

முதன்முதலில் ‘சிசிடிவி கேமரா’எனும் கண்காணிப்பு கேமரா இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், 1942-ல் ஜெர்மனியில் ராணுவ காரணங்களுக்காகப் பொருத்தப்பட்டது. அதற்கும் முன்பே, 1936-ல் சார்லி சாப்ளின் தீர்க்கதரிசனத்துடன் வெளியிட்ட ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் ஒரு விநோதமான சிசிடிவி கேமரா இருக்கும்; திரையுடன் கூடிய சிசிடிவி கேமரா அது. அதன் மூலம் தொழிலாளர்களை முதலாளி கண்காணிப்பது மட்டுமல்லாமல் சற்றே ஓய்வறையில் புகைப்பிடிக்கப் போகும் சாப்ளின் முன்னால் திரையில் தோன்றி, ‘போய் வேலையைப் பார்’ என்றும் அதட்டுவார். எதிர்கால அலுவலகங்கள் இப்படித்தான் இருக்கும் என்று அன்றே சாப்ளின் கண்டுணர்ந்திருப்பார்.
கழிப்பறை `ஆப்’
தற்போது சிறு கடைகளும் சிசிடிவி கேமராவைப் பொருத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில், ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸிங்கி நகரத்தில் உள்ள ‘ஃப்யூச்சரிஸ்’ என்ற நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. அதுதான் ‘கண்காணிப்பு ஆப்’. ஆண்கள் கழிப்பறையால் நிகழ்ந்த கண்டுபிடிப்பு இது.
ஆண்கள் பெருமளவில் பணிபுரியும் அந்த நிறுவனத்தில் கழிப்பறையைப் பயன்படுத்துவதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்குப் பெரும் சிக்கல் இருந்துவந்தது. அதைத் தீர்த்துவைப்பதற்காக இந்தச் செயலியை (app) கண்டுபிடித்தார்கள்.
உணவு இடைவேளையால் வேலை நேரம் வீணாகிறது என்பதால் சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ முதலாளி சாப்பாடு ஊட்டும் இயந்திரம் ஒன்றை வாங்குவது குறித்த பரிசோதனையில் ஈடுபடுவார். தொழிலாளரின் கை வேலை பார்த்துக்கொண்டே இருக்கும்; அந்த இயந்திரம் அவருக்கு உணவை ஊட்டும். சாப்ளின் நகைச்சுவைக்காக அப்படி எடுத்திருந்தாலும் அதையே மிஞ்சும் நடைமுறை நகைச்சுவையை நவீன அலுவலகங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் ‘கழிப்பறை ஆப்’.
அலுவலகத்தின் நிகழ்நேர வரைபடம் (Live map) அந்தச் செயலியில் இடம்பெற்றிருக்கும். அந்த வரைபடத்தில் தெரியும் கழிப்பறைகளும் குளியலறைகளும் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தால் யாரோ அவற்றுக்குள் இருக்கிறார்கள் என்றும் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தால் யாரும் இல்லை என்று அர்த்தம். அதைப் பார்த்துவிட்டு ஊழியர்கள் கழிப்பறை போவதா கொஞ்சம் ‘பொறுத்து’போவதா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.
கைபேசி, சிசிடிவி கேமரா போன்ற பல்வேறு சாதனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து இந்தச் செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். பெண்கள் கழிப்பிடத்துக்கும் இதுபோல் ஒரு செயலியை உருவாக்க நினைத்தபோது அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் நிறுத்திக்கொள்ளப்பட்டது.
வெப்பத்தைக் கொண்டு கண்காணிக்கும் வரைபடச் செயலி
சாகசத்துக்கு இடமில்லை!
இந்தச் செயலியை அலுவலகம் முழுவதற்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். பரந்து விரிந்த ஒரு அலுவலகத்தின் முதல் தளத்தில் இருக்கும் ஜான் என்பவர் 10-வது தளத்துக்கு இருக்கும் ஜார்ஜை சந்தித்துத் தனக்கு அவர் தர வேண்டிய கடனை வாங்க மேலே வருகிறார். ஜார்ஜ் அங்கே இல்லை. இரண்டாம் தளத்துக்குச் சென்றிருக்கிறார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட செயலியின் நிகழ்நேர வரைபடத்தின் மூலம் ஜார்ஜ் எங்கிருக்கிறார் என்பதை ஜானால் எளிதில் கண்டுபிடித்து அங்கே செல்ல முடியும்.
அலுவலகத்தின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நபரும் இந்த உள்-இணைய வலைக்குள் இணைக்கப்பட்டிருப்பார்கள். கண்காணிப்பு கேமராவின் மூலம் மேலதிகாரியோ முதலாளியோதான் கண்காணிக்க முடியும். இந்தப் புதிய செயலியால் எல்லோருமே எல்லோரையும் கண்காணிக்க முடியும். தொலைந்துபோதல், இடம் தெரியாமல் திரிதல், தானே தேடியடைதல் போன்ற சாகச உணர்வு தரும் அனுபவங்களுக்கு இடமில்லை!
இடப்பற்றாக்குறையின் காரணமாக அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த மேசை காலியாக இருக்கிறதோ அந்த மேசையை இந்தச் செயலின் மூலம் கண்டுபிடித்து அங்கே போய் உட்கார்ந்து வேலை செய்யலாம். வெளியில் திரிந்து பல வாடிக்கையாளர்களையும் சந்தித்துவிட்டு அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்காக இப்படி ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அந்தரங்க ஊடுருவலா?
அலுவலகத்தின் ஒரு இடத்தில் இருக்கும் வெப்பத்தை உணர்ந்து அதன் மூலமும் செயல்படக்கூடிய நிகழ்நேர வரைபடத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் வெப்பம் அதிகமானால் அந்த இடத்தின் வெப்பத்தைக் குறைக்கவும் வெப்பம் குறைவானால் அதிகப்படுத்தவும் இதனால் முடியும்.
இதன் மூலம் நேரம் மிச்சமாகிறது, உற்பத்தி பெருகுகிறது என்று அந்த நிறுவனம் ஏதேதோ தரவுகளை முன்வைத்தாலும், தனிநபர் அந்தரங்கத்தை ஊடுருவும் செயல் இது என்று எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது. இதற்கு அந்த நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது. இந்தச் செயலி வெளியுலக இணையத்தோடோ மேகக் கணினியோடோ இணைக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
எனினும், கைக்கடிகாரம் போல் கட்டிக்கொள்ளும் ‘ஃபிட்னெஸ் ட்ராக்கர்’, குளிர்பதனப் பெட்டி போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும், இணையத்துடன் தொடர்பில்லாதவை என்று நாம் நினைக்கும் சாதனங்கள்கூட நம்மைப் பற்றிய தரவுகளை இணையத்துக்குக் கசியவிடுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் வலுத்துவரும் நிலையில் அந்த நிறுவனத்தின் மறுப்பு ஏற்புடையதாக இல்லைதான்.
எதிர்கால அலுவலகங்கள் இப்படித்தான் இருக்கும்! மேலும் மேலும் ஊழியர்கள் கண்காணிக்கப்படுவார்கள், இணைக்கப்படுவார்கள், மேலும் மேலும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் அந்நியமாவார்கள்.
உறவாலும் உணர்வாலும் ஊழியர்களை இணைப்பதுதான் முதன்மையான தொழில்நுட்பமாக இருக்கும் என்பதை நிறுவனங்கள் உணரும்போதுதான் மனிதவளத்துடன் சேர்ந்து உற்பத்தியும் பொலிவு பெறும்.
- தகவல் மூலம்: ‘தி கார்டியன்’