Published : 13 Feb 2017 10:17 AM
Last Updated : 13 Feb 2017 10:17 AM

டிரைவர் தேவைப்படாத கார் தயாரிப்பில் களமிறங்கும் இஸ்ரேல்

ஆட்டோமொபைல் துறை என்றாலே அனைவரது நினைவுக்கு வரும் பகுதிகள் அமெரிக்காவின் டெட் ராய்டு, அடுத்து ஜப்பான், சொகுசு காருக்கு ஜெர்மனி. இவை தவிர பிற நாடுகளில் வாகனங்கள் தயாரிக்கப் பட்டாலும் அவை சர்வதேச அளவில் பிரபலமாகவில்லை என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத கார் தயாரிப்பு என்றவுடன் தங்கள் நாடு நினைவுக்கு வர வேண்டும் என்பதில் தீவிர அக்கறை காட்டி வருகிறது இஸ்ரேல்.

இது தொடர்பாக கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த ஒப்பந்தம் பேட்டரி வாகனத் தயாரிப்பில் புதிய அத்தியாயம் பிறக்க வழி ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் நெதன்யா முன்னோடி மையம், டிரைவர் தேவைப்படாத கார் தயாரிப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. 4 கோடி டாலர் செலவி லான இந்த மையத்தில் இரு நாடுகளும் சம பங்குகளைக் கொண்டிருக்கும். இந்த மையத்தில் 80 ஆராய்ச்சியாளர்கள் பணி யில் ஈடுபடுவர். இதில் 40 பேர் அமெரிக் கர்கள், 40 பேர் இஸ்ரேலியர்களாவர்.

இந்த மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மற்றும் அமெரிக்காவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆன்டனி ஃபாக்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மையம் சைபர் பாதுகாப்பு குறித்த ஆய்வு மற்றும் டிரைவர் தேவைப்படாத வாகனத் தயாரிப்புக்கான நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும்.

வாகனத் தயாரிப்பில் இந்த நுட்பம் மிகவும் பாதுகாப்புத் தன்மையை ஏற்படுத்தும். உயிர் பாதுகாப்பு, விபத்து குறைவு, வாகன நெரிசல் குறைவு, எரி பொருள் சிக்கனம் உள்ளிட்ட அனைத் துக்கும் வழிவகுக்கும் என்று இஸ்ரேல் கட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகள் கார்களில் பயணிப்பதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டில் போக்குவரத்துத் துறை எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கு உரிய கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் உருவாக்க ஆராய்ச்சியில இந்த மையம் ஈடுபடும். இது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடும் என்று அவர் கூறினார்.

வாகன விபத்துகளைத் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப் பிட்ட பாக்ஸ், பொது போக்குவரத்தில் இத்தகைய வாகனங்களை பயன்படுத்து வது குறித்த ஆராய்ச்சியையும் இம்மையம் மேற்கொள்ளும் என்றார். விபத்து தவிர்ப்பு என்பது மிகவும் தேவையான அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்ரேலில் ஹைஃபா எனுமிடத்தில் நடந்த சாலை விபத்தில் 17 வயது பெண் உயிரிழந்தார். 37 பேர் காயமடைந்தனர். லாரியும், பஸ்ஸும் மோதிக் கொண்ட கோர விபத்து, பொதுப் பயன்பாட்டு வாகனங்களின் பாதுகாப்புத் தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. இதன் வெளிப்பாடாகவே இத்தகைய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கட்ஸ் குறிப்பிட்டார்.

இந்த விபத்துக்குப் பிறகு வாகனங் களில் கட்டுப்பாடு கருவிகள் பொறுத்தப் பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், மேம்பட்ட தொழில்நுட்ப உருவாக்கத்துக்கு புதிய ஆராய்ச்சி மையம் வழி கோலும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் சுற்றுப் பயணம் செய்த பாக்ஸ், அங்குள்ள மொபிலியே நிறு வனத்தைச் சுற்றிப் பார்த்தார். இந்நிறு வனம் சாலையில் ஏதேனும் குறுக்கீடு கள் இருந்தால் அது குறித்து டிரை வருக்கு தெரிவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார் தயாரிப்பில் இரு நாடுகளும் கூட் டாக இணைந்து செயல்பட திட்டமிட் டுள்ளன. ஸ்மார்ட் காரில் பயன்படுத்தப் படும் நுட்பத்தை தனது பொது போக்குவரத்துக்கான வாகனங்களில் செயல்படுத்திப் பார்க்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான ஆராய்ச்சியை நெதன்யாகு மையம் மேற்கொள்ளும்.

