Published : 13 Nov 2013 12:00 AM
Last Updated : 13 Nov 2013 12:00 AM

வீடு வந்தாச்சு!

பெங்பெங் பெங்பெங்னு ஒரு பெங்குவின் அண்டார்டிக்காவுல இருந்துச்சாம். பெங்பெங்அநியாத்துக்கு வால்தனம் பண்ணுமாம். ஒரு நாள் அதோட அம்மாவுக்கு தெரியாம ஒரு பெரிய பனிக்கட்டில சறுக்கிக்கிட்டு கடல்ல நீச்சலடிக்கப் போயிடுச்சாம். அந்தநேரம் பாத்து ஒரு பயங்கரமான புயல் வீசுச்சாம்.

“அய்யோ புயல்… அய்யய்யோ புயல்”னு கத்துச்சாம்.

அதோட சத்தம் யாருக்குமே கேக்கல. புயல், பனிக்கட்டியை அப்படியே தூக்கிக்கிட்டு ரொம்பதூரம் போயிடுச்சாம். புயலுக்குள்ள மாட்டிக்கிட்ட பெங்பெங், அப்படியே மயக்கம்போட்டு பனிக்கட்டி மேல விழுந்துடுச்சு.

ரொம்ப நேரம் கழிச்சு முழிச்சு பாத்த பெங்பெங், தூரத்துல வெள்ள வெள்ளையா ஏதோதெரிய “ஹையா பனி!” அப்படின்னு நீந்திக்கிட்டு கரையில போய் விழுந்துச்சாம்.ஆனா அது பனி இல்ல. மணல். அதுவும் சுடு மணல். “அய்யோ! சுடுதே…அய்யய்யோ சுடுதே”னு கத்திக்கிட்டே மணலைத் தாண்டி குதிச்சு ரோட்டுக்கு வந்துச்சாம் பெங்பெங்.

“எங்கே இருக்கேன்னு தெரியலை… வீட்டுக்கு எப்படி போவேன்னு புரியல”ன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப ரோட்டுக்கு எதிர் பக்கம் 'முகுரன் இட்லி கடை'யைப் பார்த்துச்சு. அங்கே போகலாம்னு ரோட்டைத் தாண்டும் போது ஒரு பெரிய லாரி அதோட தலைக்குமேல ஸ்வொய்ங்ங்னு போச்சாம். பயந்துபோன பெங்பெங், தாவித் தாவி இட்லிகடைக்குள்ளே ஓடுச்சாம்.

இட்லி கடைக்குள்ளே எல்லாரும் சாப்புடுறதைப் பார்த்த பெங்பெங், அதுவும் மேஜை மேல ஏறி உட்கார்ந்துகுச்சாம்.

கருப்பு நெறத்துல இருந்த பெங்பெங்கை ஸ்பாஞ்சுனு நெனச்ச ஓட்டல் பையன், அதை எடுத்து எல்லா மேஜையையும் துடைச்சான். அப்புறம் அதை எடுத்துக்கிட்டுப்போய் சமையலறையில பாத்திரம் கழுவுற தொட்டியில போட்டுட்டான்.

கோபமா திரும்புன பெங்பெங், ஒரு தட்டு முழுக்க ஆவி பறக்க அடுக்கி வெச்சிருந்தஇட்லியைப் பாத்து “ஹையா பனி!”ன்னு குதிச்சுப்ய் உட்கார்ந்துச்சாம். “அய்யோ சுடுதே! அய்யய்யோ சுடுதே!”ன்னு குதிச்சு ஓடிப்போய் ஒரு பெரிய ஃப்ரீசர்

பெட்டிக்கு முன்னால நின்னுச்சாம். அங்கே வந்த ஒரு சமையல்காரர் ஃப்ரீசரைத் தொறக்க, அதுல இருந்து சில்லுன்னு காத்து வந்துச்சாம். அதைப் பார்த்த பெங்பெங், ஸ்வொய்ங்னு ஒரு குதி குதிச்சு அந்த ஃபிரீசர் டப்பாக்குள்ளே போய் உட்க்கார்ந்துகுச்சாம்.

“ஹையா வீடு வந்தாச்சு! வீடு வந்தாச்சு”ன்னு சிரிச்சுக்கிட்டே இருந்துச்சாம் பெங்பெங்.

நன்றி: மெல்லினம், பாட்டி கதை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x