Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

3 போலி ஆசிரியர்கள் கைது - 15 ஆண்டுகளாக சம்பளம் பெற்றது அம்பலம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரி யர் பணியில் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 55 போலி ஆசிரியர்கள் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சம்பளம் மற்றும் அரசு சலுகைகளை அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த குப்பன், ராஜா, முருகன் ஆகிய மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். குப்பன், ராஜா இருவரும் கொடுங்கையூரிலும், முருகன் கே.கே.நகரிலும் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கைதான மூன்று பேரும் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கொடுத்து பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களை போலியாக பெற்றுள்ளனர். 1998–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர்கள், கடந்த 15 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக சம்பளத்துடன் சேர்த்து அரசின் அத்தனை சலுகைகளையும் பெற்றுள்ளனர். இவர்கள் சிக்கியதே சுவாரஸ்ய மான விஷயம். யாரோ ஒருவர் போட்ட மொட்டைக் கடிதம்தான் இவர்களைக் காட்டிக் கொடுத்தது.

சென்னை மாநகராட்சிக்கு திருவண்ணாமலை அருகே உள்ள துரிஞ்சாபுரத்தில் இருந்து பெயர் இல்லாமல் மொட்டைக் கடிதம் ஒன்று வந்தது. அதில் 58 ஆசிரியர்களின் பெயர், முகவரி, அவர்கள் பணிபுரியும் பள்ளி ஆகிய விவரங்கள் இருந்தன. 'இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள். சந்தேகம் இருந்தால் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

அது மொட்டைக் கடிதம்தானே என்று மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் செய்யவில்லை. அதுபற்றி விசாரிக்க கல்வித் துறைக்கு கடிதத்தை அனுப்பி வைத்தனர். கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட ஆய்வில், அந்தப் பட்டியலில் இருந்தவர்களில் 10 பேர் போலியான கல்விச் சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 10 பேரும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில்தான் பணிபுரிந்து வரு கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக மூன்று பேரை கைது செய்துவிட்டோம்.

மற்ற 7 பேரும் தாங்கள் கொடுத்தது போலிச் சான்றிதழ் இல்லை என்று கூறிவருகின்றனர். அதனால், அவர்கள் உள்பட பட்டியலில் இடம் பெற்றுள்ள 55 பேரின் சான்றிதழ்களையும் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் 55 பேரும் கைது செய்யப்படுவார்கள்.

அதே நேரத்தில் இவர்கள் யாரிடம் இருந்து போலிச் சான்றிதழ்களை வாங்கினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்க ளையும் கைது செய்ய திட்ட மிட்டுள்ளோம்.

போலி ஆசிரியர்கள் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த மொட்டை கடிதத்தை அனுப்பியவர் யார்? என்பது பற்றி விசாரித்தோம். இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இவ்வாறு போலீஸ் அதிகாரி கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x