Published : 08 Aug 2016 10:49 AM
Last Updated : 08 Aug 2016 10:49 AM

போலந்து நிறுவனத்துடன் கூட்டு சேர்கிறது ஜேபிஎம்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இப்போது உள்ள ஒரே மாற்று வழி பேட்டரி வாகனங்களைத் தயாரிப்பது. பொது போக்குவரத்துக்குப் பயன்படும் பேட்டரி பஸ் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது ஜேபிஎம் ஆட்டோ. இந்நிறுவனம் தற்போது ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரித்து வருகிறது. பேட்டரி பஸ் தயாரிப்புக்காக ரூ.300 கோடியை முதலீடு செய்வதோடு போலந்தைச் சேர்ந்த சோலாரிஸ் பஸ் மற்றும் கோச் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பேட்டரி பஸ் வடிவமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் பேட்டரி பஸ் தயாராகிவிடும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எகோலைஃப் என்ற பெயரில் இந்நிறுவனம் 3 முதல் 4 மாடல்களில் பஸ்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 2017-ம் ஆண்டு ஏப்ரலில் பஸ்கள் தயாராகிவிடும் என நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் ஆர்யா தெரிவித்துள்ளார்.

பேட்டரி பஸ் உருவாக்கத்துக்குத் தேவையான நிபுணத்துவத்தை சோலாரிஸ் நிறுவனம் அளிக்கும். ஜேபிஎம் நிறுவனம் வடிவமைப்பு மற்றும் பஸ் உற்பத்தி சார்ந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோசி பகுதியில் உள்ள ஆலையில் இந்த ஆண்டு இறுதியில் பஸ் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பஸ்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 13-வது சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எகோலைஃப் பஸ்கள் லித்தியம் பேட்டரிகளை உள்ளடக்கியது. இது விரைவாக சார்ஜ் ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் வரை ஓடும். இதனால் இது மாநகர போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த பஸ்ஸின் விலை ரூ.3 கோடி இருக்கும் என தெரிகிறது. ஆனால் டீசலுக்கு செலவிடும் எரிபொருள் செலவு முற்றிலுமாகக் கிடையாது.

வழக்கமான டீசலில் இயங்கும் பஸ்களில் 5 முதல் 7 ஆண்டுகளில் லாபம் கிடைக்கும் என்றால் இந்த பஸ்ஸில் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் லாபத்தை ஈட்டிவிடலாம் என்று ஆர்யா தெரிவித்தார்.

10 ஆண்டுகள் இந்த பஸ் செயல்படுவதாக இருந்தால் இதன் மூலம் 1,150 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படுவதோடு 4.20 லட்சம் லிட்டர் டீசல் செலவிடுவது தவிர்க்கப்படும் என ஜேபிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலந்தைச் சேர்ந்த சோலாரிஸ் பஸ் அண்ட் கோச் நிறுவனம் ஒரு குடும்ப நிறுவனமாகும். ஐரோப்பிய நாடுகள் பலவும் பயன்படுத்தும் பஸ்களை இந்நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. தாழ்தள டிராம்களைத் தயாரித்து அளிக்கிறது. 1996-ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கிய இந்நிறுவனம் இதுவரை 29 நாடுகளுக்கு 12 ஆயிரம் பஸ்களை அளித்துள்ளது. போலந்தில் மட்டுமின்றி ஜெர்மனியிலும் இந்நிறுவனத் தயாரிப்பு பஸ்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

1,200 கோடி டாலர் மதிப்பிலான ஜேபிஎம் குழுமம் ஆட்டோமோடிவ் இன்ஜினீயரிங், டிசைன் சர்வீசஸ் மற்றும் மரபு சாரா எரிசக்தி, கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 18 உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. அசோக் லேலண்ட், பஜாஜ் ஆட்டோ, பியட், ஃபோர்டு, ஜெனரல் மோட் டார்ஸ், ஹோண்டா, ஹீரோ, ஜேசிபி, மஹிந்திரா, மாருதி சுஸுகி, ரெனால்ட், நிசான், டாடா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரித்து வந்த ஜேபிஎம் நிறுவனம் தற்போது சூழல் காப்பிற்காக பஸ் தயாரிப்பில் ஈடுபட உள்ளது வரவேற்கத் தகுந்த மாற்றமே.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x