

ஆங்கில வருடம் தன் கணக்கை ஜனவரியில் தொடங்குகிறது. ஆனால், கல்வியாண்டு தன் கணக்கை ஜூனில்தான் தொடங்குகிறது. பள்ளி, கல்லூரியைச் சார்ந்தவர்களைப் பொறுத்தவரை ஆண்டு என்பது ஜூனில் தொடங்கி ஏப்ரலில் முடிகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது ன்ற சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் பல ஆலோசனைக் கருத்தரங்குகள், வழிகாட்டும் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதை ஒட்டித்தான் கல்லூரிகளின் தரப் பட்டியலும் வெளியிடப்படும். சமீபத்தில்தான் என்.ஐ.ஆர்.எஃப். ஆய்வு நிறுவனம் இந்திய அளவிலான சிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டது. அதேபோல் உலக அளவில் சிறந்த கல்லூரிகளின் பட்டியலை இப்போது இங்கிலாந்தைச் சேர்ந்த குவாக்கரலி சைமண்ட்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் ஆசியா
குவாக்கரல்லி சைமண்ட்ஸ் 2004 முதல் இந்த ஆய்வில் ஈடுபட்டுவருகிறது. இம்முறை இந்நிறுவனம் உலகம் முழுவதும் 26 ஆயிரம் கல்வி நிறுவனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. ஆய்வுப் பண்பு, பயிற்றுவிக்கும் முறை, ஆசிரியர்-மாணவர் விகிதம், உலகத் தரம் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்டேன்ஃபோர்டு (98.7), ஹார்டுவர்டு (98.3) ஆகிய இரு பல்கலைக்கழகங்களும் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 2016-ல் 98.6 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தது. இப்போது 97.2 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகிய இங்கிலாந்தைச் சேர்ந்த கல்லூரிகளும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்பக் கல்லூரியும் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கின்றன. இவை அல்லாது முதல் பத்து இடங்களுள் 5 இடங்களை அமெரிக்கக் கல்லூரிகள் கைப்பற்றியுள்ளன.
சிங்கப்பூர் தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பவியல் கல்லூரி ஆகிய இரு ஆசியக் கல்லூரிகள் தவிர அமெரிக்க, ஐரோப்பியக் கல்லூரிகள்தான் முதல் 20 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த இரு ஆசியக் கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக சீனாவைச் சேர்ந்த சிங்குவா பல்கலைக்கழகம் 24-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய இரு ஹாங்காங் கல்லூரிகளும் முறையே 27, 36 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ பல்கலைக்கழகம், கியோட்டோ பல்கலைக்கழகம் இரண்டும் முறையே 34, 37 இடத்தைப் பிடித்துள்ளன. முதல் 100 கல்லூரிகள் பட்டியலில் சென்ற ஆண்டைவிட இந்த முறை ஆசியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 12 சீனக் கல்லூரிகள் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. ஜப்பான், தென் கொரியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த கல்லூரிகள் தலா 5 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த எந்தக் கல்லூரியும் இல்லை என்பது கவனிக்கவேண்டியது. 38 சீனக் கல்லூரிகள் 500 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.
இந்தியக் கல்வி நிறுவனங்களின் இடம் என்ன?
இந்தப் பட்டியலில் டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி 50.7 புள்ளிகளுடன் 185-வது இடத்திலிருந்து 172-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்தபடியாக மும்பைத் தொழில்நுட்பக் கல்லூரி 49.7 புள்ளிகளுடன் 219-வது இடத்திலிருந்து 179-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. என்.ஐ.ஆர்.எஃப். ஆய்வில் முதலிடம் பிடித்த பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் இந்த ஆய்வில் 152-வது இடத்திலிருந்து 190-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.
ஆனால், கற்றுக் கொடுக்கும் தகுதியில் நற்சான்றில் 100க்கு 100 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த ஆய்வு பட்டியலிட்டுள்ள 959 கல்லூரிகளில் 6 கல்லூரிகள் மட்டுமே இதில் 100 புள்ளிகள் பெற்றுள்ளன. என்.ஐ.ஆர்.எஃப். ஆய்வில் பொறியியல் கல்லூரிகள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி இந்த ஆய்வில் 249-வது இடத்திலிருந்து 264-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இவை அல்லாது கான்பூர், கோரக்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகள் சென்ற ஆண்டைக் காட்டிலும் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், ரூர்கி, குவாஹாட்டி ஆகிய நகரங்களைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகள் பின்தங்கியுள்ளன.
இவை அல்லாது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், பிர்லா அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஆனால், பெரும்பாலான இந்தியாவின் முன்னணிக் கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் சென்ற ஆண்டைக் காட்டிலும் பின்தங்கியுள்ளன. இந்த ஆய்வு முடிவு, இந்தியக் கல்வி நிறுவனங்கள் மற்ற உலகக் கல்வி நிறுவனங்கள் போல் தங்களைத் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.