

இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அச்சுப் புத்தகங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர், ‘அச்சியலின் தந்தை’ என்று கருதப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த யோகான்னஸ் கூட்டன்பர்க் தான் பொதுவான நம்பிக்கை. அது பெருமளவு உண்மையும்கூட. ஆனால், 1454-ல் அவர் அச்சிட்டப் பைபிள்தான் உலகின் முதல் அச்சுப் புத்தகமா என்று கேட்டால், இல்லை.
அவர் பயன்படுத்திய நகரக்கூடிய அச்சு எழுத்துருக்களுக்கு (Movable type) பதிலாக, மர அச்சுகளைப் பயன்படுத்திக் கைகளாலேயே பௌத்தப் புனித நூல்களைக் காகிதச் சுருள்களில் சீனர்கள் அச்சிட்டுள்ளார்கள். இது கி.பி. 627-647 காலத்தில் நடைபெற்றதாகச் சீன எழுத்தாளர் ஃபென்ஷி குறிப்பிட்டுள்ளார். மர அச்சில் ஒவ்வொரு எழுத்து-வாக்கியத்தை கைகளால் செதுக்க வேண்டும்.
முதல் அச்சு நூல்
இப்பொழுதும் அழியாமல் உள்ள ஆரம்பகால அச்சுப் புத்தகம் பௌத்த மதத்தின் ‘டைமண்ட் சூத்ரா’ என்ற நூல். இந்த நூல் அச்சிடப்பட்ட நாள் கி.பி. 11 மே 868. இது கூட்டன்பர்க்கின் பைபிள் அச்சிடப்படுவதற்குக் கிட்டத்தட்ட 586 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. இந்த நூலின் ஒரு பிரதி பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. டைமண்ட் சூத்ரா நூலின் முகப்பில் அச்சிடப்பட்ட ஓவியம்தான், உலகிலேயே அச்சிடப்பட்ட முதல் ஓவியம் அட்டைப்படமும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க நிதியுதவி செய்தவர் வாங் சியே. அவருடைய பெற்றோரின் நினைவாக இலவசமாக விநியோகிப்பதற்காக இந்த நூலை அவர் அச்சிட்டுள்ளார். சீனாவின் கான்சு மாகாணத்தின் டன்ஹுவாங் குகையில் டைமண்ட் சூத்ரா அச்சுப் புத்தகம் 1899-ல் கண்டெடுக்கப்பட்டது.
அச்சு இயந்திரப் பிதாமகன்
மர அச்சுகளுக்குப் பதிலாக, கூட்டன்பர்க்குக்கு முன்னாலேயே நகரக்கூடிய உலோக எழுத்துருக்களைப் பயன்படுத்தியும் சீனர்கள் புத்தகங்களை அச்சிட்டிருக்கிறார்கள். சீனாவின் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் அச்சு இயந்திரமும் ஒன்று. ஆனால், துரதிருஷ்டவசமாகச் சீனர்கள் அந்த முறையைத் தொடர்ந்து பயன்படுத்தவில்லை.
கூட்டன்பர்க் பைபிளுக்கு 78 ஆண்டுகளுக்கு முன்னால் 1377-ல் உலோக எழுத்துருவால் அச்சிடப்பட்ட ‘ஜிக்ஜியா’ பௌத்தக் கொள்கை விளக்கப் புத்தகம் கொரியாவில் அச்சிடப்பட்டுள்ளதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் முதல் அச்சுப் புத்தகத்தை அச்சிட்டவர் கூட்டன்பர்க் இல்லை என்பது தெளிவு. அதேநேரம் நவீன அச்சு இயந்திரத்தின் பிதாமகனாக அவரைக் கருதலாம்.