Last Updated : 07 Mar, 2017 10:18 AM

 

Published : 07 Mar 2017 10:18 AM
Last Updated : 07 Mar 2017 10:18 AM

முடிவுரை எழுதப்படாத விண்மீன்!

அது 1987-ம் ஆண்டு. பிப்ரவரி 23-ம் தேதி. ஜப்பான், அமெரிக்காவின் ஒஹையோ, ரஷ்யா போன்றவற்றின் நிலத்தடி உணர்கருவிகளை (Sensors) நியூட்ரினோ என்றழைக்கப்படும் அணுத்துகள்கள் அன்று ஊடுருவிச் சென்றன. குலைவுறும் விண்மீன் ஒன்றின் மையப் பகுதியிலிருந்து பீறிட்டு வந்தவைதான் அந்த நியூட்ரினோ துகள்கள். பூமியிலிருந்து 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ‘பெரும் மெகலனிக் மேகத்திரள்’ (Large Magellanic Cloud) என்ற விண்மீன் மண்டலத்தை (Galaxy) சேர்ந்த விண்மீன் அது. (ஒளியாண்டு என்பது ஓர் ஆண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு, அதாவது 9,46,073,04,72,580.8 கிலோ மீட்டர்). ஒரு அழிவொன்றின் அறிவிப்பாக வந்து சேர்ந்தவை அந்தத் துகள்கள்.

தன்னைத் தானே உண்ணும்!

நியூட்ரினோ துகள்களைத் தொடர்ந்து, சில மணி நேரம் கழித்து ஒளிக்கதிர், வெப்பம், ஊடுகதிர் (X-rays), அதிர்வலைகள் (Shock waves), வாயு வளையங்கள், வாயு முண்டுகள், மின்காந்த நிறமாலையின் எல்லா வடிவிலான கதிரியக்கங்களும் ஒவ்வொன்றாகப் படையெடுக்கத் தொடங்கின. இயற்கையின் மாபெரும் பேரழிவுகளுள் ஒன்றும், தன்னைத் தானே விண்மீன் ஒன்று உண்ணும் நிகழ்வுமான, பெருவிண்மீன் வெடிப்பின் (Supernova) கண்காட்சிதான் இவை யாவுமே. (நமது சூரியனை விட பல மடங்கு பெரியதாக இருக்கும் விண்மீன் ஒன்று தனது ஆயுளின் முடிவில் வெடித்துச் சிதறும் நிகழ்வுதான் ‘பெருவிண்மீன் வெடிப்பு’).

எஸ்.என்.1987ஏ (SN1987A) என்று அந்தப் பெருவிண்மீன் வெடிப்புக்குப் பெயர் வைக்கப்பட்டது. மனிதர்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து கண்டறியப்பட்டவற்றுள் நமக்கு அருகில் நிகழ்ந்த பெருவிண்மீன் வெடிப்புகளுள் இதுவும் ஒன்று! இந்தப் பெருவிண்மீன் வெடிப்பு பற்றிய செய்தி கிடைத்ததும் வானியலாளர்களெல்லாம் சிலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள விண்ணோக்கங்களுக்கு (Observatory) விரைந்தார்கள். அங்கேதான் தலைக்கு நேர் மேலே உள்ள வானத்தில் அந்த விண்மீனின் இறப்பு நிகழ்வு தெரிந்துகொண்டிருந்தது.

அப்போதிலிருந்து, அண்டவெளியில் உள்ள தொலைநோக்கிகளும் அண்டார்க்டிகா உள்ளிட்ட அனைத்து கண்டங்களிலும் உள்ள தொலைநோக்கிகளும் அந்தப் பெருவிண்மீன் வெடிப்பைத் தொடர்ந்து நோக்கியபடி ஆய்வுசெய்து வருகின்றன. அந்த விண்மீன் மரணத்தைக் கண்டறிந்த முப்பதாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஹப்பிள் அண்டவெளி தொலைநோக்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு, இன்னமும் அந்த அண்டவெளிக் கண்காட்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

பேரழிவுக்கு முன்பு…

“முத்துமாலையைப் போலத் தோன்றும் வட்டமான அந்த ஒளிவளையத்தின் மையத்தில் அக்கக்காக நைந்துபோன விண்மீன் ஒன்று உள்ளது,” என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராபர்ட் கிர்ஷ்னர். இந்தப் பெருவிண்மீன் வெடிப்பை முப்பது ஆண்டுகளாக ஆய்வுசெய்துவருபவர் இவர்.

