Last Updated : 27 Mar, 2017 10:31 AM

 

Published : 27 Mar 2017 10:31 AM
Last Updated : 27 Mar 2017 10:31 AM

குறையும் பங்களிப்பு, சரியும் பொருளாதாரம்!

உலக மகளிர் தினம் சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடி முடிந்து விட்டது. பெண்களுக்கான உரிமைகள், சுதந்திரம், கல்வி ஆகியவை குறித்து பலதரப்பிலும் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது உண்மைதான். ஆனாலும் அவர்களுக் கான முழு உரிமை இன்னும் கிடைக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பொருளாதார உரிமை, பொருளா தார அதிகாரம். பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் கிடைக்கும் போதுதான் அவர்களுக் கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் எளிதாகப் பெறமுடியும். ஆனால் நம் நாட்டில் பெண்களுக்கான பொருளாதார அதிகாரம் வளர்ச்சியடையவில்லை. சமீபத்தில் வந்துள்ள புள்ளிவிவரங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.

1995-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை உள்ள புள்ளிவிவரத்தின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 375 டாலரில் இருந்து 1,562 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் பெண் ஊழியர்களின் பங்களிப்பு 37 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய சாம்பிள் சர்வே சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும் 1987-ம் ஆண்டு கிராமப்புறங்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு 87 சதவீதமாக இருந்தது. இது பின்பு 2011-ம் ஆண்டு 44 சதவீதமாக குறைந்தது.

தற்போது கிராமப்புறங்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக குறைந்திருக்கிறது. 1995-ம் ஆண்டுகளில் அதிகரித்திருந்த பெண் ஊழியர்களின் பங்களிப்பு தற்போது குறைந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1995-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பெண் கல்வி அதிகரித்திருக்கிறது. ஆனால் பெண் ஊழியர்களின் பங்களிப்பு குறைந்திருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு புறம் அதிகரித்து கொண்டே இருந்தாலும் அது சரிசமமான வளர்ச்சியா என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்கக்கூடிய இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு மிக அவசியம்.

உழைக்கும் வர்க்கத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவதற்குக் காரணம் பெண்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பது மட்டுமல்ல. இதைத்தவிர பல்வேறு காரணங்கள் இருக்கிறது. 2011-ம் ஆண்டு தேதிய சாம்பிள் சர்வே ஆய்வின் படி நான்கில் மூன்று பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதே முழுநேர பணியாக இருக்கிறது. இந்த பணிகளை அவர்கள் விரும்புகிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை கிராமப்புறங்களில் படித்த பெண்களிடையே அதிகமாக உள்ளது.

இந்த நிலைமைக்கு அரசை மட்டும் குற்றம் சுமத்தி விட முடியாது. மத்திய அரசும் மாநில அரசுகளும் மிகப் பெரிய தொகையை பெண் கல்விக்கு செலவிட்டு வருகின்றன. பெண்களின் கல்வியறிவு கணிசமாக உயர்ந்து கொண்டும் வருகிறது. ஆனால் கல்வியறிவு பெற்ற பெண்கள் வேலைக்குச் செல்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. மற்ற நாடுகளில் உதாரணமாக வங்கதேசம் போன்ற முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடுகளில் கல்வியறிவு பெற்ற பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர். ஆனால் ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவாக உள்ளது.

ஒரு முன்னணி ஆராய்ச்சி நிறுவனம் ஏன் பெண்கள் வேலைக்குச் செல்ல தயங்குகிறார்கள் என்று ஆய்வு செய்தபோது, பெண்களின் மனநிலையிலேயே இன்னும் மாற்றம் வரவில்லை. பெண்களின் பெற்றோர், கணவர், மாமனார் ஆகியோர் பெரும்பாலும் பெண்களின் மனநிலையில் பெரும் தாக்கம் ஏற்படுத்திவருகின்றனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம் கடைக்கு மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட வீட்டில் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக 2011-ம் ஆண்டு மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் வேலையை திடீரென்று விடுவதற்கு அந்த பெண்ணுடைய ஆண் சொந்தங்கள் முக்கிய காரணமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஊதிய பாகுபாடு

ஆண் - பெண் ஊதிய பாகுபாடு பெண்கள் வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டுள்ள ஊதிய விகிதம் தொடர்பான அறிக்கையை சுட்டிக் காட்டி கடந்த ஜனவரி மாதம் ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பாலின ஊதிய விகித ஏற்றத் தாழ்வு மிக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒரே பணியை நிறைவேற்றும் பெண்களுக்கு ஆண்களைவிட 30 சதவீதம் குறைவாக ஊதியம் அளிக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்தியாவில் 60 சதவீத பெண்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். 15 சதவீதம் பேர்தான் அதிக ஊதியம் பெறுகின்றனர். இதனால் ஊதிய விகிதத்தில் பாலின இடைவெளி இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கை கூறியிருந்தது.

இந்தியாவில் உள்ள 40 கோடி பெண்களில் 40 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த பணிகளை கிராமப் பகுதிகளில் மேற்கொள்கின்றனர். ஆனால் இவர்களுக்கு விவசாயிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கென்று சொந்த விவசாய நிலம் கிடையாது. அரசு அளிக்கும் உதவிகள் மிகவும் அரிதாகவே பெண்களைச் சென்றடைகிறது. இதுபோன்ற சமூக காரணங்கள் பெண்கள் வேலையில் ஈடுபடுவதை குறைக்கிறது. இதை சமூகம்தான் களைய வேண்டும்.

மத்திய அரசின் கொள்கைகள்

மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் மூலமே பெண் ஊழியர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த முடியும். தற்போது மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அதிகபட்ச பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த திட்டம் பெண் ஊழியர்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறது. ஆனால் இதுவரையில் இந்த பணிக்கான ஊதியத்தை குடும்பத் தலைவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. இதை மாற்றி பெண்களுக்கு தனியான வங்கி கணக்கை தொடங்கி அந்தக் கணக்கில் ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் நிதி பற்றிய விவரங்களையும் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச பெண் ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற நடைமுறைகளை கொண்டுவர வேண்டும்.

ஆசியாவின் நிலைமை

தெற்கு ஆசியாவை பொறுத்தவரை ஆண் ஊழியர்களின் பங்களிப்பு தொடர்ந்து 80 சதவீதமாக உள்ளது. பெண் ஊழியர்களின் பங்களிப்பு ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. பாகிஸ்தானில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு இந்தியாவை விட 25 சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் சர்வதேச சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் என்னென்ன கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன் என்பதை தெரிந்து கொண்டு, இந்தியாவில் பெண் ஊழியர்களின் பங்களிப்பை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம் என்பதை அறிந்து செயல்படுத்த வேண்டும்.

பெண்களை போற்றும் இந்தியாவில், அவர்களுக்குரிய அங்கீகாரத்தை அளிக்க மறுப்பதால் பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை புறக்கணிக்கிறோம் என்பதை உணர வேண்டும். இல்லையெனில் பாலின பேதம் மட்டுமின்றி ஊழியர்கள் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதையும் தடுக்க முடியாது.

- devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x