Last Updated : 29 Jan, 2017 01:04 PM

 

Published : 29 Jan 2017 01:04 PM
Last Updated : 29 Jan 2017 01:04 PM

பாயும் ஒளி: கல்வியும் கைத்தொழிலுமே கண்கள்!

திருச்சி மன்னார்புரத்தில் இருக்கும் அந்த கேன்டீனில் டிபன், டீ, காபி விற்பனை படுஜோராக நடந்துகொண்டிருந்தது. பணத்தை வாங்கிக்கொண்டு சரியான சில்லறை கொடுப்பவரில் தொடங்கி, உணவைத் துரிதமாகப் பரிமாறுவர்கள்வரை ஒவ்வொரு வேலையிலும் அத்தனை நேர்த்தி, துல்லியம்! இந்தக் கச்சிதத்துக்குக் காரணமானவர்கள், பார்வை குறைபாடு கொண்டவர்கள் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. மகளிர் விழியிழந்தோர் மையத்தைச் சேர்ந்த பார்வையற்றவர்கள்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள்.

மகளிர் விழியிழந்தோர் மையத்தின் இயக்குநர் விமலா மோசஸ், “பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதற்காகக் கைத்தொழில் களைக் கற்றுக் கொடுக்கிறோம். விரும்பினால் முனைவர் பட்டம்வரை படிக்கவைக்கிறோம்” என்கிறார்.

1970-களில் திருச்சியில் பிரபல கண் மருத்துவராக இருந்தவர் ஜோசப் ஞானாதிக்கம். வறுமையின் பிடியில் இருக்கிறவர்கள் குழந்தைகளை அழைத்துவரும்போது, அவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தால் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். இவர்களைப் பராமரிப்பதற்காகவே திருச்சி புத்தூரில் ஒரு பள்ளியைத் தொடங்கி, அவர்களுக்குக் கல்வி வழங்க ஏற்பாடு செய்தார் ஜோசப் ஞானாதிக்கம். அதைத் தொடர்ந்துதான் மகளிர் விழியிழந்தோர் மையம் 1975-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உயர்கல்வி, தொழில்திறன் போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டுவருகின்றன.

“பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இங்கே வருவாங்க. மிகவும் கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வரும் பெண்களுக்குத் தறி நெய்தல், தையல், எம்ப்ராய்டரி, தரைவிரிப்பு செய்வது, கூடை பின்னுவது என்று பல தொழில்களை மூன்று ஆண்டுகள் கத்துக் கொடுப்போம். பள்ளிக்கூடமே போகலைன்னாலும், எட்டாம் வகுப்பு தேர்வு எழுதத் தயார் செய்துவிடுவோம். இங்க இருக்கிற பலரும் படிச்சிக்கிட்டே இருப்பாங்க. முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராதாபாய் இந்த மையத்தில் படித்தவர்” என்று தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் விமலா மோசஸ்.

இங்கே தங்குமிடம், உணவு இரண்டுக்கும் கட்டணம் இல்லை. பயிற்சி பெறும் பெண்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை அவரவர் உழைப்புக்கு ஏற்றவாறு கணக்கிட்டு, பயிற்சி முடிந்து கிளம்பும்போது சம்பளமாகக் கொடுத்து விடுகிறார்கள். இதுவரை சுமார் 1,800 பேருக்கு மேல் கைத்தொழில் கற்றுக்கொண்டு சென்றிருக்கிறார் கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்முனைவோராகி, தங்கள் குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்திவருகிறார்கள்.

“பார்வையற்றவர்களைச் சுமையாக நினைத்த குடும்பங்கள், இன்று இவர்களால்தான் முன்னேறிக்கிட்டிருக்கு என்பதைப் பார்க்கும்போது, எங்களுக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும் விமலா, 1,600-க்கும் மேற்பட்ட பார்வையற்றப் பெண்களுக்கு, பார்வை குறைபாடுடைய ஆண்களைத் திருமணம் செய்துவைத்திருக்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் எவ்விதக் குறைபாடுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று அவர் சொல்கிறார்.

“எங்கள் மையத்தின் நிர்வாகி பிரியா தியடோர், தமிழக அரசின் சிறந்த சமூக சேவகர் விருதைப் பெற்றவர். இந்த மையத்தைச் சேர்ந்த நிறையப் பெண்களுக்குப் படிப்பதில் ஆர்வம் அதிகம். பி.ஏ., எம்.ஏ., பி.எட். படித்து பள்ளிகளில் பணிபுரிகிறார்கள். டியூஷன் நடத்தி சம்பாதிக்கிறார்கள். கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து பரிசுகளைப் பெற்றுவருகின்றனர். நாட்டுப்புறக் கலைகளும் கற்றுத் தருகிறோம். 10 பேர் கொண்ட ஒரு குழு, தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் முதலிடம் பெற்றது. கல்வியும் கைத்தொழிலும் இவர்களைக் கண் போலக் காப்பாற்றுகிறது” என்கிறார் மையத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராதா.

“இவர்களுக்கு இயன்ற அளவில் நல்ல கல்வியை வழங்குகிறோம். அதை வைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறி, சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். இவர்களுக்குக் கல்வியில் உதவுவதற்குத் தன்னார்வலர்கள் முன்வரவேண்டும். இந்தப் பெண்கள் செய்யும் பொருட்கள் விற்பனையானால்தான், அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுக்க முடியும். ஓவியம், தோட்டக்கலை, இசை தெரிந்த தன்னார்வலர்கள் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முன்வந்தால், இவர்களின் எதிர்காலம் மேலும் பிரகாசமாகும்” என்கிறார் விமலா மோசஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x