தன் உச்சபட்ச தருணத்தில் எஸ்.என்.1987ஏ, பத்து கோடி சூரியன்களை விட அதிக ஆற்றலை அது வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. வெறுங்கண்ணாலும் அப்போது பார்க்க முடிந்தது. தற்போது முற்றிலும் மறைவுற்ற நீலநிற ராட்சச விண்மீன் ஒன்றுதான் பெருவிண்மீன் வெடிப்புக்குள்ளான விண்மீன் என்பதை வானியலாளர்கள் கண்டறிந்தார்கள். இறுதிப் பேரழிவுக்குப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த விண்மீன் சிதைவுற ஆரம்பித்தது எப்படி என்பதைத் தங்கள் ஆய்வுகளின் முடிவில் வானியலாளர்களால் ஒவ்வொரு கட்டமாகச் சித்தரிக்க முடிந்தது.

அந்தப் பெருவிண்மீன் வெடிப்பின்போது வெளிப்பட்ட பெரும்பான்மையான ஒளிக்குக் காரணமே கதிரியக்கத் தன்மை கொண்ட கோபால்ட் தனிமத்தின் சிதைவுதான் என்பதைத் தரவுகள் உறுதிப்படுத்தின. அந்த விண்மீன் மிகக் கடுவேகத்தில் சுருங்க ஆரம்பித்து, அதன்பின் அதிவெப்பநிலையில் அணுக்கரு வினை நிகழ்ந்தது. அந்த வினையின்போது உள்நோக்கிக் குலைவுற்ற அந்த விண்மீன் மோதுண்டு மீண்டபோது உருவானதுதான் அந்த கோபால்ட் தனிமம் யாவும்.

கருந்துளையாக ஆகலாம்!

இதில் ஒரு புதிரை இன்னும் விடுவிக்க முடியவில்லை. நியூட்டிரினோக்கள் உமிழப்படுகின்றன என்றால் அழிவுக்குள்ளான விண்மீன், ஒரு நியூட்ரான் விண்மீனாக (Neutron star) குலைவுறுகிறது என்று அர்த்தம். மிகுந்த அடர்த்தியையும் சுமார் 30 கி.மீ. விட்டத்தையும் கொண்ட கோளம்தான் நியூட்ரான் விண்மீன். கருந்துளை ஆக முடியாமல் போன விண்மீன்தான் நியூட்ரான் விண்மீன். அதன் காந்தப் புலமானது கலங்கரைவிளக்கத்தின் ஒளியைப் போல அண்டவெளியைப் துடைப்பதுபோல் சுழன்றுகொண்டிருக்கும். ஆனால், அதுபோன்ற நியூட்ரான் விண்மீன் ஏதும் இந்தப் பெருவிண்மீன் வெடிப்பின் மையத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை.

“நாங்கள் எவ்வளவோ கூர்மையாகப் பார்த்துவிட்டோம். ஆனால், அதன் மையத்தில் சிறு புள்ளி ஏதும் தெரியவில்லை,” என்கிறார் கிர்ஷ்னர். ஒருவேளை, விண்மீன் தூசியால் அது மறைக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஒரு கருந்துளையாக அந்த விண்மீன் மாறிக்கொண்டிருக்கலாம். ஆக, அந்த விண்மீனின் வரலாற்றில் முடிவுரை என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.

“நைந்துபோன ஒரு விண்மீனை நேரடியாக உற்றுநோக்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அந்த விண்மீன் எப்படி வெடிப்புறுகிறது என்பதையும், அப்படி வெடிக்கும்போது என்னென்ன தனிமங்களை அது உருவாக்குகிறது என்பதையும் நாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்பதை சோதித்துப் பார்ப்பதுதான் இதில் மிகவும் சுவாரசியமான விஷயம். கடைசியில் பார்த்தால், நீங்களும் நானும் இந்த பூமியும் எல்லாமே 500 கோடியாண்டு வயதுடைய பெருவிண்மீன் வெடிப்பின் குப்பையிலிருந்து உருவானவர்கள்தானே” என்கிறார் கிர்ஷ்னர்.

- டெனிஸ் ஓவர்பை
அறிவியல் எழுத்தாளர்.
நன்றி: ‘நியூயார்க் டைம்ஸ்’
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x