Last Updated : 06 Dec, 2013 12:00 AM

 

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி
சொப்பன வாழ்வின் சூப்பர் மேன்

ஒரு காலத்தில் அசாத்தியமானது என்று கருதப்பட்ட கற்பனைகள் பின்னாட்களில் அறிவியல் துணையுடன் சாத்தியமாயின. பறவையைப் போல வானில் பறப்பது, நீருக்கு அடியிலேயே கப்பலை செலுத்துவது போன்ற பல கற்பனைகளை நிஜமாக்க மனிதனால் முடிந்தது. ஆனால், நிஜவாழ்வில் எந்த வித சிறப்புத்தன்மையும் இல்லாமல் ஒரு சாகச வீரனாக தன்னை உருவகித்துக்கொண்டு கற்பனை வாழ்க்கையில் ஜீவிக்கும் சாமானியர்கள் தனிவகை. வாழ்க்கையின் அழுத்தம் தாங்காமல் வேறொரு உலகில் நுழைந்து ஆசுவாசம் தேடும் மனிதனைப் பற்றிய கதை தான் ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’.

1939-இல் ஜேம்ஸ் தர்பர் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய இந்தக் கதையின் நாயகன் வால்டர் மிட்டி, நிஜ வாழ்வில் எதெற்கெடுத்தாலும் பயந்து நடுங்குபவன். யதார்த்த வாழ்வின் எளிய விஷயங்களைக் கூட அவனால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், தனது கற்பனை உலகில் அவன் சாகச வீரன். தன்னை ஒரு பைலட்டாகவும், டாக்டராகவும் பயங்கரக் கொலைகாரனாகவும் கருதிக்கொள்ளும் வால்டர், ஒரு கட்டத்தில் தனது பகல்கனவைக் கைவிடும் காலம் வருகிறது. நிஜ வாழ்விலேயே சாகசம் செய்ய ஒரு சந்தர்ப்பம் வாய்க்கிறது.

சாகசத்துக்கும் நகைச்சுவைக்கும் சம இடமளிக்கும் இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, இதேபெயரில் 1947-ல் ஒரு திரைப்படம் வெளியானது. டேனி கேய் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் நடித்த இப்படம் வெற்றி பெற்றாலும் கதையை எழுதிய ஜேம்ஸ் தர்பருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில், படத்துக்காக மூலக்கதை வெகுவாக மாற்றப்பட்டிருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சாமுவேல் கோல்டுவினின் மகன் கோல்டுவின் ஜூனியருக்கு, அந்தக் கதையை மீண்டும் தயாரிக்கும் எண்ணம் வந்தது. ஜிம் கேர்ரி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்று பல ஜாம்பவான்கள் இந்தப்படத்தில் பணிபுரியத் தயாராக இருந்தனர். பல்வேறு மாறுதல்களுக்குப் பின்னர், நடிகரும் இயக்குநருமான பென் ஸ்டில்லர் இந்தப்படத்தை இயக்கி, நாயகன் வால்டர் மிட்டியாகவும் நடித்துள்ளார்.

நகைச்சுவை கலந்த பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பென் ஸ்டில்லர். அவர் நடித்த ‘நைட் அட் தி மியூசியம்’ படமும் அதன் இரண்டாம் பாகமும் உலகெங்கும் உள்ள திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை. அவர் நடித்த ‘மீட் தி பேரன்ட்ஸ்’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. புதிய படத்தில் ‘லைஃப்’ இதழில் பணிபுரியும் வால்டர் மிட்டி, வழக்கம்போல சாகசப் பகல் கனவில் திளைப்பவன். இறுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பணி ஒன்று அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அதற்காக அவன் மேற்கொள்ளும் பயணம் கனவுலகில் அவனுக்கு விருப்பமான சாகசங்களை நிஜவுலகிலேயே அளிக்கிறது. ’டெட் மேன் வாக்கிங்’, ‘ஐயாம் சாம்’ போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஷான் பென் இந்தப் படத்தில் ஒரு முக்கியப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம், ஜனவரி 3-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x