தேர்வை இனிதாக வரவேற்போம்!

தேர்வை இனிதாக வரவேற்போம்!
Updated on
4 min read

தி இந்து, எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி இணைந்து விழுப்புரத்தில் நடத்திய நிகழ்ச்சி

தற்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிப்புக்கே 70 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணம் கட்ட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனால் அரசுக் கல்லூரியில் மருத்துவம் படிக்க 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே இன்றும் செலவாகிறது. இதனை மனதில் கொண்டு ஏழை, எளிய மாணவர்கள் நன்கு படித்துக் கல்வி கற்க வைத்த பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தொடக்க உரையோடு ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சி தொடங்கியது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சென்னையை அடுத்த பூந்தமல்லி எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து விழுப்புரத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தியது. விழுப்புரத்தில் உள்ள வி.வி.ஏ. அண்ட் எம்.ஏ.எம். திருமண மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உற்சாகமாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அறிமுக உரை நிகழ்த்தினார்.

நீட்டையும் தமிழிலேயே எழுதலாம்

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் பல பேர் நல்ல மதிப்பெண் பெற்றுத் தற்போது அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். அதை மனதில் கொண்டு நம்பிக்கையோடு திட்டமிட்டுப் படித்தால் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் எனத் தன் பேச்சைத் தொடங்கினார் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ். “நீட் தேர்வு பற்றி கவலை அடைய வேண்டாம். தற்போது அது தமிழில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அவர்களுடைய பாடத்தை நன்கு புரிந்து படித்தாலே எளிதில் வெற்றி பெறலாம்” என மேலும் அவர் கூறினார்.

மருத்துவம், பொறியியலுக்காக மட்டுமே நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்பதில்லை. கூடுமானவரை நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களைப் பெற்று, எதிர்கொள்வது நல்லது. நுழைவுத் தேர்வுகளின் மூலம் கிடைக்கும் அனுபவம் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள உதவும் என்பதே தான் மாணவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியக் கருத்து எனக் கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்தார். அவருடைய பேச்சுக்கு அரங்கில் பலத்த வரவேற்பு இருந்தது. அவர் பேசி முடித்து வெளியேறிய பின்பும் மாணவர்களும் பெற்றோரும் பலர் அவரைச் சூழ்ந்துகொண்டு பல்வேறு சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.

அரசு பள்ளியில் பயின்றவர்

பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று ஒரு கல்லூரியின் முதல்வராக உயர்ந்திருப்பவர் எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார். “கல்லூரிப் படிப்பில் தொழில் திறனையும் வளர்க்கும் வகையில் பாடத் திட்டங்களை எங்கள் கல்லூரியில் அமைத்துள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமும் அளிக் கிறோம். இது தவிர கிராமப்புற மாணவர்களுக்கு 1 முதல் 4 செமஸ்டர் வரை ஆங்கிலப் புலமையை வளர்க்கும் பிரிட்ஜ் கோர்ஸும், 6 முதல் 8 செமஸ்டர் வரை மதிப்புக் கூட்டு கல்வியையும் அளிக்கிறோம்” என்றார்.

தேர்வுக்கு இன்னும் 60 நாட்கள்தானே உள்ளது என்ற மன நிலையில் இருந்து விடுபட்டு, இன்னும் 60 நாட்கள் இருக்கிறதே என்கின்ற மனோபாவத்தோடு செயல்பட்டால் தேர்வு இனிதாகும் என்கிற புதிய பார்வையை முன்வைத்தார் ஸ்ரீ வித்யா கல்வி மையத்தின் வேதியியல் துறை பேராசிரியர் ஃபரீத் அஸ்லம். “வேதியியல் வினாத்தாள் விஷமல்ல. எளிதானது. இனிமையானது. இதைத்தானே எதிர்பார்த்தாய் பாலகுமாரா என்ற நேர்மறை சிந்தனையுடன் வினாத்தாளைக் கவனியுங்கள். அது உங்கள் வசமாகிவிடும். பதில் ருசியாகிவிடும்” என வேதியியல் பாடத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படும் விதமாக அவர் பேசினார்.

படித்ததை விவாதிக்கலாம் வாங்க!

இயற்பியல் பாடம் குறித்த பயம் சற்று இருந்தால் அதை விலக்கி வையுங்கள் எனத் தோழமையோடு, ஆரம்பித்தார் ஸ்ரீ வித்யா கல்வி மையத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் திருமாறன். “உங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் வினாக்கள் இடம் பெற்றிருக்கும். குழப்பத்தைக் குழப்பமாகப் பார்க்காமல் அந்தக் கேள்வியை ஆழ்ந்து இருமுறை படித்தாலே அதிலிருந்து உங்களுக்கு விடை கிடைக்கும். அதனால்தான் புத்தகத்தைத் தெளிவாகப் படிக்க வேண்டும். ஒரே கேள்வியை வெவ்வேறு விதங்களில் கேட்பார்கள். விடை ஒன்று தான்” என்பதில் தொடங்கி இயற்பியல் பாடம் தொடர்பாக முக்கியக் குறிப்புகளை வழங்கினார்.

“உயிரியலில், தாவரவியல் பாடத்தில் புத்தகத்தில் படிக்கும் கேள்விகள்தான் அதிகம் இடம்பெறும். ஆனால் விலங்கியல் பாடத்தில் புத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் அல்லாமல் கொஞ்சம் பரவலாகக் கேட்கப்படும். ஆகையால் கூடுதல் கவனத்தோடு படியுங்கள்” என உயிரியியல் ஆசிரியர் குமரவேல் மாணவர்களிடம் கூறினார்.

கணிதம் என்பது மிகவும் எளிதானது. கணக்கு பாடத்தில் 10 பாடம் உள்ளன அதை இரண்டு பாகங்களாகப் பிரித்துத் திட்டமிட்டுப் படிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் நல்லா படிப்பேன் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே கணிதப் பேராசிரியர் மணிமாறனின் முக்கிய ஆலோசனையாக இருந்தது. வித்யா கல்வி மையத்தின் இயக்குனர் சுப்ரமணியன் மாணவர்களிடம் பொதுத் தேர்வு குறித்துப் பேசுகையில், “மாணவர்கள் தெளிவான மனநிலை, நிதானம், திட்டமிடுதல், படித்ததை விவாதிப்பது, கடினப் பயிற்சி, தைரியம், வீண் பயத்தைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

‘இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, விழுப்புரம், திண்டிவனம், முகையூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு தங்கள் ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். தேர்வெழுதும் உத்திகளையும், சூத்திரங்களையும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களின் துறை வல்லுநர்கள் விளக்கியபோது மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கவனத்துடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு மட்டுமின்றி தங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

உண்மையான ஊக்கம்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளி மாணவி மங்கையர்கரசி, “இதுபோன்ற நிகழ்ச்சி அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும். இங்குப் பேசிய கல்வியாளர்கள் கொடுத்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்கு உண்மையான ஊக்கத்தைத் தந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்த தமிழ் இந்துவுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இது போன்ற நிகழ்ச்சி கிராமப் புற மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். கல்வியாளர்கள் கூறிய கருத்துகளைக் கேட்டு மாணவர்கள் தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவது நிச்சயம் எனப் பில்லூரை சேர்ந்த அஜந்தா தனது மகள் அபிதாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சி அரங்கில் எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி சார்பில் மினி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், மாணவர்கள் தயாரித்த பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்பு மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பார்வையிட்டுப் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டறிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in