

தொழிற்கல்விக்கு இணையான படிப்புகளாக பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் கருதப்படுகின்றன. கணிதம், இயற்பியல் ஆசிரியர்களுக்காக பள்ளி, கல்லூரிகள் தவம் கிடக்கின்றன. படித்து முடித்ததும் நிச்சயமாக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடிய படிப்புகளாக பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் விளங்குகின்றன. இப்படிப்பைத் தேர்வு செய்பவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சென்னை தரமணியில் உள்ள சென்னை மேத்தமேட்டிக்கல் இன்ஸ்டிடியூட் மூலம் பி.எஸ்சி. கம்ப்யூடேஷன் மேத்தமேட்டிக்ஸ் படிக்கலாம். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. கடினமான தேர்வு என்று கருதப்பட்டாலும் கணிதத்தை நேசிப்பவர்களுக்கு இது வெகு சுலபமே. இங்கு கடும் போட்டி நிலவுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று புராஜக்ட் செய்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டாம். பி.எஸ்சி. கணிதம் முடித்துவிட்டு கம்ப்யூடேஷன் மேத்தமேட்டிக்ஸ், ஆபரேஷன் இன் ரிசர்ச், புள்ளியியல், அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் போன்ற எம்.எஸ்சி. மேற்படிப்புகளைப் படிக்கலாம். தவிர, எந்த மேற்படிப்பு படித்தால் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து திட்டமிட்டு படிக்க வேண்டும். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் மூலம் பெரும் நிறுவனங்களில் நிர்வாகத் துறையில் பிரகாசிக்கலாம்.
பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் முடித்தவர்கள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து பொறியாளர் ஆகலாம். இதற்கு ஆண்டுதோறும் ஒரு சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. இதன் மூலம், ‘பிளஸ் 2 முடித்ததும் தொழிற்கல்வியில் சேர முடியவில்லையே’ என ஏக்கப்படும் மாணவர்கள் பொறியாளராக முடியும்.
பி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளை படிப்பதன்மூலம் சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும். இவர்கள் ஆசிரியர் பணியில் சேரவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. தவிர, எம்.எஸ்சி. ஸ்பேஸ் சயின்ஸ், அட்மாஸ்பியர் சயின்ஸ், நியூக்ளியர் பிசிக்ஸ், மெடிஷனல் பிசிக்ஸ், எலக்ட்ரானிக்கல்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் போன்ற பட்ட மேற்படிப்புகளைப் படிப்பவர்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பிளஸ் 2 முடித்ததும் ஐ.ஐ.டி. கல்லூரியில் சேர முடியவில்லை என்று ஏக்கப்படுபவர்கள் பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் முடித்ததும், ஜே.ஏ.எம். (ஜாயின்ட் அட்மிஷன் எம்.எஸ்சி.) நுழைவுத் தேர்வு மூலம் பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம். பி.எஸ்சி. கணிதம், இயற்பியல் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை.