Published : 05 Apr 2017 10:10 AM
Last Updated : 05 Apr 2017 10:10 AM

அதிசயப் பனிப்பாறைகள்

மிகப் பெரிய, உறுதியான, கெட்டியான பனிக் கட்டியைத்தான் பனிப்பாறை (Glacier) என்று அழைக்கிறார்கள். இந்தக் கோடைக் காலத்தில் பனிப்பாறைகள் பற்றிய ஜில் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?

> பனிப்பாறை என்பது சில தினங்களிலோ, பல மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ உருவாகிவிடுவதில்லை. ஓர் இடத்தில் பனி விழுந்து, சேர்ந்து பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டு, கெட்டியாகிப் பனிக்கட்டியாக மாறி, நாளடைவில் பிரமாண்டப் பனிப் பாறையாக மாறும்.

> பூமியின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீதத்தைப் பனிப்பாறைகள் ஆக்கிரமித்துள்ளன.

l‘கிளேஸியர்’ என்பது பிரெஞ்சு வார்த்தை. இது லத்தீன் மூல வார்த்தையான ‘கிளேஸிஸ்’ என்பதிலிருந்து உருவானது. ‘கிளேஸிஸ்’ என்றால் ‘ஐஸ்’ என்று பொருள்.

> பூமியில் சுமார் ஒன்றரை கோடி சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவுக்குப் பனிப் பாறைகள் காணப்படுகின்றன. இவை சுமார் 50 நாடுகளில் பரவிக் கிடக்கின்றன.

> இன்று உலகில் காணப்படும் பெரும்பாலான பனிப்பாறைகள், கடைசி பனி யுகத்தின் மிச்சங்களே. இவற்றின் வயது 11 ஆயிரம் ஆண்டுகள் முதல் ஒன்றே முக்கால் கோடி ஆண்டுகள் வரை இருக்கலாம்.

> பனிப்பாறைகளைப் பார்க்கும்போது ஆடாமல் அசையாமல் இருப்பது போலத் தெரியும். ஆனால், அவை உண்மையில் மெதுவான நதி போல், லேசாக நகர்ந்து கொண்டிருக்கும். எனவே, அவற்றை ‘பனியாறுகள்’ என்றும் சொல்வார்கள்.

> சில பனியாறுகள், ஆண்டுக்குச் சில அடிகள் நகரும். சில பனியாறுகள், ஒரே நாளில் பல அடி தூரம்கூட நகர்ந்து விடும்.

> உலகின் மிகப் பெரிய பனிப்பாறை, அண்டார்டிக்காவின் லாம்பெர்ட் ஃபிஷ்ஷர் பனிப்பாறை.

> உலகின் இரண்டாவது பெரிய பனிப்பாறை, இமாலய- காரகோரம் பகுதியில் உள்ள இந்தியாவின் சியாச்சின் பனிப்பாறை.

> அலாஸ்கா, சிலி, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய இடங்களிலும் பனிப்பாறைகள் உள்ளன. ஆண்டிஸ், இமயமலை, ராக்கி மலை, காகசஸ், ஆல்ப்ஸ் ஆகிய மலைகளில் பனிப்பாறைகள் உள்ளன.

தகவல் திரட்டியவர்: எஸ். முருகநாதன்,
7-ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x