Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

ஷங்கர் படத்தில் நான்!

“ஓகே சார், நான் ரெடி...” என்றார். நானும் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். ஒருவேளை நான் ஜூஸ் குடித்து முடிப்பதற்காகக் காத்திருந்திருப்பாரோ என்று நினைத்தபடி அவசரமாகக் கடைசி மடக்கைக் குடித்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு நானும் ரெடி என்றேன்.

இயக்குனர் ஷங்கரைப் பேட்டி எடுப்பது என்பது எப்போதுமே முக்கியமான விஷயம். பெரும்பாலும் அவர் தரும் ஸ்டில்களும் சொல்லும் தகவல்களும் படு சுவாரஸ்யமாக இருக்கும். முதல் ரசிகனாக நம் பார்வைக்குக் கிடைக்கும் என்பதால் அது எல்லோருக்குமே பிடித்ததாக இருக்கும். அவருடைய பாய்ஸ் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் பேச சம்மதித்திருந்தார்.

“பேட்டியைத் தொடங்கிடலாமா..?” என்றார். நானும் சோபாவில் வசதியாக அமர்ந்துகொண்டேன். “நான் ரெடி சார்” என்றேன். என் அசைவைப் பார்த்துக்கொண்டிருந்தவர், என் கைகளையே பார்த்தார். கைகளைத் தேய்த்துக்கொண்டேன். “நானும் ரெடி சார்...” என்றேன் மறுபடியும்!

“இல்லே... நான் பதில் சொல்லத் தயாரா இருக்கேன்னு சொல்ல வந்தேன்...” என்றார். நானும் கேள்வியைத் தொடங்கிடுறேன் என்று சொல்லிவிட்டு, “இந்த ப்ராஜெக்ட் தொடங்கறப்பவே ஒரு கல்ச்சுரல் ஃபெஸ்டிவல் மூட்லதான் தொடங்குனீங்க... முடிக்கறப்ப எப்படி இருந்துச்சு?” என்றேன்.

இப்போது அவருடைய பார்வை என் சட்டைப் பை பக்கம் போனது. அவருடைய மனதில் என்ன ஓடுகிறது என்ற எண்ணத்தோடு நான் காத்திருக்க, அவரும் என் முகத்தையே பார்த்துக்கொ|ண்டு அமர்ந்திருந்தார்.

“எதுனா ஸ்டில் வந்திரட்டும்னு வெயிட் பண்றீங்களா சார்?” என்றேன்.

“இல்லே... நீங்க குறிப்பெடுத்துக்க தொடங்கினதும் நான் சொல்லத் தொடங்கிடுவேன்...” என்றார். அப்போதுதான் அவர் என் கைகளையே பார்த்ததற்கும் ரெக்கார்ட் செய்ய மைக்ரோ டேப் எதுவும் வைத்திருப்பேனோ என்று பையைப் பார்த்ததற்கும் பொருள் விளங்கியது.

“இல்லே சார்... நாம பேசத் தொடங்கிடலாம்... ரெக்கார்ட் பண்ணவோ குறிப்பெடுத்துக்கவோ தேவையில்லை... அப்படியே பழகிட்டேன்” என்றேன். அவர் முகத்தில் மொத்த நம்பிக்கையும் போய்விட்டது. “கேள்வியை ரிப்பீட் பண்ணவா சார்?” என்றேன். “வேண்டாம்... ஆனா, குறிப்பெடுத்துக்காம எப்படி எழுதுவீங்க..?” என்றார். பதில் சொல்வதைவிட கேள்வி கேட்பதில் சுவாரஸ்யமாகி விட்டார்.

“அதெல்லாம் நல்லா நினைவுல இருக்கும் சார்... எத்தனை நாள் கழிச்சும்கூட நான் எழுதிருவேன்… அப்படியே பழகிருச்சு…” என்றேன்.

“உங்க முதல் கட்டுரையில் இருந்தே இப்படித்தானா?” என்றார், அவர் பேட்டி பின்னுக்குப் போய்விட்டது. “இல்லே சார்… ஆரம்பத்துல நானும் பல கட்டுரைகளுக்காகப் போறப்ப குறிப்புகளை எழுதியிருக்கேன். பையிலே சின்ன பாக்கெட் டைரி வெச்சிருப்பேன். அதிலே கிட்டத்தட்ட முழு கட்டுரையையுமே எழுதிருவேன். அப்புறம்தான் விட்டுட்டேன்” என்றேன்.

“ஏன் விட்டுட்டீங்க..?” என்றார். “ஏன்னா… என்ன பேசுனோமோ அதை மட்டும் எழுதற மாதிரி ஆகிடுது” என்றேன்.

ஷங்கர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துவிட்டார். “இதென்ன பதில்? அப்ப சொல்லாததையும் எழுதுவீங்களா..?” என்றார். “அப்படி இல்லை சார்… நாம குறிப்பு எழுத ஆரம்பிச்சதும் பேட்டி கொடுக்கறவங்க கான்ஷியஸ் ஆகிடுவாங்க… பேச்சுல இயல்புத் தன்மை கெட்டுப் போயிரும். நாம குறிப்பு எழுதலைன்னா நம்மோட உரையாடுற இயல்போட பேசுவாங்க…” என்றேன்.

