Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

பொறியியல் படித்தவர்களும் மாற்று படிப்புக்கு செல்லலாம்

எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொறியியல் படிப்பு படித்தவர்கள், மேற்படிப்புகளால் அடையக் கூடிய பணி வாய்ப்பு குறித்து கடந்த நாட்களில் தெரிந்து கொண்டோம். பொறியியல் படித்தவர்கள், இத்துறையில் விருப்பமில்லாமல் இருப்பவர்கள் அல்லது வேறு துறைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், மாற்று படிப்புகளை படிப்பதன் மூலம் உயர் பதவியை அடைய முடியும்.

பெரிய நிறுவனங்களில் பலதுறை படிப்புகளில் கற்றுத் தேர்ந்து திறன் மிக்கவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தி வருகின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பொறியாளர்கள் படித்து முடித்து, வெளியே வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் நல்ல பணி வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதாகி வருகிறது. பொறியியல் படிப்பு படித்தவர்கள், அப்படிப்பு மூலமே சாதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பொறியியல் முடித்துவிட்டு மாற்று படிப்புகளில் கற்றுத் தேர்ந்தவர்களுக்கான பணி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஐடி நிறுவனங்களில் பிபிஓ எவ்வாறு ஆதிக்க சக்தியாக விளங்கி வருகிறதோ, அதே அளவிற்கு சட்டத் துறையிலும் எல்பிஓ (லீகல் பிராசசிங் அவுட்சோர்சிங்) பணிக்கான பணி வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொறியியல் படித்தவர்கள் மாற்று படிப்பு படிக்க விரும்பினால், மூன்றாண்டு சட்டப் படிப்பை எடுத்து படிக்கலாம். தென் மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இதுபோன்று மாற்று படிப்பு படிக்கலாமா என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஆனால், வட மாநிலங்களில் உள்ளவர்கள் எளிதில் தயங்காமல் மாற்று படிப்பை தேர்வு செய்து, நல்ல பணிக்கு சென்றுவிடுகின்றனர்.

பி.இ. முடித்தவர்கள் பி.எல். இன்டக்சுவல் பிராப்ரிட்டி ரைட்ஸ் படிப்பில் சேர விரும்பும் நிலையில், மற்ற மாணவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வை போன்று இவர்களும் தேர்ச்சி பெற்று, நல்ல கல்லூரியில் சேரலாம். பொறியியல் துறை சார்ந்த பெரிய நிறுவனங்கள் தொழில் நுணுக்கம் தெரிந்த சட்ட வல்லுநர்களுக்கான பணியிடங்களை வழங்க காத்திருக்கிறது. இவ்வாறு பொறியியல் முடித்து சட்டம் படித்தவர்களுக்கான பணி வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

பொறியியல் படித்து சட்டம் தவிர்த்து பொருளாதார படிப்பை தேர்வு செய்தால், அதற்கான பணி வாய்ப்பும் எளிதில் கிடைக்கிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பொறியியல் படித்து பொருளாதாரத்தை முடித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பை வழங்குகின்றனர். டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் எம்.ஏ. பொருளாதார மாணவர்களில் 40 பேரில், 17 பேர் பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள். இந்த மாணவர்களில் ஒருவர் கூட தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார துறையில் பொறியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி அளிப்பதால், வட மாநிலங்களில் உள்ளவர்கள் தயங்காமல், பொறியியல் முடித்ததும் எம்.ஏ. பொருளாதாரம் படிக்கின்றனர். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். பி.ஜி. புரோகிராம் இன் ஆபரேஷன் ரிசர்ச், பி.ஜி. புரோகிராம் இன் ஃபைனான்சியல் இன்ஜினீயரிங், சென்னையில் ஐசிஐசிஐ நிறுவனம் மூலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபைனான்ஸியல் அண்டு மேனேஜ்மென்ட் ரிசர்ச் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்து படிக்கலாம்.

CAT தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம் இதுபோன்ற படிப்புகளில் சேர்ந்து, நல்ல நிறுவனங்களில் உயர்ந்த பணிக்கு செல்ல முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x