

தனியார் கல்லூரிகளில் 43 இடங்கள் நிரப்பப்படாமல் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உட்பட 5 பட்டப்படிப்புகளுக்கான இந்த ஆண்டு கவுன்சலிங் முடிந்துள்ளது.
தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இரண்டு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம் , யுனானி மருத்துவம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக என நான்கு கல்லூரிகள் உள்ளன. இதே போல ஐந்து தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், ஏழு தனியார் ஓமியோபதி கல்லூரிகள், மூன்று யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.
ஆறு அரசு கல்லூரிகளில் 296 இடங்கள் மற்றும் 18 தனியார் கல்லூரிகளில் 684 இடங்கள் என மொத்தம் 980 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2013-2014ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கவுன்சலிங் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும் மற்றும் 28, 29-ம் தேதிகளில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நடந்தது. முதல் கட்ட கவுன்சலிங் முடிவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 97 இடங்கள் காலியாக இருந்தன.
இதனை தொடர்ந்து காலியாக உள்ள 97 இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி நடந்தது.
இந்த கவுன்சலிங் முடிவில் அரசு கல்லூரிகளில் காலியாக இருந்த அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டது.
தனியார் கல்லூரிகளில் மட்டும் 43 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சலிங் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இறுதிக்கட்ட கவுன்சலிங் நடத்தப்படவில்லை.
இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரண்டு கட்ட கவுன்சலிங் முடிவில் தனியார் கல்லூரிகளில் 43 இடங்கள் காலியாக இருந்தன. இறுதிக் கட்ட கவுன்சலிங்கை நடத்தி காலியாக உள்ள 43 இடங்களை நிரப்ப முதலில் திட்டமிட்டு இருந்தோம்.
அதுவும், நவம்பர் 30ம் தேதிக்குள் கவுன்சலிங்கை நடத்த வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பதால், தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர முன்வரவில்லை. அதனால், கவுன்சலிங்கை நடத்த முடியவில்லை. 43 இடங்களை நிரப்பாமல் கவுன்சலிங் முடிந்துவிட்டது.
இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை, தாங்களாகவே விருப்பப்படி நிரப்பிக் கொள்ளும்படி கல்லூரி நிர்வாகங்களிடம் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.