“அப்ப… இப்ப நாம பேசிகிட்டிருக்கறதை உங்களால அப்படியே எழுத முடியுமா?” என்று கேட்டார். “எப்ப வேணா எழுத முடியும் சார்… கூடவே, நீங்க பேசறப்ப லேசா முகத்தை மேல பார்த்து வெச்சுக்கறீங்க… லேசா இடது பக்கம் தலையைச் சாய்ச்சுகிட்டே பேசறீங்க… ரெண்டு கைகளையும் ஒரே ரிதம்ல அசைச்சுகிட்டே பேசறீங்க… சோபாவிலே உட்கார்றப்ப கால்களைக் கொஞ்சம் அகட்டி வெச்சுக்கறீங்க… இதையும் சேர்த்து என்னால எழுத முடியும். அதைச் சேர்த்து சொல்றப்ப பேட்டி இன்னும் சுவாரஸ்யமா ஆகிடும். இதையெல்லாம் பேப்பர்ல எப்படி சார் குறிச்சுக்கறது?” என்றேன்.

நான் சொன்னதை ரசித்தார். ஆனாலும் அவருக்குத் தான் பேசும் விஷயங்கள் முழுமையாகப் பேட்டிக்குள் இடம் பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. கொஞ்சம் கவலையான குரலிலேயே மொத்த பேட்டியையும் பேசினார். புறப்படும் சமயம், “நான் வேணா ஆர்டிஸ்ட் லிஸ்ட், டெக்னீஷியன்ஸ் லிஸ்ட் குடுக்கட்டுமா..?” என்றார். “தேவைப்பட்டா கேட்டுக்கறேன் சார்…” என்றேன்.

அந்த வாரம் ஷங்கர் பேட்டிதான் பத்திரிகையின் ஹைலைட். அதன் பிறகு ஷங்கர் கலந்துகொண்ட ஒரு விழாவுக்கு நானும் கவரேஜுக்காகப் போயிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வெரிகுட்… என் வார்த்தைகளும் உங்க அப்சர்வேஷனும் அவ்ளோ அழகா பொருந்தியிருந்துச்சு” என்று பாராட்டினார்.

அதன் பிறகு அதே பாய்ஸ் படத்தில் நடித்த பாய்ஸ் பேட்டிக்காக மறுபடியும் ஷங்கர் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். பத்திரிகைக்காக பல்வேறு கோணங்களில் போட்டோ செஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, பாய்ஸ் கெட்ட அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஷங்கர், “தம்பிகளா… ரிப்போர்ட்டர் கையிலே பேப்பர் இல்லையேன்னு எதையாச்சும் பேசி வைக்காதீங்க… அவர் வேற டைப் ஆளு!” என்றார்.

அந்த சந்திப்பின்போது, நான் மாணவ நிருபராக இருந்த காலத்தில் அவர் தன் முதல் படமான ஜெண்டில்மேனுக்காக எங்கள் ஊருக்கு வந்ததையும் அப்போது அவரை நான் பேட்டி எடுத்ததையும் சொன்ன்னேன். “அப்போதாச்சும் குறிப்பு எழுதுவீங்களா?” என்றார் சிரித்துக்கொண்டே. “ஆமாம்… குறிப்பு எழுதினேன்” என்று சொல்லி விட்டு, “நான் குறிப்பு எழுதாதது உங்களை சங்கடப்படுத்திவிட்டதா?” என்றேன்.

“நீங்க பேசிட்டு போனப்ப பயம் இருந்தது. ஆனா, பேட்டியைப் படிச்சதும் சந்தோஷமாகிடுச்சு… உங்க அப்சர்வேஷன் அந்தக் கட்டுரையை அழகாக்கி இருந்துச்சு… நான் நாடகங்கள்ல நடிச்சுகிட்டிருந்தப்ப ஷோ தொடங்கறதுக்கு முன்னே வாழைப்பழம் சாப்பிடுவேன். அது பதற்றத்தைக் குறைச்சு நிதானமாக்கும். அதை முதல்வன்லகூட பயன்படுத்தியிருப்பேன். அதேபோல, எதையும் கண்ணால குறிச்சுகிட்டு கரெக்டா படைப்புல கொண்டு வர்ற உங்க குணமும் என் கதாபாத்திரங்கள்ல எங்கேயாச்சும் வரும்… அவ்ளோ பாதிச்சுடுச்சு…” என்றார்.

அந்நியன்லயோ சிவாஜியிலேயோ எந்திரன்லயோ நண்பன்லயோ நான் பார்க்கலை..!

‘ஐ’ படத்தில் நான் இருக்கேனான்னு பார்க்கணும்!

தொடர்புக்கு:cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x