Published : 03 Mar 2017 10:42 AM
Last Updated : 03 Mar 2017 10:42 AM

ரொட்டி சுடும் ரோபோ

வீட்டுக்கு திடீரென்று விருந்தாளிகள் வந்துவிட்டார்களா? முன்பெல்லாம் உப்புமா செய்து அவர்களது வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வோம். இனிமேல் வீட்டுக்கு திடீரென்று பத்து பேர் என்ன, நூறு பேரைக்கூட விருந்துக்குக் கூப்பிடலாம். நிமிடத்துக்கு ஒரு சப்பாத்தி சுடச்சுடத் தட்டுக்கு வந்து சேர்ந்துவிடும்.

அனுதினமும் சப்பாத்தியை அடுப்பில் போட்டு அனலில் வேகும் கொடுமையிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று யோசித்தார் சிங்கப்பூரைச் சேர்ந்த மென்பொறியாளர் பிரனோதி நகர்கர். அவரது மனதில் பிறந்தது இயந்திர மனிதனைப் போல ஒவ்வொரு சப்பாத்தியாகப் பதம் பார்த்துச் சமைக்கும் ரோபா. அதன் பெயர் ‘Rotimatic’. வழக்கமாக ரோபோவுக்கு இருக்கும் கண், மூக்கு, காது இதற்கு இல்லை. கைகள் உண்டு. கம்ப்யூட்டர் மானிட்டரைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறது ரொட்டி சுடும் இந்த ரோபோ.

ஒவ்வொரு சப்பாத்தியாக…

கோதுமை மாவு, தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றை அதற்குரிய பெட்டிகளில் நிரப்பி இயந்திர மனிதனை முடுக்கிவிட்டால், அடுத்த ஐந்து நிமிடங்களில் தயாராகி, ‘சப்பாத்தி வேண்டுமா?’ என்று கேட்கும். ‘ஆமாம்’ என்பதற்கான பொத்தானை அழுத்தியவுடன், அதில் இருக்கும் மாவின் அளவைப் பொறுத்து நாள் முழுதும்கூட இடைவெளி விடாமல் சப்பாத்தியைச் சுட்டுத் தரும். மொத்தமாகப் பிசையாமல், ஒரு சப்பாத்திக்குத் தேவையான மாவு, தண்ணீர், சிறிது எண்ணெய் ஆகியவற்றை எடுத்து ஒரு உருண்டையைச் செய்யும். அதைத் தேய்த்துக் கல்லுக்கு அனுப்பிவிட்டு, அடுத்த உருண்டைக்கான மாவை உருட்ட ஆரம்பிக்கும். அதற்குள் முதலில் தேய்த்த சப்பாத்தி, சுட்ட சப்பாத்தியாக வெளியே வந்துவிடும்.

இதைக் கண்டுபிடித்தவர்கள் சிங்கப்பூரில் வாழும் இந்தியத் தம்பதி ரிஷி இஸ்ரானி, பிரனோதி நகர்கர். கணவர் இயந்திரப் பகுதியை வடிவமைக்க, அதற்குத் தேவையான பின்னணி மென்பொருளை மனைவி வடிவமைத்திருக்கிறார்.

நெருப்பு வேண்டாம்

“இது ஒரு கம்ப்யூட்டர் பிரிண்டரைப் போல வேலை செய்கிறது” என்கிறார் இதை முதன்முதலில் இயக்கிப் பார்த்த ரம்யா. மிக மென்மையாக இயக்க வேண்டிய பொத்தான்கள், மாவு தீர்ந்துவிட்டால் ‘மாவை நிரப்பவும்’ என்ற அறிவிப்பு போன்றவை அத்தகைய பிம்பத்தை உருவாக்குகின்றன.

மிருதுவான சப்பாத்தியைப் போடும் இந்த இயந்திரம் மிக மிகக் குறைவான எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறது. சப்பாத்தியின் தடிமன், எண்ணெயின் அளவு, சுடும் நிலை போன்றவற்றை அடுப்படியில் வேகாமல், சாப்பாட்டு மேசையில் அமர்ந்துகொண்டு ஒரு விசையைத் தட்டி மாற்ற முடியும்.

சுலபமாகக் கையாளும் வண்ணம் அமைந்துள்ள சப்பாத்தி ரோபோவைச் சுத்தப்படுத்துவதும் எளிது. விலை மட்டுமே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

இணைய வழி அப்டேட்

சரி. இதற்கும் இணையத்துக்கும் என்ன சம்பந்தம்? மக்களின் தேவைக்கேற்ப இந்த இயந்திர மனிதன் தன்னைத்தானே அப்டேட் செய்துகொள்ளும். அதற்கு வை ஃபை இணைப்பு மட்டுமே தேவை. ஏற்கனவே இந்த ரோபோவில் பதிந்துள்ள கோதுமை மாவில்லாமல், புதிய வகை மாவைப் பயன்படுத்த விரும்பினால், இந்த நிறுவனத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதும். அந்த மாவுக்கு ஏற்ப என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை உங்கள் ரோபோவுக்கான அடுத்த அப்டேட்டில் அவர்களே பதிவேற்றம் செய்துவிடுவார்கள். எதற்கும் அலைய வேண்டியதில்லை.

நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களை மென்பொருள் மூலம் இணையத்துடன் இணைத்துத் தகவல் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்யும் இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பெயர்தான் IoT எனப்படும் ‘Internet Of Things’.

ஐ.ஓ.டி. தொழில்நுட்பம்

வளர்ந்துவரும் இணைய உலகில், புதிதாக விரிவடைந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒன்று IoT. இதன் மூலமாகவே கைபேசி மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை உடனடியாக மடிக்கணினியில் பார்ப்பது சாத்தியமாகிறது.

2017-ல் அதிகமாகக் கொண்டாடப்படும் இந்தத் தொழில்நுட்பம் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவரலாம். ரோபோட்டிக்ஸ் துறையில் அதிகமாகக் கையாளப்படும் IoT, மற்ற துறைகளிலும் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இரண்டு இயந்திரங்கள் தம்மிடையே பேசும் மொழிதான் IoT. கிளவுட் தொழில்நுட்பம் மூலமாக ஏற்கெனவே சிறிதளவு IoT தொழில்நுட்பம் நம்மிடையே செயல்பட்டுவருகிறது.

பிடிக்கிறதோ இல்லையோ, புரிகிறதோ - தலையைச் சுற்ற வைக்கிறதோ, IoT நம்மிடையே வந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம். இணையதளப் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த முடியாத பிரச்சினை ஒன்றே, இதன் விரிவாக்கத்தை இப்போதைக்குத் தடை செய்கிறது. இதை மட்டும் வெற்றிகரமாகக் கடந்துவிட்டால் எங்கெங்கும் IoT-யின் பயன்பாடு அதிவேகமாக வளர்ந்து ‘மென்மேலும் இணைக்கப்பட்ட உலகம்’ (Inter-Connected World) விரிவடைவதைத் தடை செய்ய முடியாது.

கட்டுரையாளர், சிங்கப்பூர் எழுத்தாளர்
தொடர்புக்கு: kiruthikavirku@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x