Published : 20 May 2017 11:12 AM
Last Updated : 20 May 2017 11:12 AM

வீட்டு மனை வாங்கப் போகிறீர்களா?

வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்துவருகிறது. பின்னால் வீடு கட்டுவதற்காகவும், சந்ததியினருக்கான முதலீடாகவும் இந்த வீட்டு மனை இப்போது பார்க்கப்படுகிறது. இன்றைக்கு வேலையின் பொருட்டு வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியிருப்பதால் அங்கேயே தங்களுக்கான வீட்டு மனைகளை வாங்கிவருகிறார்கள். சிலர் நில மதிப்பு உயரும் சாத்தியம் உள்ள பகுதிகளைத் தேடி முதலீடு செய்கிறார்கள். இம்மாதிரி தெரியாத இடத்தில் வீட்டு மனை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

நமது சொந்த ஊரில் மனை வாங்கும்போது அந்த நிலத்தில் உள்ள வில்லங்கம், வாரிசுகள் யாரும் இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். அல்லது குறைந்தபட்சம் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் என்றால் அந்தச் சம்பந்தப்பட்ட இடத்தைத் தொடர்ந்து பார்வையிட முடியும். தரகர்களை மட்டுமே நம்பி வெளியூரில் வீட்டு மனை வாங்கும்போது பல விஷயங்களில் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

நாம் வாங்கப் போகும் இடம் வீடு கட்டுவதற்கான நிலமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவுபெற வேண்டும். தாய்ப் பத்திரம் கடந்த 30 ஆண்டுகளுக்குச் சரி பார்க்கப்பட வேண்டும்.

காலி நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் உள்ளாட்சிகளுக்கான வழித்தடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.

அதனால் முறையாக உள்ளாட்சிகளின் வழித்தடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உள்ளாட்சிகளுக்கு முறையாக இடம் ஒதுக்கும்போதுதான் அந்த அமைப்பு நம் பகுதிக்கான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரும்.

வெளியூர்களில் இதுமாதிரி விற்பனைசெய்யப்படும் இடங்களில் பெரும்பாலானவை முறைப்படி உள்ளாட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லும்போதுதான் இது நமக்குத் தெரிய வரும். அதுபோல ஊருக்கு வெளியே நிலம் வாங்கும்போது அதில் ஓடைகள், வாய்க்கால் போன்ற மழைநீர்ப் பாதைகள் இருந்தனவா என்பதைக் குறித்து விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

மழைநீர் வரும் பாதை என்றால் பிற்காலத்தில் பிரச்சினைகள் வரக் கூடும். மேலும் மழைக்காலத்தில் நீர் தேங்கும். முக்கியமான பிரச்சினை இம்மாதிரியான நிலத்தில் நிலத்தடி மண் ஈரத்தன்மையுடன் இருக்கும். அதனால் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் வலுவாக இட வேண்டியதிருக்கும்.

மனையின் சாலை அளவு உள்ளாட்சி அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மாநகராட்சி என்றால் 24 அடி, நகராட்சி என்றால் 23 அடி இருக்க வேண்டும். அப்போதான் உங்க மனைக்கு அப்ரூவல் கிடைக்கும்.

லே அவுட்டில் மனையைப் பார்க்கும்போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x