Last Updated : 21 Feb, 2014 12:00 AM

 

Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

நெஞ்சை அள்ளும் கொஞ்ச நேரம்

சினிமாவுக்கு இணையாக இப்போது குறும்படத்திற்கும் ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் குறும்படங்கள் எடுப்பது குறித்த ஆர்வம் இளைஞர்கள் பலரிடமும் அதிகரித்துவருகிறது. அதிகப் பணம் தேவையில்லை. தொழில்முறை நடிகர்கள், கலைஞர்கள் யாருமின்றி நண்பர்களுடன் உல்லாசமாக அரட்டை அடிப்பதைப் போல ஒரு குறும்படத்தை இயக்கிவிட முடிகிறது. தேவை, நல்ல படைப்புத் திறனும் ஆற்றலும்தான். அப்படித் தயாரிக்கப்பட்ட படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த இயக்குநர்கள் வெள்ளித் திரையின் இயக்குநர்களாகவும் ஆகியுள்ளனர்.

ஆனால் இங்குள்ள குறும்படங்கள் சிறப்பாக இருந்தாலும் அவை எல்லாமும் சினிமாவை நோக்கியவையாகவே உள்ளன. மேற்குலக நாடுகளில், குறும்படத்திற்கும் ஆவணப் படத்திற்கும் தனியான சந்தைகள் உள்ளன. அதற்குக் காரணம் அங்கு தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் சர்வதேசத் குறும்படத் திரையிடல் விழாக்கள். மேலும் இங்குள்ள குறும்படங்களுக்குச் சின்னத்திரைகளை விட்டால் திரையிடப் பெரிய இடம் இல்லை என்ற துரதிர்ஷ்டமும் இருக்கிறது.

இம்மாதிரியான குறைகளைத் தீர்க்கவும், இங்குள்ள குறும்படங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சென்னையில் முதன் முதலாக, சர்வதேசக் குறும்படத் திரைப்பட விழாவை Chennai Academy of Motion Picture என்னும் அமைப்பு நடத்தவுள்ளது. இதற்கான தொடக்க விழா, வரும் 20ஆம் தேதி ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் போலந்து, துருக்கி, பிரான்ஸ், கத்தார், இங்கிலாந்து, அமெரிக்கா, எஸ்டோனியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 138 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களும் கலந்துகொள்கின்றன. உலகெங்கிலும் இருந்து 350 படங்கள் போட்டிக்காக விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. படங்கள், ரஷ்யன் கலாச்சார மைய அரங்கிலும், எஸ்.ஆர்.எம்

சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட் அரங்கிலும் திரையிடப்படுகின்றன. இதில் தனிப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவைச் சேர்ந்த சாம்ப்மேன் பல்கலைக்கழக மாணவர்கள், எல்.வி. பிரசாத் திரைப்படக் கல்லூரி மாணவர்கள், பூனே கல்லூரி மாணவர்களின் படங்களும் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பாடம் சொல்லும் படங்கள்

“சர்வதேச அளவிலான படங்களைப் பார்ப்பதன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு குறும்படங்கள் திரையிடுவதற்கான வாய்ப்பு பெரிதாக இல்லை; அதையும் இந்த விழா போக்கும். திரையிடல் மூலம்தான் இயக்குநர்கள் தங்கள் படைப்புகள் குறித்து அறிந்துகொள்ள முடியும்” என்கிறார் சர்வதேசக் குறும்படக் குழு இயக்குநர் சந்தானம் னிவாசா.

இவ்விழாவில் சமகாலத் துருக்கிப் படங்கள், சிறப்புப் பிரிவில் பிரான்ஸ் நாட்டுப் படங்கள், எஸ்டோனியா படங்கள், இந்தியப் பனோரமா, உலகப் படங்கள் போன்ற பிரிவுகளின் கீழ் படங்கள் திரையிடப்பட உள்ளன. குறும்படம், ஆவணப் படம், அனிமேஷன் படம் என மூன்று பிரிவுகளில் திரையிடப்பட உள்ள படங்களுக்கு விருதுகள், அளிக்கப்பட உள்ளன. இந்த மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, நடுவர் பரிசு ஆகிய மூன்று நிலைகளில் பரிசுத் தொகையுடன் கூடிய கேடயங்கள் வழங்கப்பட உள்ளன.

“300க்கும் அதிகமான படங்கள் தேர்வுக்காக வந்தன. எல்லாப் படங்களும் ஏதோ ஒரு சிறப்பம்சத்துடன் இருந்தன. இந்தத் திரையிடலுக்கான படங்களைப் பார்த்தது நல்ல அனுபவம். மேற்குலக நாடுகளில் குறும்படங்களுக்காகத் தனிச் சந்தை உள்ளது. அதனால் அங்குள்ள படங்கள் இன்னும் சிறப்பாக தயாரிக்கப் பட்டுவருகின்றன. இம்மாதிரி சினிமாக்களைப் பார்க்கும்போது இங்கும் சினிமா நோக்கம் அல்லாத குறும்படங்கள் வர வாய்ப்புகள் உருவாகும்”என்கிறார் தேர்வுக் குழுவில் ஒருவரான நடிகையும் இயக்குநருமான ரோகிணி. கர் பிரசாத், நடிகர் அபிஷேக் ஆகியோர் தேர்வுக் குழுவின் மற்ற உறுப்பினர்கள்.

கி.ரா.வின் கதவும் கள்ளழகரும்

இந்த விழாவில் The Triangle Affair என்னும் படமும், Dwand என்னும் இந்தியக் குறும்படமும், Photograph என்னும் ஆவணப் படமும், அமெரிக்க சாம்ப்மேன் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கியுள்ள Blue என்னும் படமும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களாகச் சொல்லப்படுகின்றன. Dwand, மாவோயிஸ்ட்களுக்கும் ராணுவத்திற்கும் நடந்துகொண்டிருக்கும் போர் குறித்தான மக்களின் எதிர்வினையைச் சித்தரிக்கிறது. Blue பூனே திரைவிழாவில் நடுவர் குழுவின் பரிசை வென்றுள்ளது.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி குறித்தான ‘அழகர் வாராரு’ என்னும் ஆவணப் படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல சாகித்திய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கதவு என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ‘கதவு’ம், காந்தியவாதிகளான கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன் ஆகியோரின் சமூகப் போராட்ட வெற்றி குறித்த That Fired Soul என்னும் ஆவணப் படமும் திரையிடலில் பங்குபெற உள்ள முக்கியமான படங்களாகும்.

இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறும்படங்களைப் பார்ப்பது குறும்பட ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். மேலும் சினிமாவைக் கற்றுக்கொள்ள நினைக்கும் இளைஞர்களுக்கு இந்தத் திரையிடல் ஒரு பாடமாக அமையும். இதுவரை சூட்சுமமாக இருந்துவரும் சினிமாவின் தொழில்நுட்பம் எளியமையானதற்கு இந்தக் குறும்படக் கலையின் வளர்ச்சிதான் காரணம் எனலாம். அந்தக் குறும்படக் கலை மேம்பட இம்மாதிரியான திரைவிழாக்கள் நமக்கு மிக அவசியம்.

விழா குறித்த தகவல்களுக்கு: 9003258256

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x