Last Updated : 18 Jun, 2017 12:02 PM

 

Published : 18 Jun 2017 12:02 PM
Last Updated : 18 Jun 2017 12:02 PM

முகங்கள்: பழங்குடியினரின் கல்வித் தாய்

கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாத பழங்குடி கிராமத்தில் பிறந்த, கல்வியறிவற்ற துளசி முண்டா, இருபதாயிரம் மாணவர்களுக்குக் கல்வித் தாயாக மாறியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கும் கியோன்ஜார் என்ற மலைக் கிராமத்தில் 1947-ம் ஆண்டு பிறந்தவர் துளசி முண்டா. கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத அந்தப் பகுதி மக்கள் தங்களுடைய குழந்தைகளைச் சுரங்க வேலைகளுக்கும் கால்நடைகளை மேய்ப்பதற்கும் அனுப்பி வருமானம் ஈட்டிவந்தனர்.

இந்தப் பின்னணியில் தன்னுடைய சிறுவயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருந்தவர் துளசி. பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் தன்னுடைய விதவைத் தாய்க்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். பன்னிரண்டாவது வயதில் அருகில் உள்ள செரண்டா கிராமத்தில் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார்.

அங்கிருந்து கொண்டு இரும்புச் சுரங்கங்களில் பாறைகளை வெட்டியெடுப்பது, கழிவுப் பொருட்களிலிருந்து இரும்பைப் பிரித்தெடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவந்தார். இதற்கு வாரக் கூலியாக இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது. இரும்புச் சுரங்கத்தில் வேலைக்குச் சென்றாலும் படிக்க வேண்டும் என்ற அவரது மன உறுதி துருப்பிடிக்கவில்லை.

கல்வியே ஆயுதம்


நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயமாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். பெண் கல்வியையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்தி 1961-ம் ஆண்டு பிரசாரத்தில் ஈடுபட்ட மாலதி சௌத்ரி, ரோமா தேவி, நிர்மலா தேஷ்பாண்டே ஆகியோரின் பேச்சு துளசி முண்டாவுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அதே காலத்தில் ஆச்சாரிய வினோபா பாவே பூமிதான இயக்கத்துக்காக ஒடிசா மாநிலத்துக்கு வந்தார்.

அவரைச் சந்தித்த துளசி முண்டா வினோபாவின் சீர்திருத்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டார். வறுமை, வேலையின்மை, மூடநம்பிக்கை போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கும் தன்னுடைய கிராம மக்களுக்குக் கல்விதான் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரே ஆயுதம் என்ற முடிவுக்கு வந்தார்.

மீண்டும் தன்னுடைய கிராமத்துக்குச் சென்று பழங்குடி மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தார். ஆனால், கிராம மக்களோ வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. இதை மாற்ற கிராமத் தலைவரிடம் முறையிட்டு, சுரங்கங்களில் வேலை செய்யும் குழந்தைகளை மாலை நேரத்தில் படிக்க அனுப்புமாறு கேட்டார். மாணவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

திண்ணைப் பள்ளி

வீட்டுத் திண்ணையிலேயே மாணவர்களுக்குப் பாடங்களைப் போதிக்க ஆரம்பித்தார். மாணவர்களுக்கான புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்குக் கிராமச் சந்தையில் காய்கறிகளை விற்றுப் பணம் ஈட்டினார். அவரது மாலைப் பள்ளியில் முதலில் முப்பது மாணவர்கள் படித்துவந்தனர். நாளடைவில் ஏராளமான மாணவர்கள் துளசி முண்டாவிடம் பாடம் கற்கத் தொடங்கினார்கள். அவர்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க அருகில் உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து ‘ஆதிவாசி விகாஸ் சமிதி’ என்ற பெயரில் பள்ளியை ஆரம்பித்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தனிநபராகத் தன்னுடைய முயற்சியால் இருபதாயிரம் மாணவர்கள் கற்க வழிவகை செய்துள்ளார் துளசி முண்டா.

தேடிவந்த விருது

தொய்வில்லாத இந்தப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும், ஒடிசா மாநில அரசின் சமூக சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றிருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை ‘Tulasi apa’ என்ற பெயரில் இயக்குநர் அமியா பட்நாயக் திரைப்படமாக எடுத்துள்ளார். துளசி முண்டாவின் கல்விக்கான இந்த நெடும்பயணம் இன்றும் தொடர்கிறது. தற்போது ‘ஆதிவாசி விகாஸ் சமிதி’ பள்ளியில் பத்தாம் வகுப்புவரை உள்ளது. அங்கு 500 மாணவர்கள் படித்துவருகிறார்கள். இதில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x