

லாவோஸ் நாட்டிலுள்ள வியன்டியான் நகரில் செப்டம்பர் 6 அன்று தொடங்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஆசியான் உச்சிமாநாடு செப்டம்பர் 8 அன்று நிறைவுற்றது. ‘ஆசியான் கம்யூனிட்டி விஷன் 2025’ என்ற திட்டநிரலைப் பற்றிப் பேசுவதும் பிற நாடுகளை ஒருங்கிணைப்பதும் இந்த உச்சிமாநாட்டின் முதன்மையான நோக்கமாகும். இந்தியா சார்பாக இந்த உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் நாட்டை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அந்நாடு கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகக் குறிப்பிட்டார். ஆசியான் உறுப்பு நாடுகள் இந்தப் பிரச்சினையை ஒருங்கிணைந்து சமாளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தெற்கு சீனக் கடற்பரப்பில் எல்லை சார்ந்த பிரச்சினையைக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இந்த உச்சிமாநாட்டில் செப்டம்பர் 8 அன்று பேசினார்.
சென்றார் ரோசய்யா வந்தார் வித்யாசாகர் ராவ்
தமிழக ஆளுநராகப் பதவி வகித்த கே.ரோசய்யா, செப்டம்பர் 2 அன்று ஆளுநர் மாளிகையிலிருந்து விடைபெற்றார். புதிய பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ், பதவியேற்றார். இதற்கு முன்பு இவர் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் ஆளுநராகப் பதவியேற்ற ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 30 அன்று முடிவடைந்தது.
தங்கம் வென்ற தமிழக வீரர்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (டி24) போட்டியில் செப்டம்பர் 9 அன்று தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். 21 வயதான தங்கவேலு, 1.89 மீட்டர் உயரம் தாண்டி பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுடன் அதே பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரரான வருண் சிங் பாட்டி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் சாதனை செய்த மாரியப்பன் தங்கவேலுக்கு மத்திய அரசு பரிசுத்தொகையாக 75 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 2 கோடி ரூபாயை மாநில அரசு சார்பாகப் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.
காவிரி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கோடைப்பயிர் சாகுபடிக்காக நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி நீரைப் பத்து நாட்களுக்கு விடவேண்டுமென்று கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் செப்டம்பர் 5 அன்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த இடைக்கால உத்தரவை அளித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களின் உரிமை மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தித் தீர்வு காணவேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்துக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி முதல் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 5 ஆயிரம் அடி நீரும் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்குக் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டதையடுத்து, கர்நாடகத்தில் தொடர்ந்து பந்த் நடைபெறுவதால், பெங்களூரு, மைசூரு, ராம்நகர், காமராஜ் நகர் மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகள் முடங்கியுள்ளன. இதையடுத்துக் காவிரிப் பிரச்சினையில் உடனடியாக நான்கு மாநில முதலமைச்சர்களை அழைத்துக் கூட்டம் நடத்தவேண்டும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்
அசாமின் 35-வது மாவட்டமாக மஜூலி, செப்டம்பர் 9 அன்று அறிவிக்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாகும். உலகின் மிகப் பெரிய ஆற்றிடைத் தீவு என்றும் மஜூலி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மஜூலி, புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மாவட்டத்தை இணைக்கும் வகையில் தோலா-சாடியா பாலத்தை 2017-ல் அமைக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார். மஜூலியில் கலாசாரப் பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகவும் அசாமின் கலை மற்றும் கலாசார ஆய்வுகள் நடக்கும் உயர்மட்ட மையமாக அது திகழும் என்றும் கூறியுள்ளார்.