பொதுப் போக்குவரத்தில் புதிய நுட் பத்தைப் பயன்படுத்திப் பார்க்க பிட்ஸ் பர்க், பென்சில்வேனியா, கொலம்பஸ், ஒஹையோ, ஆஸ்டின், டெக்சாஸ், டென் வர், கொலராடோ, சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, போர்ட்லாந்து, ஒரே கான், கன்சாஸ் சிட்டி, மிசௌரி ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது தவிர தேசிய நெடுஞ்சாலையில் இத்தகைய நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்ப்பது குறித்தும் ஆராயப்படுகிறது.

இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல் கலைக் கழகம், டெக்னியோன், டெல் அவிவ் பல்கலைக் கழகம், வெய்ஸ்மென் உள்ளிட்டவை சர்வதேச அளவில் பிரபலமான கல்வி மையங்களாகும். இவற்றில் தகவல் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மட்டுமின்றி டிரைவர் தேவைப்படாத வாகன தயாரிப்பு குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

இஸ்ரேல் நிறுவனங்கள் தொழில் நுட்ப உருவாக்கத்தில் மிகவும் பிரபலமானவை. ஏற்கெனவே இங்குள்ள நிறுவனம் உருவாக்கிய ஸ்மார்ட்போன் செயலி வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். வாகன நெரிசல் மிகுந்த பகுதியை அடையாளம் காட்டும் வகையில் கிரவுட்சோர்ஸ் தகவலடிப்படையில் இது செயல்படுகிறது. இதை பல கோடி டாலர் தொகைக்கு கூகுள் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மொபிலியே நிறுவனம் வாகன பாது காப்புக்கு உருவாக்கியுள்ள விபத்து எச்சரிக்கை கருவி மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். அத்துடன் இந்நிறுவனம் உருவாக்கியுள்ள முப்பரிமான வரைபடம் எதிர்காலத்தில் டிரைவர் தேவைப் படாத வாகனங்களுக்கு மிகவும் உப யோகமானதாக இருக்கும் என்று கருதப் படுகிறது. இதனாலேயே இந்நிறுவனத் துடன் ஜெனரல் மோட்டார்ஸ், நிசான் மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறு வனங்கள் ஒப்பந்தம் செய்துகொண் டுள்ளன.

அனைத்துக்கும் மேலாக மற்றெந்த நாடுகளைக் காட்டிலும் வென்ச்சர் கேபிடல் (துணிகர முதலீடு) அதிகம் ஈர்க்கும் நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களைக் காட்டிலும் அதிக அளவுக்கு இங்குள்ள நிறுவனங்கள் முதலீடுகளை ஈர்க்கின்றன. கலிபோர்னி யாவைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இஸ்ரேலில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆண்டுக்கு ஆயிரம் ஸ்டார்ட் அப் வீதம் கடந்த 15 ஆண்டுகளில் 15 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இங்கு உருவாகியுள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு வெற்றிகரமாக செயல்படு கின்றன மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு காலத்தில் இங்குள்ள தாய்மார்கள் தங்கள் மகன் டாக்டராக வர விரும்பினர். ஆனால் இப்போது இவர்களின் மனப்போக்கு முற்றிலுமாக மாறிவிட்டது. தங்களின் மகன் தொழில்முனைவோராக வர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த அளவுக்கு தொழில்முனைவு இங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் 50 லட்சம் வாகனங் கள் அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுவனங்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு 40 கோடி டாலர் அளவ கூடுதல் செலவு பிடித்துள்ளது. தொழில்நுட்பக் கோளா றில் பெரும்பாலானவை சாஃப்ட்வேர் சார்ந்தவையே அதிகம். இஸ்ரேல் நிறு வனங்களின் ஒத்துழைப்பினால் இத் தகைய கோளாறுகளை நிவர்த்திக்க முடியும் என்று அமெரிக்க ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் நம்புகின்றன. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இஸ்ரேலியர்கள் திகழ்கின்றனர்.

இஸ்ரேலுடனான அமெரிக்க கூட்டுறவு ஆட்டோமொபைல் துறையில் புதிய அத்தியாயம் படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x