Last Updated : 04 Feb, 2014 01:05 PM

 

Published : 04 Feb 2014 01:05 PM
Last Updated : 04 Feb 2014 01:05 PM

அத்துமீறல்களை நியாயப்படுத்தலாமா?

இந்தியக் காடுகளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 1,00,000 புலிகள் இருந்ததாகவும், ஆனால் இன்றைக்கு சுமார் 1,700 புலிகள் மட்டுமே உள்ளதாகவும் அரசு அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் புலி பாதுகாப்புத் திட்டத்திற்கு194 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்படி ஒரு பக்கம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், ஆட்கொல்லியாகக் கருதப்பட்ட ஒரு வேங்கைப் புலியை வனத்துறைக்கு உதவ வந்த அதிரடிப்படை கொன்றுள்ளது பெரும் அதிர்ச்சி தரும் செய்தி.

எந்த ஒரு காட்டுயிராலும் மனிதருக்குத் தீங்கு வராமல் அரசு காப்பாற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு விலங்கு மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கும்போது எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்கிறதோ, அதன்படிதான் இப்புலியைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். ஆனால். அதே நேரம் அந்தப் புலி கொல்லப்படுவதற்கு முன் செய்யப்பட்டிருக்க வேண்டிய சில விதிமுறைகளைப் பின்பற்றினார்களா என்பதுதான் இப்போது கேள்வி.

இம்மாதிரி ஆட்கொல்லிகளைக் கொல்லவும் சில வரைமுறைகள் உள்ளன என்பது சாதாரண மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வனத்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினருக்கு தெரியாமல் போனது வியப்புதான். எப்போதுமே உயிரைக் கொல்வதை இறுதி முயற்சியாகக் கொள்ள வேண்டும்.

இம்மாதிரியான தருணங்களில் மாநிலத்தின் தலைமை வனக் காப்பாளர் (சீஃப் ஒயில்டுலைஃப் வார்டன்) தான் காட்டுயிரைக் கொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால் அப்படிக் கொல்வதற்கு முன் அவ்விலங்கைப் பிடிப்பதோ, மயக்க மருந்தைப் பயன்படுத்திக் காட்டுக்குள் கொண்டுவருவதோ அல்லது வேறொரு காட்டுப் பகுதிக்குக் கொண்டுசெல்வதோ சாத்தியமே இல்லை என்று தீர்மானகரமாக முடிவு செய்த பிறகுதான், அப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

ஆனால், தற்போது நடந்த சம்ப வத்தில் இப்படி எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் தலைமை வனக் காப்பாளர் முகாமிட்டு இருந்தபோதும், மேலே குறிப்பிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தாக எந்தத் தகவலும் இல்லை என்பது வருந்தத்தக்கது.

பயோனீர் நாளிதழில் பெயர் சொல்ல விரும்பாத ஒரு உயர் வன அதிகாரி `இச்செயல் நம் வனத்துறையின் தொழில் தகுதித் திறமின்மையைக் காட்டு கிறது. இப்புலியை மயக்க மருந்தைச் செலுத்தியோ அல்லது பொறி வைத்துக் கூண்டுக்குள் அடைத்தோ வனத்துறை பிடித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இருளில் கண்மூடித்தனமாக அதைச் சுட்டுக் கொன்றது தவறு' என்று கூறி இருக்கிறார். மேலும் அவரே, இப்புலியைச் சுட்ட பிறகுதான் அது ஒரு ஆண் என்பதே வனத் துறைக்குத் தெரிய வந்துள்ளது. அதற்கு முன் வரை அது ஒரு பெண் புலி என்று கூறிவந்ததே அதற்குச் சான்று என்றும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் இப்புலி கொல்லப்பட்ட செய்தி வெளியான போது காவல் துறை, அதிரடி படை, வனத் துறையைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து கோஷம்போட்டும், நடனமாடியும் புலி கொல்லப்பட்டதைக் கொண்டாடியதைப் பார்த்தபோது அதிர்ச்சி அளித்தது. குற்றவாளியோ, ரௌடியோ முறையின்றிக் கொல்லப்படும்போது எப்படிப்பட்ட எதிர்வினை பதிவாகுமோ, அதேபோலத் தான் இதிலும் நடந்துள்ளது.

அதற்கும் மேலாக, காட்டுயிரைக் காப்பாற்ற வேண்டிய வனத்துறையைச் சேர்ந்தவர்களே, அதைக் கொன்றதைக் கொண்டாடியது கவலை தருகின்றது. இது போன்ற நடவடிக்கைகள் புலி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பிரசாரமாகவே அமையும்.

இனிமேலாவது இது போன்ற புலிகள் ஏன் மக்களைத் தாக்குகின்றன என்பதற்கான காரணத்தைச் சரியாக ஆராய்ந்து, அதைச் சரி செய்ய வேண்டிய முயற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வனத்துறை இருக்கிறது.

-கட்டுரை ஆசிரியர்,
ஆங்கிலப் பேராசிரியர், காட்டுயிர் ஆர்வலர்.

தொடர்புக்கு: mcwhale@svce.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x