Last Updated : 05 Sep, 2016 12:36 PM

 

Published : 05 Sep 2016 12:36 PM
Last Updated : 05 Sep 2016 12:36 PM

பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு `சன் ஷைன்’

எந்த ஒரு சம்பவமும் இங்கு மிகப் பெரிய அளவில் நிகழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்பட்ட பிறகுதான் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் புத்தி வரும் என்பதை பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். கும்பகோணம் பள்ளியில் சிறுவர், சிறுமியர் தீக்கிரையான பிறகுதான் பள்ளிகளில் தென்னங்கீற்று கூரை கூடாது என்ற உத்தரவை அரசு பிறப்பித்தது. பள்ளியிலிருந்து வேன், பஸ்களில் திரும்பிய சிறுவர்கள் வெவ்வேறு நகரங்களில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான், பஸ், வேன்களின் பக்கம் அரசின் கவனம் திரும்பியது. ஆட்டோமொபைல் துறையில் பஸ் போக்குவரத்து மிகவும் பிரதானமாகும். இந்தியாவில் பஸ் போக்குவரத்தில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் `சன் ஷைன்’ எனும் சிறப்பு பேருந்தை உருவாக்கியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பஸ், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் கார்ப்பரேட் அலுவலகத்தில் நிறுவனத்தின் சர்வதேச பஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் டி. வெங்கட்ராமனை சந்தித்து பேசியதிலிருந்து…

இந்தியாவில் ஆண்டுக்கு 55 ஆயிரம் பஸ்கள் விற்பனையாகின்றன. இதில் 13,750 பஸ்கள் பள்ளி உபயோகத்துக்கு வாங்கப்படுகிறது.

பஸ் தயாரிப்பில் பல ஆண்டுகளாக இருந்த போதிலும் `சன் ஷைன்’ எப்படி முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?

பஸ் உருவாக்கத்தில் பல அம்சங்கள் உள்ளன. மாநில போக்குவரத்துக்காக எனில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என இரு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்படும். அரசு ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட், விலை விவர அடிப்படையில் டெண்டர் கேட்கப்பட்டு பஸ்கள் வழங்கப்படும்.

இதற்கு முன்பு வரை எங்கள் நிறுவனத்தில் சேஸிஸ் வாங்கி மற்றொரு இடத்தில் பஸ் பாடி (மேற்பகுதி) அமைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தற்போது பஸ் வெளிப்புறத் தோற்றத்துக்கென புதிய வரைமுறை (Bus Body Code) கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் முழுமையான பஸ்ஸையே நாங்கள் தயாரித்து அளிக்க எங்கள் ஆலைகளை மேம்படுத்தியுள்ளோம்.

எங்களது தயாரிப்புகள் அனைத்துமே எங்கள் ஆலையில் தயாரானவை. வேறு நிறுவனங்களிடமிருந்து இன்ஜின் வாங்குவது, சேஸிஸ் கொள்முதல் செய்வது என்பது கிடையாது. முழுமையாக அனைத்து பகுதிகளுமே எங்கள் ஆலைகளில் உருவானவை.

பள்ளிக் குழந்தைகளின் அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து சிறப்பு பஸ்களைத் தயாரிக்கத் திட்டமிட்டோம். அதன் வெளிப்பாடாக உருவானதே சன் ஷைன்.

பள்ளி பேருந்துகளுக்கான வரை முறைகள் வகுக்கப்படாத நிலையில் முதல் கட்டமாக பள்ளி பேருந்துகளைப் பயன்படுத்தும் குழந்தைகளிடம் அபிப் ராயம் கேட்டோம். பஸ்கள் வண்ண மயமாக இருக்க வேண்டும், வெளியில் காட்சிகளைப் பார்க்க வசதியாக ஜன்னல் கள் பெரியதாக இருக்க வேண்டும் என் பன போன்ற கருத்துகளை வெளியிட்டனர்.

அடுத்து ஓட்டுநரிடம் கேட்டபோது, பஸ்களை எளிதாகத் திருப்பும் வகையில் ஸ்டீரிங் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

பஸ்களை வாங்கும் கல்லூரி முதல்வர், தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, எரிபொருள் சிக்கனமானதாக நீண்ட காலம் உழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றனர்.

