோட்டலில் இப்போதே சொல்லிவிடலாம் என்று வள்ளிக்குமரன் உள்ளிட்ட எங்கள் இளைஞர் அணியினர் ஒரு வேனில் கிளம்பிச் சென்றனர். நானும், சதீஷ்குமாரும் டார்மிட்டரியில் அனைவருக்கும் இடம் பிரித்துக் கொடுக்கத் தொட‌ங்கினோம். அப்போது வள்ளிக்குமரனின் மனைவி வந்து, “சார்… வெளிய போலீஸ் டிரைவர்ங்க கிட்ட ஏதோ விசாரிச்சுகிட்டிருக்காங்க” என்றவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் வெளியே வந்தேன். என்னுடன் மைதிலி மேடத்தின் கணவரும், கிறிஸ்டோஃபரும் வந்தனர். டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்த அந்த கான்ஸ்டபிளின் முகம் மிகவும் தீவிரமாக இருந்தது. அருகில் ஹோட்டல் இன்சார்ஜ் ஆளும், இன்னொரு வேட்டிக்காரரும் இருந்தார்கள்.

நான் அருகில் சென்றவுடன் போலீஸ்காரர், “இவிடெ டூர் லீடர் ஆரானு?” என்றார்.

நான் லீடர் இல்லையென்றாலும், லீடர்கள் காலை உணவு ஏற்பாடு செய்யச் சென்றிருந்ததால், “அவர்கள் வெளியே சென்றிருக்கிறார்கள்” என்றேன்.

“இப்ப யாரு இன்சார்ஜ்?” என்றார்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல், “நான்தான்” என்றேன்.

“ஒரு கம்ப்ளெய்ன்ட். போலீஸ் ஸ்டேசனுக்கு வரூ” என்று அவர் கூற, எனக்கு வெலவெலத்துவிட்டது. நான் என் வாழ்நாளில் இதுவரையிலும், தமிழ்நாட்டுக் காவல் நிலையப் படிக்கட்டுகளில்கூட ஏறியதில்லை. மனதிற்குள் “சமயபுரம் மாரியம்மா தாயே… இந்தப் பிரச்சினைய ஸால்வ் பண்ணும்மா…” என்று வேண்டிவிட்டு, கேரளத்தில் இருப்பதால் எதற்கு வம்பு? என்று குருவாயூரப்பனையும் ஒரு முறை வேண்டிக்கொண்டேன்.

மலையாளத்தில் பேசினால் கொஞ்சம் வழிக்கு வருவார் என்று, “சார்… எந்தா பிரஸ்னம்?” என்று கேட்டது தப்பாகப் போய்விட்டது. அவர் எனக்கு மலையாளம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு மலையாளத்தில் அள்ளி விட, அதில் எனக்குப் புரிந்தது இதுதான்: “எங்க ஊருக்கு வந்து, எங்க ஆளுங்ககிட்டயே தகராறு பண்றியா? முதல்ல நீ ஸ்டேசனுக்கு வா…”

நான் கவலையுடன் திரும்பி, டார்மிட்டரி வாசலில் நின்றுகொண்டிருந்த என் மனைவியைப் பார்த்தேன். அவர், வள்ளிக்குமரனின் மனைவியிடம் முகத்தில் பெருமையுடன், “எல்லாம் எங்க வீட்டுக்காரரு பாத்துப்பாரு” என்பது போல் பேசிக்கொண்டிருந்தார்.

நான் போலீஸ் அருகில் அமைதியாக நின்றுகொண்டிருந்த வேட்டிக்காரரிடம், “நீங்க யாரு?” என்று கேட்க, அவர் ‘கவுன்சிலர்’ என்றார். நான் ஒரே சமயத்தில் அரசியல், முதலாளித்துவ, காவல்துறை எதிரிகளை சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் அவர்கள் ஊரில் இருக்கிறோம். இரவு நேரம் வேறு. சண்டை பெரிதாகி, இடத்தைக் காலி பண்ணுங்கள் என்று சொன்னால் மேலும் சிக்கலாகிவிடும். எனவே உள்ளுக்குள் வெகுண்டெழுந்த பகத்சிங்கை அடக்கிவிட்டு, அண்ணல் காந்தியை வெளியே கொண்டு வந்தேன். அமைதியாக‌, ‘என்ன சார் கம்ப்ளெயின்ட்?’ என்றேன்.

“நீங்க பில் செட்டில் பண்ண மாட்டேன்னு சொன்னீங்களாமே?” என்று கவுன்சிலர் நன்கு தமிழ் பேச, நான் அவரைப் பரவசத்துடன் பார்த்தேன்.

“அப்படில்லாம் இல்லையே… குருமா இல்லன்னு சொன்னாங்க” என்று நான் குருமா பிரச்சினையை விரிவாகக் கூறினேன்.

“அதெல்லாம் சரி… ஆனா நீங்க பணம் தர மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. அதனாலதான் கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்காங்க.”

“அப்படில்லாம் சொல்லவே இல்லையே… குருமா பண்ணித் தாங்கன்னுதான் சொன்னோம்”

“இல்ல. ஓராள் பறஞ்சு…” என்று ஹோட்டல் இன்சார்ஜ் கூறினார். எனக்குப் புரிந்துவிட்டது. எல்லாம் மொழிப் பிரச்னைதான். சண்டையின்போது ஒருவர் “எத்தனை பேரு இன்னும் சாப்பிடலையோ, அவங்களுக்குப் பணம் கொடுக்க மாட்டோம்” என்றுதான் கூறினார். ஹோட்டல் இன்சார்ஜ், நாங்கள் மொத்தப் பணத்தையும் தர மாட்டோம் என்று நினைத்துக் கொண்டுவிட்டார். நாங்கள் அவ்வாறு கூறவில்லை என்று சொல்லியும், அவர்கள் அதைக் கேட்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்த்தேன்.

வள்ளிக்குமரனின் மனைவி, கையில் கவிநயாவுடன் சற்று தள்ளி நின்றிருந்தார். உடனே நான் கவிநயாவைக் காண்பித்து, “இந்த ரெண்டு வயசுக் குழந்தைக்கு சப்பாத்தி கேட்டோம் சார். அதுகூட முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்று கூற, அதற்கு நல்ல எஃபெக்ட் இருந்தது. சட்டென்று காட்சிகள் மாறின. ஒரு வினாடி கவிநயாவைப் பார்த்த போலீஸ்காரர், “நீ குழந்தைக்கு சப்பாத்தி தர மாட்டன்னு சொன்னியா?” என்று ஹோட்டல் ஆளிடம் சீறினார்.

“இல்ல… கணக்கு மிஸ்ஸாயிடும்”

“சின்னப்பிள்ள… எத்தனை சப்பாத்தி சாப்பிட்டுடும்?” என்று கவுன்சிலரும் சேர்ந்து ஹோட்டல்காரரைச் சத்தம் போட, நான் “அப்பாடா” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். பின்னர் இறுதியாக, “குருமா செஞ்சு மீதிப் பேருக்கு சப்பாத்தி கொடு. சார்… நீங்க பில்ல செட்டில் பண்ணிடுங்க…” என்று அவர்கள் கூறிவிட்டுச் செல்ல, நான் கவிநயாவை நன்றியுடன் பார்த்தேன்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x