Last Updated : 04 Dec, 2013 09:40 AM

 

Published : 04 Dec 2013 09:40 AM
Last Updated : 04 Dec 2013 09:40 AM

‘புதிதாக ஒரு கதவு திறந்திருக்கிறது’ : நடிகர் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார், ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் என்ற அடையாளத்தோடு லகானைப் பிடித்தவர் தயாரிப்பாளர், நடிகர் என்று விறுவிறுவென சினிமாவின் அடுத்தடுத்த பரிமாணங்களை தொட்டுத் தொடர்கிறார். மழை ஆசீர்வதித்த ஒரு மாலையில் சென்னைக் கடற்கரைச் சாலையில் ஒரு பயணத்தில் ஜி.வி.பிரகாஷிடம் பேசியதிலிருந்து…

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலா வரைக்கும் சினிமாவின் முக்கியமானவர்களின் பாராட்டையும் இளம் வயதிலேயே வாங்கிவிட்டீர்களே?

ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் பொய் பேச மாட்டேன். நேர்மையா இருப்பேன். இந்த விஷயங்கள்தான் எனக்கு இதையெல்லாம் தேடித் தருதுன்னு நினைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தை நினைவுபடுத்தும் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது ‘பென்சில்’ என்று பெயர் வைக்க காரணம்?

அதுதான் கதை. அதை சொல்லிட்டா திரில்லிங் குறைச்சிடுமே. நம் ஒவ்வொருவருக்கும் பள்ளி சார்ந்த அழியாத நினைவுகள் மனதில் பரவிக்கிடக்கும். அந்த பாதிப்பு, விளைவுகளை எல்லாம் அழகழகா இயக்குநர் கோர்த்திருக்கார். அதில் என்னோட அனுபவங்களும் சின்னச்சின்னதா சேர்த்திருக்கோம். இப்போதைக்கு இதுபோதுமே.

தயாரிப்பாளர், நடிகன் என்கிற பயணம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை பாதிக்காதா?

மத்தவங்களோட பார்வைக்கு வேணும்னா அப்படித்தெரியலாம். எனக்கு அப்படித்தோணல. எல்லா வேலைகளும் அழகா நகரும். என் வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் எல்லாம் நானே எடுத்ததுதான். இப்போதும் அப்படித்தான்.இப்போ ஒரு புதுக்கதவு திறந்திருக்கு. என் வாழ்க்கைப் பயணத்தில் இதுவும் ஒரு மைல்கல்.

இயக்குநர் முருகதாஸ்தான் முதலில் எனக்குள் நடிக்கும் எண்ணத்தை விதைத்தார். அவர் சொல்லும்வரைக்கும் நான் யோசித்ததுகூட இல்லை. அப்போ பாக்ஸ் ஆபிஸுக்கு ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அது ட்ராப் ஆகிடுச்சு. அதன்பின் என் நண்பன் மணிநாகராஜ் வந்து ‘பென்சில்’ கதையை சொன்னான். எனக்கும் பிடித்திருந்தது. நடிச்சிருக்கேன். இந்தப்படத்துக்கு பிறகுதான் என் அடுத்தடுத்த நடிப்பு குறித்த முடிவுகளை எடுப்பேன்.

டிசம்பர் வெளியீடாக தயாரிக்கிற ‘மதயானைக்கூட்டம்’ படம் இதுவரைக்கும் தமிழ் சினிமா தொடாத கலாச்சாரப் பதிவு. ஒரு முழுமையான வாழ்க்கைப் பதிவை சொல்லணும்கிற விருப்பத்தோட அர்த்தம்தான் இந்தப்படம். கமர்ஷியல், ஆக்‌ஷன், திரில்லர் என்று வெவ்வேறு தளத்தில் படம்பிடித்திருக்கிறோம். இதுவும் நல்ல விஷயம்னு மனதில் பட்டது. அதையும் செய்து பார்த்தேன். இதில் மூன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்தவும் செய்கிறோம்.

புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம்?

ஜெயிச்சவங்களுக்கு சின்னதா ரிலாக்ஸ் தேவைப்படும். முதல் தேடல், முதல் வாழ்க்கை என்கிறபோது அதை சரியா பிடித்துக்கொள்ளத் தோணும். புதிதா வர்றவங்க அதை கவனமா முழு ஆற்றலை செலுத்திப் பிடிச்சிக்கிறாங்க. நான் தொடர்ந்து புதுமுகங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருப்பேன்.

டிசம்பர் மாதம் தொடங்கிடுச்சு. உங்கள் காதல் மனைவி சைந்தவியின் கச்சேரிகள் நடக்கும். நிகழ்ச்சிகளில் உங்களையும் பார்க்க முடியுமா?

நேரமே இல்லை. 48 படங்களுக்கு இசை வேலைகள் செய்துகொண்டிருக்கிறேன். ஷூட்டிங் வேறு இருக்கிறது. இப்போ மட்டும்னு இல்லை, சைந்தவி ரொம்ப வருஷங்களாவே டிசம்பர்ல பிஸியாயிடுவாங்க. அந்த வரிசையைப்போலத்தான் இந்த வருஷமும். நான் எப்பவும் அவங்களுக்கு துணையா இருந்திருக்கேன். இப்போ, இனியும் அப்படித்தான்.

‘முதல்’ என்கிற விஷயம் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. நாயகனா ஏற்றிருக்கும் உங்கள் முதல் படத்தின் நாயகி திவ்யா. அவங்களைப் பத்தி?

இந்தப்படத்தின் மூலம் தமிழில் அவங்களுக்கு தனியா ரசிகர்கள் உருவாவாங்க. ரொம்பவும் மெனக்கெடல்களோட வேலை பார்ப்பாங்க. நான் என்னோட வேலைகளில் எப்படித் தெளிவா, கவனமா இருக்கேனோ, அதேபோல அவங்களும், அவங்க வேலைகளை அசத்தலா செய்து முடிக்கிறாங்க.

சமீபத்தில் வந்த இசையமைப்பாளர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

சந்தோஷ்நாராயணன். புதுசா முயற்சிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x