Last Updated : 13 May, 2017 11:17 AM

 

Published : 13 May 2017 11:17 AM
Last Updated : 13 May 2017 11:17 AM

வீட்டுக் கடன்: வங்கிகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

பெரிய நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய வாராக் கடன்களை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. ஆனால், இந்த நிலையிலும் வீட்டுக் கடனை வங்கிகள் சுணக்கம் காட்டாமல் வழங்கி வருகின்றன, இதற்கு என்ன காரணம்?

அண்மையில் கடன் தகவல் நிறுவனமான ‘சிபில்’ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை முழுக்க முழுக்க வீட்டுக் கடனுக்குச் சாதகமான அறிக்கை. அந்த அறிக்கையின் சாராம்சம் இதுதான்.

‘வங்கிகள், 2012 16-ம் ஆண்டு காலகட்டத்தில் 35 லட்சம் பேருக்குக் குறைந்த விலை வீடுகள் பிரிவில் கடன் வழங்கி உள்ளன. இந்த வகைக் கடன் பிரிவில் வங்கிகள் ஆண்டுக்குச் சராசரியாக 23 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. அதே சமயம் இதே காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்த தவறியோர் அல்லது தாமதமாகச் செலுத்துபவர்களின் கடன் தொகை 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் குறைந்த விலை வீட்டுவசதிக்கான கடன்களை வழங்க வங்கிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு வீட்டுக் கடன் பிரிவில் பெரிய அளவிலான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மதிப்பீட்டின்படி குறைந்த விலை வீடுகள் பிரிவில் சராசரியாக 4.10 லட்சம் ரூபாய் கடனாகப் பெறப்படுகிறது. இது 2009 10-ம் நிதியாண்டில் 4.80 லட்சம் ரூபாயாக இருந்தது. வீடுகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறைந்த விலை வீடுகளுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இப்பிரிவுக்கான வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், சிறிய வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவையும்கூட குறைந்த விலை வீட்டுக் கடன் பிரிவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’.

சிபிலின் அறிக்கை இப்படிப் போகிறது. வீட்டுக் கடனைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திவிடுவதால் வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகின்றன. மேலும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற மக்களின் தீராத விருப்பமும்கூட இதற்கு ஒரு காரணமாகும்.

வரிச் சலுகை

மேலும், குறைந்தவிலை வீடுகள் கட்ட மத்திய அரசும் வரிச் சலுகைகளை அளித்து மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த வரிச் சலுகைகள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குக் கிடைக்கின்றன. வரிச் சலுகை கிடைப்பதால் குறைந்த அளவிலான வீட்டுக் கடனைப் பெற்று நடுத்தர வருவாய் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினரும் வீடு கட்ட அல்லது வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாகவும் வீட்டுக் கடன் வாங்குவது அதிகரிக்கிறது. குறிப்பாக 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட குறைந்த விலை வீடுகளுக்குக் கடன் கேட்டால், வங்கிகள் வழங்க ஆர்வம் காட்டுகின்றன.

வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடன்களைத் திரும்ப செலுத்தாமல் ஏய்த்துக்கொண்டிருப்போர் மத்தியில் குறைந்த விலை வீடுகளுக்குக் கடன் வாங்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாமதமின்றி நேர்மையாக வீட்டுக் கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்துவதில் சுணக்கம் ஏற்படவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகின்றன.



வீட்டுக் கடன் பெறுவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2012 16-ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கு வீட்டுக் கடன் அளித்த வகையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பிரிவில் தொடங்கப்பட்ட புதிய கணக்குகளில் இந்த ஐந்து மாநிலங்களும் 60 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x