Published : 13 Jun 2016 11:15 AM
Last Updated : 13 Jun 2016 11:15 AM

வாண்டா vs வால்ட் டிஸ்னி

சீன பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ரியல் எஸ்டேட் சந்தை வளர்ச்சி அடையவில்லை என்னும் செய்திகள் உலாவினாலும் பொழுதுபோக்கு துறையில் இரண்டு பெரு நிறுவனங்கள் தங்களது போட்டியைத் தொடங்கியுள்ளன.

சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் வாங் ஜியான்லின். இவர் டாலியன் வாண்டா குழுமத்தின் தலைவராவார். கடந்த மே மாதம் இறுதியில் சீனாவில் நன்சாங் என்னும் நகரில் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்கா (தீம் பார்க்) ஒன்றினை தொடங்கினார். 340 கோடி டாலர் முதலீட்டில் 494 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இது.

நன்சாங் நகரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாங்காய் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான வால்ட் டிஸ்னி வரும் ஜூன் 16-ம் தேதி புதிய பொழுது போக்கு பூங்காவை தொடங்க இருக்கிறது.

இதனால் சீனாவின் பொழுதுபோக்கு சந்தையில் போட்டி அதிகரித்திருக்கிறது. இரு பூங்காக்களிலும் திரையரங்குகள், உணவு மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள், ஷாப்பிங் மால் என பலவும் உள்ளன.

அமெரிக்க நிறுவனமான வால்ட் டிஸ்னி சீனாவில் களம் இறங்குவதில் சீனா நிறுவனமான வாண்டாவுக்கு பிடிக்கவில்லை. இதனை தொலைக் காட்சி நேர்காணலில் பலமுறை அவர் கூறியிருக்கிறார். வால்ட் டிஸ்னியை அடுத்த 10 மற்றும் 20 வருடங்களுக்கு லாபமீட்ட விடக்கூடாது என்று கூறி யிருக்கிறார்.

மேலும் சீனா முழுவதும் இதேபோல 15-க்கும் மேற்பட்ட பொழுது போக்கு மையங்களைத் தொடங்க வாண்டா குழுமம் திட்டமிட்டிருக்கிறது. வரும் செப்டம்பரில் ஹெபெய் நகரில் ஒரு பூங்காவைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறது. அதனை குறிப்பிட்ட வாண்டா குழுமத்தலைவர், ஒரு புலி (வால்டி டிஸ்னி) 15 நரிகளுக்கு (வாண்டா) ஈடாக முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கு கருத்து கூறுவதெல்லாம் நேரத்தை வீண் செய்யும் வேலை என்று டிஸ்னி குழுமத்தின் செய்தி தொடர்பாளர் பதில் அளித்திருக்கிறார்.

போட்டிக்கு காரணம் என்ன?

இரு நிறுவனங்களுக்கும் போட்டி போடுவதற்கு காரணத்தை கண்டறிய பெரிய முயற்சியெல்லாம் தேவை இல்லை. எல்லாம் பிஸினஸ்தான். சீனாவின் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா சந்தை மிகப்பெரியது.

இந்த துறையின் சந்தை மதிப்பு ரூ.61,000 கோடி டாலர்கள் ஆகும். ஆனால் இன்னும் 4 வருடங்களில் (2020) சந்தை மதிப்பு இரு மடங்காக உயரும் என்று சீன அரசு கணித்திருக்கிறது. அதனால் சந்தையைக் கைப்பற்ற இரு நிறுவனங்களும் போட்டியில் குதித்திருக்கின்றன.

வால்ட் டிஸ்னி நிறுவனம் தொடங்கும் ஆறாவது பூங்கா இதுவாகும். அமெரிக்காவுக்கு வெளியே தொடங்கும் நான்காவது பூங்கா இது. பாரிஸ், டோக்கியோ, ஹாங்காங் ஆகிய நகரங்களை அடுத்து இப்போது ஷாங்காயில் வால்ட் டிஸ்னி தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனம் 963 ஏக்கர் பரப்பளவில், 550 கோடி டாலர் முதலீட்டில் புதிய பொழுது போக்கு பூங்காவை அமைத்திருக்கிறது. ஆனால் வாண்டா குழுமம் இதற்காக 350 கோடி டாலர் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்திருக்கிறது.

இது குறித்து பேசிய வாண்டா குழுமத்தின் தலைவர் கூறும் போது வால்ட் டிஸ்னி நிறுவனம் ஏன் இவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

வால்ட் டிஸ்னி தலைமைச் செயல் அதிகாரி பாப் இகெர் கூறும்போது சீனாவின் சந்தை சவாலானதுதான், டிஸ்னி மட்டுமல்லாமல் பல மேற்குலக நிறுவனங்களும் சவால்களை சந்திக்கின்றன, ஆனால் அங்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

வாண்டா குழுமத்தின் தலைவர் கூறிய கருத்துகள் எதுவும் எங்களை பாதிக்கப்போவதில்லை. அதனால் எங்களுடைய முதலீட்டு திட்டங்கள் எதுவும் தடைபடாது. இந்த தொழிலில் பல வருடங்களாக எங்களுக்கு இருக்கும் அனுபவம் கைக்கொடுக்கும். இந்த பூங்காவில் நாங்கள் செய்துள்ள முதலீடு வருங்காலத்தில் எங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும். ஷாங்காய் நகரில் நாங்கள் அமைத்துள்ள பார்க்கில் இருந்து 3 மணி நேர சுற்றளவு தூரத்தில் 33 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்றார்.

மக்கள்தான் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x