Last Updated : 10 Mar, 2014 12:00 AM

 

Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

ஆர்வம் மட்டும் போதுமா?

பவித்ரா வேகமாக வண்டி ஓட்டியபடி சென்றுகொண்டிருந்தார். அலுவலக வேலையாக வெளியே சென்றுகொண்டிருக்கும் அவருக்கு நேரமாகிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர் அலுவலகத்தில் ஒரு கூட்டம். போக்குவரத்து விளக்கில் பச்சை எரிந்ததும் வேகமாக வண்டியை எடுத்த பவித்ரா இடது பக்கம் திரும்பியதும் சட்டென்று வண்டியின் வேகத்தைக் குறைத்தார். அங்கே ஒரு மைதானம். அதில் சில மாணவிகள் கூடைப்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். பவித்ராவால் அந்த இடத்தைத் தாண்டிப் போக முடியவில்லை. பவித்ரா பள்ளியில் படிக்கும்போது கூடைப்பந்தாட்டத்தில் கலக்கியவர். ஆட்டத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் மிகவும் அதிகம். அதனால்தான் கூடைப்பந்தாட்டக் காட்சி அவ்வளவு அவசரத்திலும் அவரை ஒரு கணம் நிறுத்திவிட்டது.

அப்துல் காதிர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது சாலையில் எந்த ஓசையும் அவருக்குக் கேட்காது. ஹாரன் ஒலிகள்கூடக் கேட்காது. காரணம் எப்போதும் அவர் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டிருக்கும். ஏதேனும் ஒரு பாட்டை எப்போதும் கேட்டுக்கொண்டிருப்பார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். ப்ளஸ் டூ படிக்கும்போது இசை வகுப்பில் சேர்ந்தார். அவர் குரல் இசைக்கு ஒத்துவரவில்லை. வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதிலும் பெரிதாகத் தேறவில்லை. ட்ரம்ஸ் கற்றுக்கொள்ளப் போனார். அது ஓரளவுக்கு வந்தது. ஆனால் அதற்குள் கல்லூரி, படிப்பு, வேலை என்று வேறு விஷயங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இன்று அவர் ஒரு நிறுவனத்தில் பொது மேலாளர். நல்ல பெயர் எடுத்து, பல சாதனைகள் புரிந்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

பவித்ராவின் கதையும் கிட்டத்தட்ட அப்படித்தான். கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆட்டத்தில் அதிகம் ஈடுபட முடியவில்லை. ஈடுபட்ட சில சமயங்களிலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் தொடர்புத் துறையை எடுத்துப் படித்த அவர் அதில் சிறப்பாகத் தேறி, அதிலேயே எம்.பி.ஏ. முடித்து இன்று நல்ல வேலையில் இருக்கிறார்.

அவர்கள் செய்தது தவறா?

சரியான விதத்தில் முயற்சி செய்திருந்தால் பவித்ரா கூடைப்பந்து வீராங்கனையாகவும் காதிர் இசைக் கலைஞராகவும் உருவாகியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இருக்கலாம். ஆனால் அப்படி உருவாகாமல் போனது தவறு என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

இவர்கள் இருவரும் தத்தமது ஆர்வங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆர்வமுள்ள துறையில் வெற்றி பெறுவது சுலபம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆர்வமுள்ள விஷயங்கள் எல்லாவற்றிலும் ஒருவருக்குத் திறமை வந்துவிடாது. திறமை இல்லாவிட்டால் எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் அந்தத் துறையில் வெற்றிபெற முடியாது.

அப்துல் காதிரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு இசையில் ஆர்வம். ஆனால் அதில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை. ஆனால் நிர்வாகத் துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு மிக வேகமாக முன்னேறிவருகிறார்.

பவித்ராவும் கூடைப்பந்தில் பிரகாசிக்க முடியாமல் போயிருந்திருக்கலாம். கூடைப்பந்தில் இருக்கும் ஆர்வத்தையே நினைத்துக்கொண்டு அவர் கல்லூரிப் படிப்பில் கோட்டைவிட்டிருந்தால் சிக்கலாகியிருக்கும் அல்லவா?

எது முக்கியம்?

ஒருவர் தனக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு எதில் அதிக ஆர்வம் என்னும் கேள்வி முதலில் எழுப்பப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட செயல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒரு மாணவர் சொல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அவர் அந்தச் செயலால் கவரப்படுகிறார் என்று அர்த்தம். அதை அவர் மிகவும் விரும்பி அனுபவிக்கிறார் என்று அர்த்தம். ஆனால், அது அவருக்குப் பிடிக்கும் என்பதற்காக அதை அவர் திறமையாகச் செய்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஆர்வம் இல்லாத துறையில் சிறப்பான திறமை பெறுவது கடினம்தான். ஆர்வம் இருந்தால்தான் திறமையைப் பட்டை தீட்டிக்கொள்ள முடியும். ஆனால் ஆர்வம் மட்டுமே திறமைக்கு உத்தரவாதம் அல்ல. திறமை இல்லையேல் அந்தத் துறையில் முன்னேறுவதற்கு உத்தரவாதம் இல்லை.

16 முதல் 18 வயதுக்குள் நமது ஆர்வங்கள் பெருமளவுக்கு மாறியபடி இருக்கும். இந்த வயதைக் கடந்த பிறகுதான் ஒருவரது ஆர்வங்கள் ஓரளவேனும் நிலையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

யோசித்துப் பாருங்கள். உங்கள் ஆர்வங்கள்/விருப்பங்கள் எப்படி மாறியிருக்கின்றன? ஏன் மாறியிருக்கின்றன?

சிறு வயதில் ஏற்பட்ட ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படிப் பெரிய முடிவுகளை எடுக்க முடியும்?

ஆர்வம் மாறக்கூடியது. திறமை அப்படி அல்ல. சில திறமைகள் எப்போதும் நம்முடன் இருக்கும். நாளுக்கு நாள் வளர்ந்தபடி இருக்கும்.

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங் களில் ஆர்வம் இருக்கலாம். கிரிக்கெட், இசை, நிர்வாகம், வடிவமைப்பு, எழுத்து… இப்படிப் பல ஆர்வங்கள் இருக்கலாம். புதிதாகப் பல ஆர்வங்கள் சேரலாம். எல்லா ஆர்வங்களையும் வாழ்நாள் முழுவதும் நாம் அனுபவித்து ரசிக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றிலும் நமக்குத் திறமை இருந்துவிடும் என்று சொல்ல முடியாது. இதில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டில் திறமை இருக்கலாம். அது எது என்று அடையாளம் கண்டு அதில் திறமையை வளர்ப்பதே சிறந்த அணுகுமுறை.

நமது ஆர்வமும் நமக்கென்று உள்ள பிரத்யேகத் திறமையும் ஒரே அம்சத்தில் பொருந்தியிருந்தால் அதைவிடச் சிறந்த கூட்டணி இருக்க முடியாது.

எனவே, உங்கள் ஆர்வம், திறமை இரண்டையும் சேர்த்துக் கணக்கில்

எடுத்துக் கொண்டு உங்கள் பாதையைத் தீர்மானியுங்கள்.

இசையில் ஆர்வம் இருந்தால் முயற்சி செய்யுங்கள். திறமை கூடாவிட்டால் கவலைப் படாதீர்கள். அப்துல் காதிரைப் போல எப்போதும் பாட்டுக் கேட்டுக்கொண்டே வேறு வேலை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x