பெற்றோர்களிடம் கேட்டபோது பஸ்கள் பெரும்பாலும் நோய் தொற்று இடமாக இருப்பதாக பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்தனர். எளிதில் பரவும் ஜலதோஷம் குறித்து பலரும் கவலை தெரிவித்தனர்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையினர் வடிவமைத்ததில் உருவானதுதான் சன் ஷைன். குறிப்பாக குழந்தைகளுக்கு சீல் பெல்ட்-டும் இதில் உள்ளது கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும்.

நோய் தொற்றை ஏற்படுத்தாத `ஆன்டி மைக்ரோபியல்’ இருக்கைகள் இதில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹை-பஸ் பற்றி விளக்குங்கள்?

இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டு வது மிகப் பெரும் சவாலான பணிதான். இதில் எந்த மாநிலமோ, நகரமோ விதிவிலக்கானதல்ல. வாகனம் ஓடும், பிரேக் பிடிப்போம், பிறகு மெதுவாக நக ரும். ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும் போதும் பெருமளவிலான சக்தி வீணா கிறது. இவற்றை சேமித்து செயல்படுத்தும் வகையில் உருவானதுதான் ஹை பஸ்.

ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும் போது உருவாகும் சக்தியானது அல்ட்ரா கெபாசிடரில் சேமிக்கப்பட்டு வாகனம் ஓடும்போது செலவிடப்படும். இதனால் வாகனத்தில் உள்ள எரிபொருள் மிகவும் சிக்கனமாக செலவாகும். 34 இருக்கைகள் கொண்ட இந்த ஹை பஸ் டீசல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கக் கூடியது. பெருநகர போக்குவரத்துக்குத் தீர்வாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி பஸ்

மற்றெந்த வாகனங்களை விட இதன் ஆயுள்காலம் மிக அதிகம். சப்தம் கிடையாது, புகை கிடையாது. சுற்றுச் சூழல் புகையால் கடுமையாக பாதிக்கப்படும் நகரங்களுக்கு இது தீர்வாகும். ஒரே பிரச்சினை இதன் விலை அதிகம் என்பதுதான். ஏனெனில் இது முழுக்க முழுக்க இங்கிலாந்தில் உள்ள ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது. இப்போதைக்கு இதன் விலை ரூ. 3.5 கோடி என்றாலும், இந்தியாவில் இது தயாரிக்கப்படும்போது விலை குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த பஸ்ஸை பிரபலப்படுத்தும் நோக்கில் 50 பஸ்கள் மானிய விலையில் அளிக்க முன்வந்துள்ளோம்.

பஸ் பிரிவில் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது போல வேறெந்த நாடுகளில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளீர்கள்?

மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவில் சில பகுதிகளிலும் முதலிடத்தில் உள்ளோம்.

பிரிட்டனில் ஆலை உள்ளபோது ஐரோப்பிய சந்தையில் உங்கள் இடம்…

ஐரோப்பிய நாடுகளில் பொது போக்குவரத்துக்கான சந்தை வாய்ப்பு குறைவு. ஆண்டுக்கு அதிகபட்சம் 2 ஆயிரம் வாகனங்கள் விற்பனையானால் அதிகம். பிரிட்டனில் மாடி பஸ் தயாரித்து அளித்துள்ளோம். இதற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய நாடுகளில் இப்போது படிப்படியாக எங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

புதிய தயாரிப்புகள் உங்களது வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்?

பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி பஸ்களுக்கான விதிமுறைகளை மாநில போக்குவரத்துத்துறை கடுமையாக்கி யுள்ளது. இத்தகைய சூழலில் அனை வரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் `சன் ஷைன்’ இருக்கும்.

அதுபோல எரிபொருள் சிக்கனமான ஹை பஸ் வாகனமும் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.

பேட்டரி பஸ்ஸைப் பொறுத்தமட்டில் விலை அதிகமாக இருந்தாலும் படிப்படியாக இதன் விற்பனை அதிகரிக்கும். இந்தியாவில் தயாரிக்கும் பட்சத்தில் இதன் விலை குறையலாம். இந்த மூன்று தயாரிப்பில் `சன் ஷைன்’ நிச்சயம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் அசோக் லேலண்ட் முதலிடத்தில் உள்ளது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நாளொன்றுக்கு 80 கோடி மக்கள் லேலண்ட் வாகனத்தில் பயணிக்கின்றனர். இது ஆஸ்திரேலிய மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகம்.

ramesh.m@thehindutamil.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x