

புத்தகங்களும், தாய்மொழியுமே ஒரு மனிதனை மேம்படுத்தும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவர் அவர். அதை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறார் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மருத்துவர் ஆ. முருகநாதன். தமிழக அரசின் 2015-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதை, இவருக்கு ஏப்ரல் 24-ம் தேதி தமிழக அரசு வழங்கியது.
தாய்மொழிக்கான அங்கீகாரம்
கால் நூற்றாண்டாகச் செயல்பட்டுவரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் மாணவர்கள் மத்தியில் தாய்மொழி தொடர்பான வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஆண்டுதோறும் 10-ம் வகுப்பிலும், பிளஸ் 2-விலும் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்குப் பரிசுகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. “பெற்றோர், பள்ளி மாணவ, மாணவியரை ஆண்டுதோறும் அழைத்துத் தமிழில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக விழா எடுக்கிறோம். ஆங்கிலத்தைக் கவுரவமாக நினைப்பவர்கள் மத்தியில் தாய்மொழிக்கான அங்கீகாரமாகப் பரிசுகள் வழங்கப்படுவதால் மாணவர்கள் பூரிப்பு அடைகிறார்கள்” என்கிறார் முருகநாதன்.
அரசு, தனியார் பள்ளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் இங்கு பரிசு வழங்கப்படுகிறது. மாணவர்கள் பலரும் மொழி உணர்வுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறார்கள் என முருகநாதன் நம்புகிறார். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘குறையொன்றும் இல்லை’ என்கிற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் திருப்பூரில் இவர் நடத்திவருகிறார்.
இது தவிரவும் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு நூல், கட்டுரை என 10 பிரிவுகளில் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை இச்சங்கம் வழங்கிவருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ் எனப் பல்வேறு பகுதிகளில் தமிழ் படைப்பாளிகள், திருப்பூர் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றுள்ளனர்.
மருத்துவத்துக்கான தமிழ்ச் சொற்கள்
ஒரு மருத்துவருக்குத் தமிழில் இத்தனை ஆர்வம் எப்படி வந்தது எனக் கேட்டதற்கு, “கோவை புனித மைக்கேல் பள்ளியில் படித்தபோது, தமிழ் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. அதற்குச் சுந்தராசனார், மருதுவாணன் போன்றவர்கள் மிக முக்கியக் காரணம். பள்ளி, கல்லூரி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்பேன். தாய்மொழிதான், என் தலைமைப் பண்பை வளர்த்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பல்வேறு இலக்கியப் பணிகள் செய்தோம். அதேபோல் மருத்துவத்தில் இருக்கும் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை உருவாக்கும் கல்லூரிக் குழுவிலும் உறுப்பினர் ஆனேன்.
மருத்துவரான பின்பும் மொழி சார்ந்து இயங்க வேண்டும் என முடிவெடுத்து 1992-ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினேன். கலை, இலக்கியம், நாடகம் என மொழியைக் கருவியாகக் கொண்டு பணியாற்றினோம். திலகவதி, சிற்பி பாலசுப்பிரமணியம், ஏ.ஆர். லட்சுமணன், நடிகர் சிவகுமார் எனப் பலரும் தமிழ்ச் சங்க நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நலிந்த கலைஞர்களை அழைத்து வந்து நாடகம் நடத்தினோம். பட்டிமன்றம், பேச்சுப் போட்டி எனத் தொடர்ந்து இயங்கினோம்” என்கிறார்
சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் புத்தகங்களும், கணினியும் நிறைந்த பெரிய நூலகம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தத் தமிழ் ஆர்வலர் மருத்துவரின் தற்போதைய கனவு.