வேலைக்கு உத்தரவாதம் தரும் வேளாண் படிப்புகள்

வேலைக்கு உத்தரவாதம் தரும் வேளாண் படிப்புகள்
Updated on
1 min read

மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக வேளாண்மை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 சதவீத விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கம், விளைநிலம் பற்றாகுறை போன்ற காரணங்களால் விளைபொருட்களின் தேவை அதிகரித்தே வருகிறது. இதனால், வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது.

தமிழகத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 4, மதுரையில் 2, திருச்சியில் 3, கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையத்தில் தலா ஒன்று என மொத்தம் 12 வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர, தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் 4 உள்ளன. வேளாண்மை பட்டப் படிப்பில் பி.எஸ்சி.யில் 6, பி.டெக்.கில் 7 பாடப் பிரிவுகள் என 13 பாடப் பிரிவுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே விண்ணப்பம்தான். கவுன்சலிங் மூலம் தகுதியான பாடப் பிரிவு கிடைக்கும்.

பி.எஸ்சி. தேர்வு செய்பவர்கள் பிளஸ் 2-வில் உயிரியலும், பி.டெக். தேர்வு செய்பவர்கள் கணிதம், கம்ப்யூட்டர் சயின்சும் படித்திருக்க வேண்டும். வேளாண்மைப் பாடப் பிரிவுகளைப் பொருத்தவரை பி.எஸ்சி. வேளாண்மைக்கு அரசுக் கல்லூரிகளில் 420 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 229 இடங்களும் உள்ளன. இதர வேளாண்மைப் பாடப் பிரிவுகளுக்கு அரசு, தனியார் கல்லூரிகளில் 615 இடங்கள் உள்ளன. குறைந்த இடங்கள் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது. அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் இத்துறையில் கொட்டிக் கிடக்கின்றன. வேளாண்மை படிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்களைக் கொண்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கட்-ஆஃப் வருகிறது. எனவே, இந்த நான்கு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியம். நடப்பாண்டு வேளாண்மை பட்டப் படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஓ.சி.க்கு 192.5, பி.சி.க்கு 186.5, எம்.பி.சி.க்கு 187.25, எஸ்.சி.க்கு - 175.50 என இருந்தன.

மண் வளம், விதை உற்பத்தி, விவசாய விளைபொருட்கள் பெருக்கம், விளைநிலங்களை மேம்படுத்துதல் போன்ற பாடங்கள் இதில் கற்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வங்கியிலும் வேளாண்மை அதிகாரிப் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நன்கு ஜொலித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேறுகிறார்கள். எனவே, வேளாண்மை பட்டப் படிப்பு சிறந்த எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in